Kallakurichi : கள்ளக்குறிச்சி மெத்தனால் கலந்த சாராயத்தால் உயிரிழப்பு - உணர்த்தும் பாடம் என்ன?
Kallakuruchi : கள்ளக்குறிச்சி மெத்தனால் கலந்த சாராயத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் உணர்த்தும் பாடம் என்ன?
2023ம் ஆண்டு விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில், மே மாதம் 22 பேர் மெத்தனால் கலந்த சாராயத்தால் உயிரிழந்தபோது, இதுபோன்ற சம்பவங்கள் நிகழாத வகையில் அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என உறுதியளிக்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டும் இது தொடர்கதையாகியுள்ளது.
இந்த ஆண்டும், கள்ளக்குறிச்சி உயிரிழப்பிற்கு மெத்தனால் கலப்பே காரணம் என உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட 200 லிட்டர் கள்ளச்சாராயத்தை விழுப்புரம் தடயவியல்துறை ஆய்வகத்தில் பரிசோதித்தபோது, அதில் மெத்தனால் கலந்திருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
மெத்தனால் என்பது 100 மி.லி.க்கு கீழ் சாராயத்தில் கலந்தாலும், அது பார்வை இழப்பு மற்றும் உயிரிழப்பை ஏற்படுத்தும்.
மெத்தனால் இருப்பை உறுதி செய்யும் வாயு குரோமெட்டோகிராபி ஆகும். MRI பரிசோதனையில் மூளையின் புடாமன் (Putamen) பகுதியில் ரத்தக்கசிவோடு, ரத்த ஓட்டம் குறைந்து மூளை பாதிப்பு ஏற்பட்டிருப்பதை வைத்து மெத்தனால் பாதிப்பை கண்டறிய முடியும்.
மெத்தனாலைக் கண்டறிவது எப்படி?
சாராயத்தில் காரமான, மூக்கில் நெடியை ஏற்படுத்தும் தன்மை (Pungent) இருந்தால், அதில் மெத்தனால் இருக்கலாம்.
சாராயத்தை நெருப்பு வைக்கும்போது, மஞ்சள் நிற ஒளிவர்ணம் வந்தால் அதில் மெத்தனால் இருக்க முடியும். சாராயம் மட்டும் இருந்தால் நீலநிற ஒளிவர்ணம் சேர்ந்திருக்கும்.
தமிழக அரசுக்கு டாஸ்மாக் மூலம் ஆண்டுக்கு ரூ.44,000 கோடி கிடைப்பதால், அரசு கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கைகளை முறையாக எடுப்பதில்லை.
டாஸ்மாக் சாராயம் 3 மடங்கு விலையேற்றப்பட்டதால், மக்கள் விலை மலிவாக உள்ள கள்ளச்சாராயத்தை (250 மி.லி. ரூ.60 மட்டுமே) நோக்கி ஈர்க்கப்படுகின்றனர்.
மெத்தனால் விற்பனை
மெத்தனாலைப் பொறுத்தமட்டில், அதன் விற்பனை அல்லது கட்டுப்பாடு, தமிழக மதுவிலக்கு சட்டம் 1937ன் கீழ் கொண்டுவரப்பட்டதாலும், Tamilnadu Denatured Spirit, Methyl alcohol (மெத்தனால்) and varnish (French Polish) Rules, 1959ல் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டதாலும், மெத்தனாலின் விற்பனை தமிழக அரசின் முழுக் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. மெத்தனால் எங்கிருந்து எங்கு செல்கிறது என்பதை அரசு தெளிவாக கண்காணிக்க முடியும்.
2002ல் மெத்தனாலை Tamilnadu Prohibition Actன் கீழ் கொண்டு வந்து அதன் முழு விற்பனையும் அரசின் கீழ் கொண்டு வரும் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது.
2002க்குப் பின் தமிழகத்தில் நிகழ்ந்த அனைத்து கள்ளச்சாராய இறப்புகளுக்கும் மெத்தனால் கலப்பே காரணம் எனத் தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 11 மெத்தனால் உற்பத்தி நிறுவனங்களும், 71 மெத்தனாலை பயன்படுத்தும் நிறுவனங்கள் மட்டுமே உள்ளபோது, அதை கண்காணிப்பதும் எளிது.
கள்ளச்சாராய வியாபாரி
மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் விற்ற கோவிந்தராஜ் என்பவர் 10 நாட்களுக்கு முன்னர் தான் கைது செய்யப்பட்டு, அவரிடமிருந்து 180 மி.லி. உள்ள 11 பாட்டில்களை காவல்துறை கைப்பற்றியும், அவரை விடுவித்துள்ளது. இதற்கு முன்னர் அவர் குண்டர் சட்டத்திலும் கைது செய்யப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி MLA செந்தில்குமார், சம்பவம் நடக்க சில நாட்களுக்கு முன்னர் மாவட்ட எஸ்பியிடம் இதுகுறித்து புகார் தெரிவித்துள்ளார்.
மதுரை-சென்னை உயர்நீதிமன்றக் கிளையில், திண்டுக்கல்லில் நடந்த சம்பவம் ஒன்றில், நீதிபதி புகழேந்தி அவர்களுக்கு, சட்ட விரோத மது விற்பனை தொடர்பாக வீடியோ பதிவு காண்பிக்கப்பட்டது. அதுகுறித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
சிறு தொழில் நிறுவனங்களில் கரைப்பானாக பயன்படுத்தப்படும் மெத்தனால் பயன்பாட்டையும் அரசு தீவிரமாக கண்காணிக்க வேண்டும். தமிழகத்தில் நல்ல சாராயத்தால் 2022ல் 5 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.
மெத்தனாலின் முழுக் கட்டுப்பாடு தமிழக அரசின் கையில் இருக்கும்போது, மெத்தனால் கலந்த கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும்.
இதுபோன்ற சம்பவங்கள் இனிமேலாவது நடக்காமல் இருக்க மக்களின் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும். காவல்துறை அல்லது அரசு உடனே தலையிட்டு தீர்வு கண்டால் மட்டுமே கள்ளச்சாராய மரணங்களை தடுக்க முடியும்.
தமிழ்நாட்டில் டாஸ்மாக் வருமானம் கடந்த ஆண்டை விட ரூ.1734.54 கோடி அதிகரித்துள்ளதாக தமிழ்நாடு அரசின் மதுவிலக்கு மற்றும் ஆயர்த்தீர்வை துறையின் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி – மருத்துவர். புகழேந்தி.
டாபிக்ஸ்