EPS: ’திமுக ஆட்சியில் பசுவுக்கு கூட பாலியல் வன்கொடுமை நடக்கிறது!’ பொதுக்குழுவில் ஈபிஎஸ் ஆவேசம்!
“ADMK General Body Meet: திமுகவுக்கு இறங்கு முகம் தொடங்கிவிட்டது. திமுக ஆட்சி எப்போது போகும், அதிமுக ஆட்சி எப்போது வரும் என மக்கள் பேசத் தொடங்கிவிட்டார்கள்”
சென்னை வானகரத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது, ஸ்டாலின் எப்போது பார்த்தாலும் நமது இயக்கத்தை பற்றி குறை சொல்வார். அண்மையில் ஒரு அமைச்சருக்கு நீதிமன்றம் மூலம் தண்டனை கிடைத்துள்ளது. சட்டமன்றத்தில் முன் வரிசையில் அமர்ந்துள்ள மந்திரிகள் எல்லாம் சிறை செல்வார்கள். அவர்கள் எல்லாம் நீதிமன்றத்தில் எப்போது தீர்ப்பு வரும் என எதிர்நோக்கி கொண்டு இருக்கிறார்கள். வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்குள் பல பேர் எந்த இடத்தில் இருக்க வேண்டுமோ அந்த இடத்தில் இருப்பார்கள்.
ஒரு அமைச்சர் இன்றைக்கு சிறையில் இருக்கிறார். நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்குகிறது. ஒரு அமைச்சர் சிறையில் இருக்கிறார். அவரை அமைச்சராக பார்ப்பதா?; கைதியாக பார்ப்பதா? என்ற கேள்வி எழுப்பும்போது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சொன்னார் சட்ட நெறிமுறைப்படி நல்ல அரசாட்சி தர முதல்வர் நினைத்தால் தார்மீக அடிப்படையில் அவரை பதவியில் இருந்து விலகி இருக்க சொல்ல வேண்டும். ஆனால் இன்னும் சூடு சொரணை இல்லை. நீதிமன்றம் சொல்லியும் கூட அவரை அமைச்சரவையில் இருந்து விடுவிக்காமல் இருக்க காரணம் அவர் இருக்கும் இடத்தில் இன்றைக்கு இருக்கும் முதலமைச்சர் சென்றுவிடுவார் என்று பயம்.
திமுகவுக்கு இறங்கு முகம் தொடங்கிவிட்டது. திமுக ஆட்சி எப்போது போகும், அதிமுக ஆட்சி எப்போது வரும் என மக்கள் பேசத் தொடங்கிவிட்டார்கள். அடுத்த எந்த தேர்தல் வந்தாலும் அதிமுக கூட்டணிதான் வெல்லும் என்ற எண்ணம் மக்களிடையே எழுந்துவிட்டது.
திமுக ஆட்சியில் கன்றுக்குட்டியை கூட பாலியல் வன்கொடுமை செய்யும் அராஜகம் நடக்கிறது. எந்த ஆட்சியிலாவது இப்படி நடந்ததா? உண்மையை சொல்லுங்கள். இப்படிப்பட்ட வன்கொடுமைகள் விடியா திமுக ஆட்சியில்தான் நடக்கிறது.