அதிமுக பொதுச்செயலாளர் வழக்கு: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு - முழு விபரம்
AIADMK General Secretary Case: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடைமுறைகள் தொடரலாம். ஆனால் முடிவுகளை மார்ச் 22 வரை வெளியிட வேண்டாம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி நடத்திய பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து பொதுச் செயலாளர் தேர்தலை நடத்துவதற்கான பணிகளை பழனிசாமி தரப்பினர் தொடங்கினர்.
தொடர்ந்து, அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தல் மார்ச் 26ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு, வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளன. வேட்புமனு தாக்கல் செய்ய இன்று மாலை 3 மணியுடன் அவகாசம் நிறைவடைகிறது. இதனிடையே இந்த தேர்தல் அறிவிப்புக்கு தடை விதிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம் தரப்பை சேர்ந்த மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் மற்றும் ஜேசிடி பிரபாகர் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த வழக்கின் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி குமரேஷ் முன்னிலையில் இன்று விசாரணை நடைபெற்றது. இதில், அதிமுக தரப்பு, இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தரப்பு பல்வேறு வாதங்களை முன்வைத்தனர். அதன் விபரம் இதோ..!
இ.பி.எஸ். தரப்பு வாதம்:
உட்கட்சி விவகாரத்தில் நீதிமன்றம் தலையிடக் கூடாது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. கட்சியில் இருந்து நீக்கப்பட்டு 8 மாதங்களுக்குப் பிறகு வழக்கு தொடர்ந்துள்ளனர். ஜூலை 11ல் நிறைவேற்றப்பட்ட அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன.
உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்த போது, பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தப்படாது என உத்தரவாதம் அளித்தோம். அந்த வழக்கு முடிவுக்கு வந்துவிட்டதால் அந்த உத்தரவாதம் அமலில் இல்லை. ஒன்றுக்கும் மேற்பட்ட வேட்புமனுக்கள் இருந்தால் தேர்தல் கட்டாயம் நடைபெறும். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலும் இதேபோலத்தான் வார இறுதியில் 3 நாட்கள் நடத்தப்பட்டது.
பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளதை சுட்டிக்காட்டி, பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கோர முடியாது. கட்சிக்கு பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்பட்டால்தான் கட்சி பிரச்னைகளை கையாள முடியும். அடிப்படை உறுப்பினர்கள் அனைவருமே ஒற்றை தலைமைதான் வேண்டும் என வலியுறுத்தினர்.
ஜூலை 11 பொதுக்குழுவில் 2600க்கும் மேற்பட்ட உறுப்பினர்களில், 2100க்கும் மேற்பட்டோரின் ஒப்புதலுடன் ஒற்றைத்தலைமை உள்ளிட்ட தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. கட்சியில் பொதுக்குழுதான் அதிகாரம் பெற்ற அமைப்பு. எனவே கட்சித்தலைமை அடிப்படை உறுப்பினர்களால்தான் தேர்வு செய்யப்பட வேண்டும் எனக் கூறும் அவர்கள், இப்போது ஏன் தேர்தலை தடுக்க முயற்சிக்கிறார்கள்? என கேள்வி எழுப்பினர்.
மேலும், உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு, உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளை பார்த்தும், ஓ.பி.எஸ். தரப்பினர் யதார்த்த நிலையை உணரவில்லை. கட்சிக்கு எதிராக நீதிமன்றம் சென்றாலே அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பதவிகள் பறிக்கப்படும் என விதிகள் உள்ளன. உட்கட்சித் தேர்தல் நடவடிக்கைகள் தொடங்கிவிட்டதால், அதில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது என மறுத்த பல நீதிமன்ற உத்தரவுகள் உள்ளன. ஓ.பி.எஸ். தரப்பினர் வழக்கு தொடர எந்த அடிப்படை முகாந்திரமும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து ஜூலை 11 பொதுக்குழு தீர்மானத்தை எதிர்த்த வழக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிக்க வேண்டிய அவசியம் என்ன? என கேள்வி எழுப்பினார். அப்போது இபிஎஸ் தரப்பு, கட்சி தொடர்ந்து செயல்பட வேண்டும், வழக்குகளுக்காக காத்திருக்க முடியாது. மக்களவை தேர்தல் நெருங்குகிறது எனக் கூறியது.
நீதிபதி: பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்குகளை ஏப்ரல் 11க்கு முன்பு விசாரிக்கலாமா? பொதுச்செயலாளர் தேர்தலை நிறுத்த விரும்பவில்லை, முடிவுகளை அறிவிக்காமல் இருக்கலாமே எனத் தெரிவித்தார்.
பொதுக்குழு தீர்மானங்கள் குறித்த வழக்கு முடியும் வரை, பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கலாம் என்ற நீதிபதியின் யோசனைக்கு, இ.பி.எஸ். தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட சென்னை உயர் நீதிமன்றம், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தலாம், ஆனால் பொதுக்குழு தீர்மான வழக்கில் தீர்ப்பு வரும் வரை தேர்தல் முடிவுகளை வெளியிட வேண்டாம் என உத்தரவு பிறப்பித்துள்ளது. பொதுக்குழு தீர்மானங்கள் குறித்த பிரதான வழக்கு மார்ச் 22ம் தேதி விசாரிக்கப்பட்டு 24ம் தேதி தீர்ப்பு வழங்குகிறேன் என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.
முன்னதாக, வைத்திலிங்கம், ஜேசிடி பிராபாகர், அதிமுக தரப்பு வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை அறிவிக்க உயர் நீதிமன்றம் தடை விதித்ததால், ஓ.பி.எஸ். இல்லம் அருகே அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.