Senthil Balaji Arrest: கண்ணாடி முன்னாடி பேச யோக்கிதை உண்டா? நோட்டாவை விட மோசமாகும்! ஈபிஎஸ், அண்ணாமலையை விளாசும் மா.சு
நடவடிக்கையின் மூலமாக திமுகவை மட்டுமில்லாமல் அதிமுகவையும் மிரட்ட முயற்சிக்கிறது பாஜக. கூட்டணியை பரிசீலனை செய்வோம் என்று அதிமுக சொன்னதற்கு ‘உன்னையும் கைது செய்வோம்’ என்று மிரட்டியிருக்கிறது - மா.சுப்பிரமணியன்
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது குறித்து சென்னை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சருமான திரு.மா.சுப்பிரமணியன் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு.செந்தில் பாலாஜி அவர்களின் கைது நடவடிக்கை என்பது அரசியல் சாசனத்திற்கான நெருக்கடியை ஏற்படுத்தும். இதில் எந்த விதிமுறைகளும் பின்பற்றபடவில்லை. ஒரு மாநில அமைச்சர் ஒத்துழைப்பு தருவேன் என்ற பிறகும் அடிப்படை உதவிகள் கூட வழங்காமல் 18 மணி நேரத்திற்கும் மேலாக வைத்து கொடுமை செய்துள்ளார்கள்.
மேற்கு வங்கம், டெல்லி, மகாராஷ்டிரா போன்ற எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் அனைத்திலும் அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறையை அனுப்பி மிரட்டுவது போல தமிழ்நாட்டிலும் முயற்சிக்கிறார்கள். சிபிஐ, அமலாக்கத்துறை, ஐடி ஆகியன பாஜகவின் கிளை அமைப்புகளாக செயல்படுகின்றன. மாண்புமிகு அமைச்சர் திரு.செந்தில் பாலாஜி கைது என்பது ஒரு ஜனநாயக படுகொலை, பாஜகவின் சர்வாதிகார அரசியலின் வெளிப்பாடு, மேலும் எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் நடவடிக்கையின் உச்சம்தான் இந்த கைது நடவடிக்கையாகும். நாடாளுமன்றத் தேர்தலுக்குள் திமுகவை களங்கப்படுத்த வேண்டும் என்ற பாஜகவின் திட்டத்தை அமலாக்கத்துறை செயல்படுத்த முயற்சிக்கிறது.
நேற்று அதிகாலை தொடங்கி நள்ளிரவை தாண்டியும் அவரை ஒரே இடத்தில் அமரவைத்து விசாரணை என்ற பெயரால் துன்புறுத்தியிருக்கிறது அமலாக்கத்துறை. அவர் உடல்நிலை பாதிக்கும் அளவுக்கு மனிதாபமானம் இல்லாமல் அமலாக்கத்துறை அதிகாரிகள் தங்கள் எஜமான்கள் மோடி-அமித்ஷாவை திருப்திபடுத்தும் கேடுகெட்ட செயலை செய்திருக்கிறார்கள்.
மிரட்டல் திமுகவுக்கு மட்டுமில்லை
இந்த நடவடிக்கையின் மூலமாக திமுகவை மட்டுமில்லாமல் அதிமுகவையும் மிரட்ட முயற்சிக்கிறது பாஜக. கூட்டணியை பரிசீலனை செய்வோம் என்று அதிமுக சொன்னதற்கு ‘உன்னையும் கைது செய்வோம்’ என்று மிரட்டியிருக்கிறது பாஜக. எந்த மிரட்டலுக்கும் பயப்படாத இயக்கம் திமுக தான். அன்றைக்கு அதிமுக ஆட்சியில் ரெய்டு வந்த போதும் திமுகதான் எதிர்த்துக் குரல் கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதிமுக எந்தக் காலத்திலும் பாஜகவின் எந்த விதிமீறலையும் எதிர்த்து குரல் எழுப்பாது. கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலுக்கு தலைவர் மு.க.ஸ்டாலினை குறிவைத்து, உறவினர்கள் வீடுகளில் சோதனை நடத்தியது பாஜக. ஆனால், திமுக மீதும் திமுக தலைவர்கள் மீதும் எந்த குற்றத்தையும் நிரூபிக்க முடியாத நிலையில் திண்டாடும் பாஜக, மக்கள் மத்தியில் பரப்பும் பொய் பிரசாரத்திற்கு புலனாய்வு அமைப்புகளை ஏவி சோதனை நடத்துவதை செய்கிறது. திமுக மீதான போலி Narrative ஊழல் கட்சி என்பதை எப்படியாவது நிரூபிக்க வேண்டும் என்ற முனைப்பில் பாஜக, புலனாய்வு அமைப்புகளை ஏவி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
எதிர்கட்சிகளின் ஒற்றுமையும் பாஜகவின் பதற்றமும்
வரும் மக்களவை தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சியை வெற்றிகரமான கட்டத்திற்கு எங்கள் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நகர்த்தியிருக்கிறார். வரும் 23ஆம் தேதி பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்தில் எங்கள் தலைவர் பங்கேற்க உள்ளார். அவருடன் 25 தலைவர்கள் ஆலோசனை நடத்தி வியூகம் வகுக்க உள்ளனர். அதனால் அபரிமிதமான பதற்றத்தில் தவிக்கும் பாஜக அமலாக்கத்துறை மூலம் நேரடியாக மிரட்டும் வேலையை செய்கிறது.
பாஜகவின் தனிமனித பகை
ஒரு தனி நபரின் அரசியல் பகையும், ஒரு கட்சியின் சித்தாந்த ரீதியான அரசியல் பகையும் மாண்புமிகு அமைச்சர் திரு.செந்தில் பாலாஜி மீது பழிவாங்கும் உச்சமாக மாறியிருக்கிறது. கொங்கு மண்டலத்திலாவது சற்று வாக்குகளை வாங்க முடியும் என பாஜக நம்பிக் கொண்டிருந்தது. அந்த நம்பிக்கையை முற்றாக சிதைத்தவர் மாண்புமிகு அமைச்சர் திரு.செந்தில்பாலாஜி.
கடந்த சட்டப்பேரவை தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் அண்ணாமலை போட்டியிட்டு தோல்வி அடைந்தார். பாஜகவில் யார் நின்றாலும் தமிழ்நாடு மக்கள் அவர்களை தோற்கடிப்பார்கள் என்ற சூழல் இருக்கும்போது தனது தோல்விக்கு காரணம் செந்தில் பாலாஜி என நினைத்து அவரை பழிவாங்கும் எண்ணத்தில் சுற்றிக்கொண்டிருந்தார் அண்ணமலை. அண்ணாமலையின் அரசியல் தில்லுமுல்லுகளை இன்ச் ஐ இன்சாக விமர்சித்து அம்பலப்படுத்தி வந்தார் மாண்புமிகு அமைச்சர் திரு.செந்தில் பாலாஜி. ரபேல் வாட்ச் பில் எங்கே? என்ற கேள்வியை செந்தில் பாலாஜி எழுப்பியதை அண்ணாமலை தனக்கு ஏற்பட்ட பெருத்த அவமானமாக கருதுகிறார்.
கடந்த மக்களவை தேர்தல், சட்டப்பேரவை தேர்தல், உள்ளாட்சித்தேர்தல், இடைத்தேர்தல் என அனைத்து தேர்தல்களிலும் பாஜக கூட்டணி தோல்விக்கு காரணக்கர்த்தாவாக களத்தில் பணியாற்றிய மாண்புமிகு அமைச்சர் திரு.செந்தில் பாலாஜி மீது பழிவாங்கும் வேட்கை பாஜகவுக்கு அதிகமானது. கடந்த 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2ஆம் தேதி அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசும்போது, "அமலாக்கத்துறை Busyஆக உள்ளதாகவும் செந்தில் பாலாஜி அலுவலகத்தில் அமலாக்கத்துறை விரைவில் சோதனை செய்யும்" என குறிப்பிட்டிருந்தார்.
மேலும், அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்வதற்கு முன்பு பாஜகவும் அதிமுகவும் அவர் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறுகளை பரப்பியிருந்தார்கள், தற்போது அமலாக்கத்துறை கைது செய்திருக்கிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு, டெல்லி, மேற்கு வங்கம், பீகார், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் விசாரணை அமைப்புகளை எதிர்க்கட்சிகளுக்கு எதிராக பயன்படுத்தியுள்ளது தற்போது தமிழ்நாடு அரசிற்கு எதிராக பயன்படுத்த தொடங்கியிருக்கிறது.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் மீது பாஜகவிற்கு ஏன் பயம்
2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுக அதிகமாக மேற்கு மாவட்டத்தில் வெற்றி பெற்றது. பாஜகவும் 2 இடங்களில் வெற்றி பெற்றது. உள்ளாட்சித் தேர்தலில் கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர், கரூர் ஆகிய 5 மாநகராட்சிகளையும், 100-க்கும் மேற்பட்ட நகராட்சிகள், பேரூராட்சிகளில் அதிக இடங்களையும் கைப்பற்றி திமுக வெற்றி பெற்றது. இதற்கு முழு காரணமாக மேற்கு மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட மாண்புமிகு அமைச்சர் திரு.செந்தில் பாலாஜி தான் என்று கூறப்பட்டது.
பாஜக அனைத்துத் தேர்தல்களிலும் மண்ணைக் கவ்வினாலும், கொங்கு நாடு என்று கனவு கண்டனர். ஆனால், அந்த கனவையும் திரு.செந்தில் பாலாஜி கலைத்து விட்டார். உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பே கரூர் மக்களவைத் தொகுதியை காங்கிரஸ் வெற்றி பெற பெரிதும் காரணமாக இருந்தவர் திரு.செந்தில் பாலாஜி. 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் கருர் மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளிலும் திமுக வெற்றி பெரும் என்று சவால் விட்டு வெற்றியும் பெற வைத்தார்.
அதில் தோல்வியுற்றவர்களில் பாஜகவின் மாநிலத் தலைவர், அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஆகியோர் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது. 2024 ஆம் ஆண்டு தேர்தலில் செந்தில் பாலாஜி பணியாற்றினால் நோட்டாவை விடவும் நிலமை மோசமாகிவிடும் என்ற பயத்தில் இது போன்ற சோதனைகளை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அமலாக்கத்துறையும் பழிவாங்கும் நடவடிக்கையும்
இந்திய பொருளாதாரத்தை சீர்குலைக்கும் குற்றங்களை கண்டறிவதில் தான் அமலாக்கத் துறை கவனம் செலுத்தி வந்தது. பாஜக ஆட்சி பொறுப்பேற்றவுடன் எதிர்க்கட்சிகளின் மீது ஏவி பயம் ஏற்படுத்துவதற்காக அமலாக்கத்துறையை பயன்படுத்துகிறது. தேச நலனுக்காக உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பை தனது அரசியலுக்காக பாஜக பயன்படுத்துவது என்பது ஜனநாயக படுகொலையாகும். தற்போது அமலாக்கத்துறை சோதனை நடத்தியிருப்பது 2015 ஆம் ஆண்டு போடப்பட்ட வழக்கு ஆகும்.
இதன் மூல வழக்கு CCB (CHENNAI CRIME BRANCH) உடையது. இந்த வழக்கில் 2015 ஆம் ஆண்டு அரசு வேலைக்கு பணம் பெற்றார் என்பது தான் புகார். ஆனால் புகார் கொடுத்தவர்களே வழக்கை திரும்பப்பெற்றுவிட்டனர். அமைச்சர் நேரடியாக பணம் பெற்றாரா என்றால் இல்லை. புகார் கொடுத்தவர்களே வழக்கை திரும்பப் பெற்றவுடன் இதில் அமலாக்கத்துறை எப்படி? ஏன் வந்தார்கள்? என்பது புரியாத புதிராகவே உள்ளது.
கடந்த 2014ம் ஆண்டு முதல் அமலாக்கத்துறையால் விசாரணைக்கு உள்ளான அரசியல்வாதிகளில் 95 சதவீதம் பேர் எதிர்க்கட்சித் தலைவர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஒன்றிய விசாரணை அமைப்புகள் எந்த அளவிற்கு தவறாக பயன்படுத்தப்படுகின்றன என்பதற்கு இந்த புள்ளி விபரம் ஒன்றே போதும். ஒன்றிய அரசின் அமைப்புகளை தவறாகப் பயன்படுத்துவதாகக் கூறி 14 கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளன. "ஒன்றிய புலனாய்வு மற்றும் அமலாக்க இயக்குநரகம் போன்ற அமைப்புகள் பாஜகவின் அரசியல் எதிரிகளை மட்டுமே குறிவைத்து வருகின்றன" என்று எதிர்கட்சிகள் மனுவில் குற்றம்சாட்டியுள்ளன. "பாஜக அரசு புலனாய்வு அமைப்புகள் மூலம் நேருவுக்கும் சம்மன் அனுப்பி அவரது நினைவிடத்தில் நோட்டீஸ் ஓட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை" என சிவசேனா எம்.பி., திரு.சஞ்சய் ராவத் கிண்டலாக தெரிவித்தார். அதைக்கூட பாஜக செய்யும் சூழல் தான் தற்போது உள்ளது.
எதிர்க்கட்சி தலைவர்களை மட்டும் குறிவைத்து சோதனை
கடந்த 2022 மே மாதம் டெல்லி ஆம் ஆத்மி அரசில் முக்கிய அமைச்சரவை பொறுப்புகளை வகித்த சத்யேந்திர ஜெயின்னை அமலாக்கத்துறை கைது செய்தது. குஜராத் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் பாஜகவுக்கு எதிராக கடும் பிரசாரங்களை மேற்கொண்ட டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ்சிசோடியா மீது சிபிஐ மூலம் வழக்கு தொடர்ந்து சிறை தள்ளியது பாஜக. டெல்லியின் மாண்புமிகு முதலமைச்சர் திரு.அரவிந்த் கெஜ்ரிவாலை 9 மணி நேரம் சிபிஐ விசாரணை நடத்தியிருக்கிறது. குஜராத் மாநிலங்களவை தேர்தல் நடைபெற்றபோது அம்மாநில எம்.எல்.ஏ க்களை கர்நாடகாவில் பெங்களூருவில், கர்நாடக மாநில தலைவர் திரு.டி.கே.சிவக்குமார் பாதுகாப்பில் தங்கியிருந்தனர்.
அதே நேரத்தில் அவர் அமலாக்கத் துறை சோதனைக்கும் ஆளாகினார் என்பது குறிப்பிடத்தக்கது. 2018ஆம் ஆண்டு கர்நாடகா மாநிலத்தில் அப்போதய முதலமைச்சர் குமாரசாமியிடமே அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார். காங்கிரஸுடன் கூட்டணி வைத்தால் வழக்கு போடப்படும் என்று எச்சரித்ததாக சட்டமன்றத்திலேயே குமாரசாமி பதிவு செய்துள்ளார். 2020 ஆம் ஆண்டு ராஜஸ்தானில் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு எதிராக அம்மாநில துணை முதல்வர் திரு.சச்சின் பைலட் கலகம் செய்தார். அப்போது எம்.எல்.ஏக்களை பாதுகாத்த திரு.கெலாட்டின் சகோதரர் அமலாக்கத் துறை சோதனைக்கு உள்ளானார்கள்.
எதிர்கட்சித் தலைவர் திரு.எடப்பாடி பழனிசாமி பேட்டிக்கு பதிலடி
மாண்புமிகு அமைச்சர் திரு.செந்தில் பாலாஜி மீதான நடவடிக்கை குறித்து திரு.எடப்பாடி பழனிசாமி பேட்டியளித்தபோது முன்னுக்கு பின் முரணாக உளறிவிட்டு சென்றார். திரு.செந்தில் பாலாஜியை பற்றி பேசுவதற்கு முன்பாக கண்ணாடி முன் நின்று பார்த்து, இதை பேச தனக்கு அருகதை, யோக்கியதை இருக்கிறதா? என்பதை யோசித்திருக்க வேண்டும். ஊழல், முறைக்கேடு, கொலை, கொள்ளை என பல்வேறு வழக்குகளில் திரு.எடப்பாடி பழனிசாமி தலை மீதும், திரு.வேலுமணி, திரு.தங்கமணி உள்ளிட்ட அமைச்சர்கள் தலை மீதும் கத்தி தொங்கிக்கொண்டிருக்க அதை யோசித்து பார்க்காமல் பேசுவது வெட்கக்கெட்ட செயலாகும்.
போக்குவரத்து அமைச்சராக இருக்கும்போது வேலை வாங்கி தருவதாக பணம் பெற்று மோசடி செய்த வழக்கில் திரு.செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது என்று முதலில் சொன்னார் திரு.எடப்பாடி பழனிசாமி. உடனே முன்னுக்கு பின் முரணாக, "கடந்த இரண்டு ஆண்டுகளில் டெண்டர் விடாமல் மது பார்கள் செயல்படுகின்றன, அதன் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் முறைகேடு நடந்துள்ளது. இதை அமலாக்கத்துறை கண்டுபிடித்துள்ளது" என்கிறார். அதிமுக ஆட்சி கால பழைய புகார் திரும்பப்பெறப்பட்ட நிலையிலும், அந்த வழக்கை பழிவாங்குவதற்காக பாஜக நடவடிக்கை எடுத்துள்ளது என்பது தான் உண்மை நிலவரம். ஆனால், இந்த ஆட்சி மீது குற்றச்சாட்டு எதுவும் சொல்ல முடியாத திரு.எடப்பாடி பழனிசாமி, திரு.செந்தில் பாலாஜி மீதான நடவடிக்கையை தற்போதைய ஆட்சி மீது களங்கம் கற்பிக்க பயன்படுத்துகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
எந்த வழக்கிற்காக அமலாக்கத்துறை கைது செய்துள்ளது என்பதை சொல்லிவிட்டு, பிறகு முன்னுக்கு பின் முரணாக வெட்கமில்லாமல் பேசுகிறார் எதிர்கட்சித் தலைவர் அவர்கள். அதிமுக ஆட்சி காலத்தில் தலைமைச் செயலகத்தில் சோதனை நடத்தியது தமிழ்நாட்டிற்கு தலைகுனிவு என்றார் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த நமது மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள். அதை குறிப்பிட்ட திரு.எடப்பாடி பழனிசாமி, "அமைச்சர் அறையில் சோதனை நடத்திய தலைகுனிவு" என்றார். இரண்டு சோதனைக்கும் வித்தியாசம் இருப்பதை உணரும் அறிவு துளியும் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை என்பதை அவரின் பேச்சு காட்டுகிறது.
2016ஆம் ஆண்டு தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் திரு.ராமமோகன் ராவ் அறையில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. அந்த தருணத்தில் பாஜகவுக்கு அதிமுக எதிர்க்கட்சி இல்லை. பழிவாங்கும் நோக்கில் நடத்தப்பட்ட சோதனையும் அது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது திமுக அமைச்சர் மீதான நடவடிக்கையும், அவரின் அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையும் எதிர்க்கட்சி மீதான பழிவாங்கும் செயலாகும். 2016ஆம் ஆண்டு நடந்த தலைமைச் செயலகத்தில் நடந்த சோதனையை எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோதும் பாஜகவின் அதிகார துஷ்பிரயோகத்தை விமர்சித்தார். முதலமைச்சராக இருக்கும் இந்த தருணத்திலும் பாஜகவின் பழிவாங்கும் செயலை கண்டிக்கிறார்.
2016ஆம் ஆண்டு தலைமை செயலகத்தில் சோதனை நடந்தபோது பாஜகவை கண்டித்து அப்போதைய முதலமைச்சர் திரு.ஒ.பன்னீர்செல்வமோ அல்லத்து திரு.எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக அமைச்சர்களோ கண்டிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதிமுக அடிமைகள் போல பதுங்கிக்கொள்ளாமல், "ஒரு மாநில அரசின் மாண்பு காக்கும் தலைமைச் செயலகத்துக்குள் மத்திய காவல் படையை அழைத்து வந்து அதிகாரிகள் சோதனை நடத்துவதுதான் அரசியல்சட்ட மாண்பைக் காப்பதா?" என்று நமது முதலமைச்சர் அவர்கள் கண்டித்துள்ளார்.
இப்போதுகூட "தலைமைச் செயலகத்துக்குள் சோதனையா?" என ஒன்றிய பாஜகவை அரசை கண்டிக்க திரு.எடப்பாடி பழனிசாமிக்கு துப்பு இல்லாதபோது, அவர் எப்படி மாநில உரிமையை காப்பார் என்பதை தமிழ்நாட்டு மக்கள் உணர்வார்கள். வரும் தேர்தல்களில் அதிமுக அடிமைகளுக்கு தமிழ்நாட்டு பாடம் கற்பிப்பார்கள். திரு.செந்தில் பாலாஜி தார்மீக அடிப்படையில் அவரே பதவி விலக வேண்டும் என்கிறார் திரு.எடப்பாடி பழனிசாமி. இதை சொல்ல திரு.எடப்பாடி பழனிசாமி வெட்கப்பட வேண்டும். அரசின் டெண்டர்களை தனது குடும்பத்தினருக்கு ஒதுக்கியதில் மட்டும் 4000 கோடி ரூபாய் வரை முறைகேடு செய்துள்ளார் திரு.எடப்பாடி பழனிச்சாமி. எல்.இ.டி விளக்குகள் வாங்கியதில் ஒரு விளக்கிற்கு 3900 ரூபாய் ஊழல் என கற்பனையிலும் எண்ணிப்பார்க்க முடியாத அளவிற்கு கடந்த 10 ஆண்டுகளில் அதிமுகவினர் ஊழல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முதலமைச்சர், அதிமுக அமைச்சர்கள் மீது ஊழல் புகார் எழுந்து சோதனை நடந்தபோது தார்மீக அடிப்படையில் பதவி விலகவில்லை. பாஜக ஒன்றிய அரசு புலனாய்வு அமைப்புகளை ஏவி சோதனை செய்தபோது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க டெல்லிக்கு சென்று மோடி, அமித்ஷா கால்களில் விழுந்த எடப்பாடி பழனிசாமி, வெட்கமே இல்லாமல் பதவியில் ஒட்டிக்கொண்டிருந்தார் என்பதை தமிழ்நாடு அறியும். கள்ள ஓட்டு போட முயன்றதை தடுத்ததால் திரு.ஜெயக்குமார் கைது செய்யப்படார் என பொய்யான தகவலை முதலமைச்சராக இருந்த ஒருவர் சொல்வது வெட்கக்கேடானது. திரு.ஜெயக்குமார் தனது மகள், மருமகனுடன் சேர்ந்து நிலத்தையும், நிறுவனத்தையும் அபகரித்துக்கொண்டார் என்ற புகாரின் பேரிலேயே கைது செய்யப்பட்டார். பாஜகவுக்கு அடிமையாக இருந்து ஒரு கட்சியை அடகுவைத்து கைது நடவடிக்கைகளில் இருந்து தப்பித்து வரும் நபரான திரு.எடப்பாடி பழனிசாமி பேச்சை குறைப்பது அவருக்கு நல்லது என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் தெரிவித்தார்.