EPS VS BJP: ’அதிமுகவை எதிர்ப்பது கானல் நீராக முடியும்’ அண்ணாமலைக்கு கடம்பூர் ராஜூ காட்டம்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Eps Vs Bjp: ’அதிமுகவை எதிர்ப்பது கானல் நீராக முடியும்’ அண்ணாமலைக்கு கடம்பூர் ராஜூ காட்டம்!

EPS VS BJP: ’அதிமுகவை எதிர்ப்பது கானல் நீராக முடியும்’ அண்ணாமலைக்கு கடம்பூர் ராஜூ காட்டம்!

Kathiravan V HT Tamil
Mar 08, 2023 03:36 PM IST

’வாய்ச் சொல்லில் வீரனடி’ என்று பாரதியார் சொன்னதை போல் மீடியாவிலும், பத்திரிக்கையிலும் பேசி கட்சியை வளர்க்க முடியாது - கடம்பூர் ராஜூ

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை - அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை - அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ
இடைக்கால பொதுச்செயலாளர் ஈபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த பாஜக நிர்வாகிகள்
இடைக்கால பொதுச்செயலாளர் ஈபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த பாஜக நிர்வாகிகள்

இந்த நிலையில், ஈபிஎஸ் உருவப்படத்தை பாஜகவினர் எரித்தது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி எம்.எல்.ஏவுமான கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசுகையில், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவோடு இணைந்து அதிமுக தேர்தலை சந்தித்தது. அதில் இடங்களை பெறாமல் போனாலும் லட்சக்கணக்கான வாக்காளர்கள் நரேந்திர மோடி பிரதமராக வேண்டும் என்று வாக்களித்தார்கள். அவ்வுளவு வாக்குகள் தமிழ்நாட்டில் கிடைத்ததற்கு அதிமுகவோடு பாஜக கூட்டணி வைத்ததுதான் காரணம்.

”பலநாள் யோசனைக்கு பிறகே ஆதரவு”

நகர்புற உள்ளாட்சித் தேர்தலின் போது இடங்களில் உடன்பாடு ஏற்படவில்லை என்று சொல்லி அண்ணாமலை அவர்கள் தனித்து போட்டியிடுவோம் என்று சொன்னார்கள். தனித்து போட்டியிட்டு அவர்களின் பலத்தை தெரிந்து கொண்ட பிறகு அதிமுக உடன் தான் கூட்டணி என்ற நிலைப்பாட்டிற்கு வந்தார்கள்.

ஈரோடு கிழக்கு தேர்தலில் பலநாள் யோசனைக்கு பிறகு அதிமுகவுக்கு அண்ணாமலை ஆதரவு அளித்தார். இப்போது கூட கூட்டணியில்தான் இருக்கிறோம், அதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ஈபிஎஸ் படத்தை எரித்த பாஜகவினர்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ஈபிஎஸ் படத்தை எரித்த பாஜகவினர்

அண்ணாமலைக்கு ஏன் இந்த பதட்டம்?

ஆனால் தேவையில்லாமல், ஒரு பதட்டத்தோடு அண்ணாமலை ஏன் இப்படி செயல்படுகிறார் என்பது வேடிக்கையாக, விந்தையாக உள்ளது. காயத்ரி ரகுராம் போன்றவர்களெல்லாம் பாஜக கொள்கை பிடிக்காலம் வெளியே செல்லவில்லை, அண்ணாமலையால்தான் கட்சியை விட்டு வெளியே செல்கிறோம் என்றார்கள்.

தனிப்பட்ட விருப்பு வெறுப்பின் அடிப்படையில் யார் வேண்டுமானலும் எந்த கட்சியிலும் சேரலாம். அந்த அடிப்படையில்தான் முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் பாஜகவில் இணைந்தார். சோழவந்தான் முன்னாள் எம்.எல்.ஏ மாணிக்கம் அதிமுகவில் இருந்து வெளியேறி பாஜகவில் இணைந்தார்.

அண்ணாமலையுடன் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ மாணிக்கம் - எடப்பாடி பழனிசாமி உடன் சிடிஆர் நிர்மல் குமார்
அண்ணாமலையுடன் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ மாணிக்கம் - எடப்பாடி பழனிசாமி உடன் சிடிஆர் நிர்மல் குமார்

”நிர்மல்குமாரை நாங்கள் வலிய அழைக்கவில்லை”

இதனை நாங்கள் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. ஏனென்றால் இது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பம். அதே போல்தான் பாஜக ஐடி விங் தலைவர் நிர்மல் குமார் வெளியேறி அதிமுகவில் இணைய வலிய வருகிறார்; நாங்கள் சென்று அவரை அழைக்கவில்லை. எனவே அவரை சேர்த்துக் கொண்டோம்.

நாங்கள் நிர்மல் குமாரை சேர்க்க மறுத்துவிட்டோம் எனில் அவர் திமுகவில் சேர்ந்திருந்தால் அண்ணாமலை என்ன செய்வார்?

”அண்ணாமலையின் ரகசியத்தை நிர்மல்குமார் சொல்லிவிடுவாரோ?”

நேற்று ’எங்கிருந்தாலும் வாழ்க’ என்று கூறிய அண்ணாமலைக்கு என்ன பதற்றம்?. இந்த பதற்றத்தின் காரணம்தான் எனக்கு தெரியவில்லை. தன்னை பற்றி நிர்மல்குமார் என்ன ரகசியத்தை சொல்லுவாரோ என்று பயப்புடுகிறாரோ என்று தெரியவில்லை. இதற்கு அண்ணாமலைதான் தெளிவாக பதிலளிக்க வேண்டும்.

ஓவ்வொரு வினைக்கும் எதிர்வினை ஆற்றுவேன் என அண்ணாமலை சொல்லி உள்ளார். நன்றாக ஆற்றட்டும் ஆனால் அவர் எதிர்வினை ஆற்ற வேண்டிய இடம் திமுக என்பதை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்.

”மீடியாவிலும் பத்திரிகையிலும் பேசி கட்சியை வளர்க்க முடியாது”

மாண்புமிகு முதல்வர் தனது 70ஆவது பிறந்தநாளில் அகில இந்திய தலைவர்களை அழைத்து வந்து பாஜகவுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைக்க வேண்டும் என்ற வெளிப்படை தன்மை உடன் பேசி உள்ளார். எல்லாவற்றிற்கும் மேல் ’யார் பிரதமராக வர வேண்டும் என்பதை விட யார் பிரதமராக வரக்கூடாது என்பதுதான் முக்கியம்’ என்ற கருத்தை முதல்வர் கூறி உள்ளார். இதற்கு என்ன எதிர்வினையை அண்ணாமலை ஆற்றி உள்ளார்.

சென்னையில் நடந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் அகில இந்திய தலைவர்கள் - கோப்புப்படம்
சென்னையில் நடந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் அகில இந்திய தலைவர்கள் - கோப்புப்படம்

இதையெல்லாம் செய்யாமல், ’வாய்ச் சொல்லில் வீரனடி’ என்று பாரதியார் சொன்னதை போல் மீடியாவிலும், பத்திரிக்கையிலும் பேசி கட்சியை வளர்க்க முடியாது. அதிமுகவை எதிர்த்து அரசியல் செய்வது கானல் நீராகத்தான் முடியும்.

”கூட்டணியில் இறுதி செய்ய வேண்டியது அண்ணாமலை அல்ல”

நாங்கள் இன்றைக்கும் பாஜக கூட்டணியில்தான் உள்ளோம். இந்த கூட்டணியை இறுதி செய்ய வேண்டியது அண்ணாமலை அல்ல; அண்ணாமலை போவாறு, நாளை வேறு தலைவர் பாஜகவுக்கு வருவது சகஜம்.

பிரதமர் மோடி - அமித்ஷா (கோப்புப்படம்)
பிரதமர் மோடி - அமித்ஷா (கோப்புப்படம்)

மாநிலக் கட்சியான நாங்கள்தான் கொள்கை முடிவை இங்கிருந்து எடுக்க முடியும்.அதிமுக கூட்டணி குறித்த முடிவை டெல்லியில் ஜே.பி.நட்டா, அமித்ஷா, நரேந்திரமோடி ஆகியோர்தான் எடுக்க முடியுமே தவிர அண்ணாமலை அல்ல.

”யாருடன் சேர்ந்தால் கரையேறுவோம் என்பது டெல்லிக்கு தெரியும்”

தமிழகத்திலே வலுவான கட்சி எது? யாருடன் கூட்டணி சேர்ந்தால் நாம் கரையேறுவோம் என்பது பாஜகவின் டெல்லி தலைமைக்கு தெரியும். அண்ணாமலைக்கு எதற்கு இந்த பதற்றம், பயம் என்பதை தெளிவுப்படுத்த வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை.

கோவில்பட்டியில் ஒரு தேவையில்லாத கீழ்த்தரமான அநாகரீக செயலை சிலர் செய்துள்ளார்கள். அதற்கு பாஜகவின் மாநில பொறுப்பில் உள்ள சில தலைவர்கள் என்னுடன் தொடர்பு கொண்டு இதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை என்று சொல்லி உள்ளார்கள்.

அண்ணாமலை நடவடிக்கை எடுப்பாரா?

அண்ணாமலை, பாஜக மாநிலத் தலைவர்
அண்ணாமலை, பாஜக மாநிலத் தலைவர்

ஆனால் இந்த கருத்தை முதலில் சொல்ல வேண்டியவர் அண்ணாமலைதான். இந்த சம்பவத்திற்கு முதலில் அண்ணாமலை கண்டனம் தெரிவித்து இருக்க வேண்டும். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

சம்பந்தப்பட்டவர்கள் மீது அண்ணாமலை நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை போல் அண்ணாமலையும் அரசியலில் பக்குவப்படவில்லை என்பதைத்தான் காட்டும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.