Udhayanidhi Stalin: ஆளுநர் அறிவிக்கும் முன் வெளியானது உதயநிதியின் பொறுப்பு!
இன்றைய பதவியேற்பில், உதயநிதிக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை உடன், சிறப்பு அமலாக்கத் திட்டங்கள் துறையும் வழங்கப்படலாம் என்கிற பேச்சு இருந்தது. ஆனால், தற்போது அமைச்சர் உதயநிதி அறையில் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகை மூலம், உதயநிதிக்கு ஒரு துறை மட்டுமே வழங்கப்பட்டுள்ளது தெளிவாக தெரிகிறது.
தமிழ்நாடு அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு, தமிழக அரசின் 35 வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இன்று காலை 9:30 மணிக்கு பொறுப்பேற்றுக் கொண்டார்.
தமிழக ஆளுநர் மாளிகையான ராஜ் பவனில் இன்று நடந்த பதவியேற்பு விழாவில், ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைக்க, உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றார்.
அதன் பின் தமிழக அமைச்சர்கள் மற்றும் ஆளுநர் உடன் இணைந்து குரூப் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் சம்பிரதாயம் நடைபெற்றது. தொடர்ந்து தன் பதவியேற்பு விழாவிற்கு வருகை தந்த குடும்பத்தார், அமைச்சர்கள், அதிகாரிகள், நண்பர்களின் வாழ்த்துக்களை பெற்றார் உதயநிதி.
அமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதிக்கு என்ன துறை ஒதுக்கப்பட்டுள்ளது என்கிற அறிவிப்பு, முறைப்படி ஆளுநர் தரப்பிலிருந்து வெளியிடப்படுவது வழக்கம். இருப்பினும், உதயநிதி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக தான் பொறுப்பேற்கிறார் என்கிற பேச்சு, கடந்த சில நாட்களாகவே இருந்து வந்தது.
இருப்பினும், தமிழக அமைச்சரவையில் அவருக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பு குறித்து, அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கும் ஆளுநர் தரப்பிலிருந்து தான் அறிவிப்பு வெளியிடப்படும்.
ஆனால், ஆளுநர் மாளிகையில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் பொறுப்பு ஏற்றதுமே, தமிழக சட்டமன்றத்தில் அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள அறையில், ஒரு பெயர் பலகை பொருத்தப்பட்டது.
அந்த பலகையில், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை என்கிற பொறுப்புடன் உதயநிதியின் பெயரும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆளுநர் அறிவிப்புக்கு முன் உதயநிதிக்கு வழங்கப்பட்டுள்ள பதவி குறித்து அறிவிப்பு வெளியாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இன்றைய பதவியேற்பில், உதயநிதிக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை உடன், சிறப்பு அமலாக்கத் திட்டங்கள் துறையும் வழங்கப்படலாம் என்கிற பேச்சு இருந்தது. ஆனால், தற்போது அமைச்சர் உதயநிதி அறையில் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகை மூலம், உதயநிதிக்கு ஒரு துறை மட்டுமே வழங்கப்பட்டுள்ளது தெளிவாக தெரிகிறது.
டாபிக்ஸ்