Kovai Selvaraj: திமுகவில் இணைந்தது ஏன்? - கோவை செல்வராஜ் சொன்ன பதில் இதுதான்!
kovai selvaraj in DMK: திமுக ஒரு புனிதமான கட்சி என்றும், அதிமுகவில் இருந்ததற்கு மக்களிடம் பாவ மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றும் திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ கோவை செல்வராஜ் தெரிவித்தார்.
அதிமுகவின் செய்தி தொடர்பாளரும், அதிமுக பிரிந்தபோது ஓபிஎஸ் அணியில் இருந்தவருமான கோவை செல்வராஜ் இன்று காலை (டிச.7) சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இந்த நிகழ்வின் போது அமைச்சர்கள் கே.என்.நேரு, செந்தில் பாலாஜி, நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் உடனிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து அண்ணா அறிவாலயத்தில் கோவை செல்வராஜ் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழ்நாட்டில் திராவிட பாரம்பரியமாக திமுக, அதிமுக மாறி மாறி ஆட்சி செய்து வருகிறது. நான்கரை ஆண்டு எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்தது ஆட்சியே அல்ல. சுனாமி போல் தமிழ்நாட்டு மக்களை தாக்கியது. இபிஎஸ் ஆட்சியில் தமிழகம் சீரழிந்துவிட்டது.
அதிமுக கட்சி தற்போது கம்பெனியாகி விட்டது. அதிமுகவில் இணைந்து செயல்பட்டதுக்கு மக்களிடம் பாவ மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். 14 வயதில் உதயசூரியன் சின்னத்தில் வாக்குக் கேட்ட நான் மீண்டும் தாய்க்கழகத்தில் இணைந்துள்ளேன்.
தொடர்ந்து திராவிட பாரம்பரியத்தில் நீடிக்கவே திமுகவில் இணைந்தேன். தமிழக மக்கள் மதவாத இயக்கத்திற்கு துணை போக மாட்டார்கள். மதவாத இயக்கம் தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்துவிடுமோ என்கிற பாவனையில் செயல்படுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தமிழக மக்கள் நலன் கருதி திமுகவில் இணைந்துள்ளேன். திமுக மக்களாட்சியாக செயல்படுகிறது. திமுக ஒரு புனிதமான கட்சி. தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பான ஆட்சி நடத்தி வருகிறார்." என்று அவர் கூறினார்.