TVK:சொத்தை விற்று விஜய் இயக்கத்தை வளர்த்த என் அண்ணனை ஒதுக்கியது ஏன்.. புஸ்ஸி ஆனந்திடம் கேட்ட பெண்.. ரூமில் லாக்.. ஏன்பா?
TVK: சொத்தை விற்று விஜய் இயக்கத்தை வளர்த்த என் அண்ணனை ஒதுக்கியது ஏன்.. புஸ்ஸி ஆனந்திடம் கேட்ட பெண்.. ரூமில் லாக் செய்த பவுன்சர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
TVK: சொத்தை விற்று விஜய் இயக்கத்தை வளர்த்த என் அண்ணனை ஒதுக்கியது ஏன் என புஸ்ஸி ஆனந்திடம் கேட்ட பெண்ணால் கும்பகோணம் த.வெ.க. ஆலோசனை கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நடிகரான விஜய் அரசியல் கட்சி தொடங்குவார் என அவரது ரசிகர்கள் பல ஆண்டுகளாக காத்திருந்தனர். அதற்குத் தீனிபோடும் விதமாக, சமீபத்தில் ’’தமிழக வெற்றிக் கழகம்’’ என்ற கட்சிப்பெயரை அறிவித்து, அதைத் தேர்தல் ஆணையத்தில் பதிவும் செய்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார், விஜய். இதனைத் தொடர்ந்து, அவரது ரசிகர் மன்றமான தளபதி மக்கள் இயக்கம் அப்படியே, அவரது கட்சியாக மாறியது.
தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கப்பட்டுவிட்டாலும், தமிழக வெற்றிக் கழகம் வரும் 2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை எனவும், யாருக்கும் ஆதரவில்லை எனவும் விஜய் தனது அறிக்கை மூலம் தெளிவுபடுத்தியிருந்தார். அதே நேரத்தில் 2026 சட்டமன்றத்தேர்தலில் விஜய் போட்டியிடப்போவதாகவும், ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள படங்களை முடித்துவிட்டு, முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் விஜய் தெரிவித்திருந்தார். இதன் மூலம் விஜய்யின் குறிக்கோள் 2026 சட்டப்பேரவைத் தேர்தல் என்பது தெளிவாகத் தெரிகிறது.
விறுவிறுப்பாக நடைபெறும் தமிழக வெற்றிக்கழக உறுப்பினர் சேர்க்கை:
அதனைத்தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தில், உறுப்பினர் சேர்க்கையில் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு வைத்து வேலை செய்துவருகின்றனர், அக்கட்சி நிர்வாகிகள். மேலும், உறுப்பினர் சேர்க்கைக்காக , ’’தமிழக வெற்றிக் கழகம்’’ என்னும் செயலி ஒன்றை அறிமுகப்படுத்தியது. அதில் தமிழக வெற்றிக் கழகம், தனக்கான உறுப்பினர் சேர்க்கையை கடந்த மார்ச் 8ஆம் தேதி தொடங்கியது.
தொடங்கிய மூன்றே நாட்களில் 50 லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். தவிர, தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் உறுப்பினர்கள் சேர்க்கையில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும், நாம் தமிழர் கட்சியும் மாநிலக் கட்சிகளாக அங்கீகரிக்கப்பட்ட நிலையில், அதற்கு நடிகரும் தமிழக வெற்றிக் கழத்தின் தலைவருமான விஜய்யும் வாழ்த்துத் தெரிவித்திருந்தார்.
அடுத்து கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணங்கள் நிகழ்ந்த பகுதிக்கு நேரடியாக சென்று, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். அண்மையில் 10, 12ஆம் வகுப்புகளில் மாவட்ட அளவில், ஊரக அளவில் முதலிடம் பெற்றவர்களை விஜய் விழாவாக ஏற்பாடு செய்து கெளரவித்தார்.
அம்பேத்கர், பெரியார், காமராஜை படிக்கக்கோரும் விஜய்:
மேலும் பி.ஆர்.அம்பேத்கர், பெரியார் ஈ.வே.ராமசாமி மற்றும் காமராஜ் போன்ற தலைவர்கள் மற்றும் அவர்களின் லட்சியங்களைப் பற்றி படிக்குமாறு மாணவர்களை வலியுறுத்தினார். கன மழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்த தென் மாவட்டங்களுக்கு சென்று, அவர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்தார்.
அதன் அடுத்தகட்டமாக, சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை, அக்கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய் அறிமுகம் செய்துவைத்தார். மேலும் தமிழக வெற்றிக் கழகம் தொடர்பான பாடலையும் வெளியிட்டார். அப்போது, தமிழக வெற்றிக் கழகத்திற்கு அங்கீகாரம் கிடைத்ததை அக்கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய் உறுதி செய்தார்.
இந்நிலையில் கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு வரும் அக்டோபர் மாதம் 27ஆம் தேதி நடக்கும் என அக்கட்சியின் தலைவர் விஜய் அறிக்கைவிட்டு அறிவித்து இருந்தார்.
என் அண்ணனை ஒதுக்கியது ஏன்.. புஸ்ஸி ஆனந்திடம் பெண் சரமாரி கேள்வி
இதனிடையே இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முன் நின்று செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக, தஞ்சை வடக்கு மாவட்டம் சார்பில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆலோசனைக் கூட்டம் கும்பகோணத்தில் நடந்தது. அதில் தலைமை தாங்கிய புஸ்ஸி ஆனந்த், பேசிக்கொண்டிருந்தபோது, இதனிடையே மேடை அருகே வந்த ஒரு பெண், விஜய் மக்கள் இயக்கத்திற்காக சொத்தை விற்று உழைத்த தன் அண்ணனை ஒதுக்கி வைத்தது ஏன் என சரமாரியாகக் கேள்வி எழுப்பினர். இந்த சலசலப்புக்குப் பின், அவ்விடம் சென்ற பவுன்சர்கள்,அப்பெண்மணியைப் பேசவிடாமல் தடுத்து ஒரு அறைக்கு அழைத்துச் சென்று அடைத்துவைத்தனர். மேலும் செய்தியும் சேகரிக்கவிடாமல் பத்திரிகையாளர்களை தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் தடுத்தனர். இறுதியில் அப்பெண்மணி, விஜய் மக்கள் இயக்கத்தில் தஞ்சை மாவட்ட தலைவராக இருந்து விஜய்க்காகப் பணியாற்றிய தங்கதுரையின் தங்கை புஷ்பா எனத்தெரியவந்தது. ஆனால், அப்பெண்மணியை கடைசிவரை செய்தியாளர்களிடம் பேசவிடவில்லை தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
டாபிக்ஸ்