Kallakurichi: 'விஷ சாராயம் அருந்திய விவகாரத்தில் இன்னும் 140 பேர் சிகிச்சை’: கள்ளக்குறிச்சி புதிய மாவட்ட ஆட்சியர் தகவல்
Kallakurichi: விஷ சாராயம் அருந்திய விவகாரத்தில் இன்னும் 140 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என கள்ளக்குறிச்சி புதிய மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தகவல் தெரிவித்துள்ளார்.
Kallakurichi: விஷ சாராயம் அருந்திய விவகாரத்தில் இன்னும் 140 பேர் பல்வேறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர் என கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய மரணங்கள் அதிகரிப்பு:
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் ஜூன் 19ஆம் தேதி, ஒரு துக்க வீட்டில் விஷத்தன்மை மிக்க கள்ளச்சாராயத்தை வாங்கி குடித்த பலருக்கு நள்ளிரவில் இருந்து கண்ணெரிச்சல், வயிற்று வலி, தலைவலி, உள்ளிட்ட பல உடல் உபாதைகள் ஏற்பட்டன. இரு தினங்களாக ஒவ்வொருவராக மருத்துவமனைக்கு வரத்தொடங்கினர்.
நேரம் செல்ல செல்ல தொடர்ச்சியாக வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டனர். அடுத்தடுத்து ஒவ்வொருவராக சிகிச்சை பலனின்றி உயிரிழக்க தொடங்கினார். தற்போது வரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 55 ஆக உள்ளது.
மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மட்டும் மூன்று பேர் உயிரிழந்த நிலையில் பலர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இவ்விவகாரத்தில் கைதான கன்னுக்குட்டி என்ற கோவிந்தராஜ், அவரின் மனைவி விஜயா, சகோதரர் தாமோதரன் மற்றும் சின்னதுரை ஆகியோருக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல் விடுக்கப்பட்டு, கடலூர் மத்திய சிறையில் அடைக்க மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நிதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக மட்டும் கடந்த மூன்று நாட்களில் 173 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. மேலும் இவ்விவாகரத்தில் சாராய விற்பனையாளர்கள் எனக் கருதப்படும் ராமர், சின்னதுரை, ஜோசப் ராஜா ஆகியோர் மீது கச்சிராப்பாளையம் காவல் நிலையத்தில் கொலை வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய ஆட்சித் தலைவர் பேட்டி:
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரசாந்த் செய்தியாளர்களிடம் பேசும்போது, ‘’கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷ சாராயம் சாப்பிட்ட 193 நபர்கள் இதுவரைக்கும் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வந்திருக்காங்க. அவர்களில் 140 பேர் கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஜிப்மர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, சேலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சிகிச்சைப் பெற்று வருகிறார்கள். எல்லோருக்குமே முதல் நாளில் இருந்து முறையான சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
56 மருத்துவ வல்லுநர்கள் இங்கு அழைத்துவரப்பட்டு, கள்ளக்குறிச்சியில் இருக்கும் மருத்துவமனையில் இருக்கும் மருத்துவர்களுடனும் செவிலியர்களுடனும் முழுநேரமாகப் பணியாற்றி வருகின்றனர்.
10 தடயவியல் அறுவை சிகிச்சை மருத்துவர்களும் கள்ளக்குறிச்சிக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
எல்லா நோயாளிகளும் 24 மணிநேரமும் கண்காணிக்கப்படுகிறார்கள். மேலும் வரவழைக்கப்பட்ட மருத்துவ வல்லுநர்களும், இந்த நோயாளிகளை 24 மணிநேரமும் கண்காணித்து வருகிறார்கள். மிகவும் உடல்நலம் குன்றி வந்து அனுமதிக்கப்பட்ட 5 பேர், சரியாகிவிட்டாங்க. அதாவது, அவர்களுக்கு சுவாசப் பிரச்னை சரியாகிவிட்டது. இது கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் மட்டும். அதுமட்டும் இல்லாமல், சேலத்திலும் விழுப்புரத்திலும் புதுச்சேரி ஜிப்மரிலும் நிறைய பேர் சிகிச்சையில் முன்னேற்றம் அடைந்து குணம் ஆகிறார்கள்.
இப்போது வரைக்கும் 53 நபர்கள் உயிரிழந்துள்ளனர். 53 நபர்களில் 39 பேரின் உடல்களைப் பெற்று, அவரது உறவினர்கள் நல்லடக்கம் செய்துள்ளனர்.
உத்தரப்பிரதேசத்தைச் சார்ந்த ஒருவர் உயிரிழந்திருக்கிறார். அவரது உறவினர்களிடம் தகவல் சொல்லியாயிற்று. அவர்கள் வந்துகொண்டு இருக்கிறார்கள். இன்று மாலைக்குள் அவர்கள் இங்கு வந்து சேர்ந்துவிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது'' என்றார்.
டாபிக்ஸ்