அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடைபெறுமா? உயர் நீதிமன்றத்தில் விறு விறு விசாரணை
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடைபெறுமா? உயர் நீதிமன்றத்தில் விறு விறு விசாரணை

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடைபெறுமா? உயர் நீதிமன்றத்தில் விறு விறு விசாரணை

Karthikeyan S HT Tamil
Mar 19, 2023 01:33 PM IST

AIADMK General Secretary Election Case: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடைவிதிக்கக் கோரி ஓ.பன்னீர்செல்வம் தரப்பை சேர்ந்த மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் மற்றும் ஜேசிடி பிரபாகர் ஆகியோர் தொடர்ந்த வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றம் இன்று அவசர வழக்காக விசாரித்து வருகிறது.

ஓபிஎஸ், இபிஎஸ்
ஓபிஎஸ், இபிஎஸ்

தொடர்ந்து, அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தல் மார்ச் 26ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு, வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளன. வேட்புமனு தாக்கல் செய்ய இன்று மாலை 3 மணியுடன் அவகாசம் நிறைவடைகிறது. இதனிடையே இந்த தேர்தல் அறிவிப்புக்கு தடை விதிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம் தரப்பை சேர்ந்த மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் மற்றும் ஜேசிடி பிரபாகர் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த வழக்குகள் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி குமரேஷ் முன்னிலையில் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

ஓ.பி.எஸ். தரப்பு வாதம்:

நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதாதான் என அறிவித்துவிட்டு இந்த தேர்தலை அறிவித்துள்ளனர். வெள்ளிக்கிழமை காலை பொதுக்குழு வழக்கை விசாரித்து நீதிமன்றம் தள்ளிவைத்த நிலையில், அன்று மாலையே தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தீர்மானங்கள் தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கும் போது பொதுச்செயலாளர் தேர்தலுக்கு அப்படி என்ன அவசரம்? தலைமைக்கழக நிர்வாகியாக இல்லாத அடிப்படை உறுப்பினர்கள் போட்டியிடாத படி விதிகள் திருத்தப்பட்டுள்ளன. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வகித்த பதவிகளை வேறு எவரும் அடைய முடியாது. தேர்தல் ஆணையம் இதுவரை இடைக்கால பொதுச்செயலாளர் என யாரையும் அங்கீகரிக்கவில்லை. இன்று மாலை வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்றதாக கூறிவிட்டு, பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்படலாம் என வாதத்தை முன்வைத்துள்ளனர்.

வைத்திலிங்கம் தரப்பு வாதம்:

பொதுச்செயலாளர் தேர்தலில் ஜனநாயக விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன. இடைக்கால உத்தரவு பிறப்பிக்கவில்லை என்றால் பிரதான வழக்கே செல்லாதாகி விடும் என வைத்திலிங்கம் தரப்பு வாதத்தை முன்வைத்துள்ளனர்.

ஜே.சி.டி., பிரபாகர் தரப்பு வாதம்:

ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகள் கலைக்கப்படவில்லை, உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு, உச்ச நீதிமன்றம் இதை தீர்மானிக்கவில்லை; இரு பதவிகளும் தற்போது சட்டப்படி உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இ.பி.எஸ். தரப்பு வாதம்:

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்த போது, பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தப்படாது என உத்தரவாதம் அளித்தோம்; அந்த வழக்கு முடிவுக்கு வந்துவிட்டதால் அந்த உத்தரவாதம் அமலில் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்ய இன்று மாலை 3 மணியுடன் அவகாசம் நிறைவடைகிறது. நூற்றுக்கணக்கான அதிமுக தொண்டர்கள் கட்சி தலைமை அலுவலகம் முன்பு குவிந்துள்ளனர். இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கோரி ஓபிஎஸ் தரப்பில் தொடர்ந்த வழக்கின் விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் பரபரப்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.