EPS: ’சேலம் சிறையில் சாராயம் காய்ச்சியவர்களை தண்டிக்க வேண்டும்’ ஈபிஎஸ் ஆவேசம்
”சிறைச் சாலை என்பது தவறு செய்தவர்களை திருத்துவதற்கான இடமே தவிர, மேலும் மேலும் அவர்கள் தவறுகளை செய்யத் தூண்டும் இடமாகவும், அதற்கு அரசாங்கம் உறுதுணையாக இருப்பதும் சமூக அக்கறை கொண்ட யாராலும் ஏற்க முடியாது.”

ஊழலும், ஊறலும் இரு கண்களாகக் கொண்டு அராஜக விடியா திமுக அரசு செயல்படுவதாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த இரண்டாண்டு கால மக்கள் விரோத திமுக ஆட்சியில், சமூக விரோதிகள் அதிகரித்து வருவதோடு, சமூக விரோதச் செயல்களின் கூடாரமாகவும் தமிழகம் மாறி இருப்பதை அவ்வப்போது அறிக்கைகள் வாயிலாகவும், சட்டமன்றத்திலும் சுட்டிக் காட்டியுள்ளேன்.
தொடர்ந்து இந்த ஆட்சியாளர்களின் செயல்பாடுகளைப் பார்க்கும்போது,"திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்; வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்” என்ற புரட்சித் தலைவரின் வைர வரிகளை முணுமுணுத்தவாறு, மக்கள் தலையில் அடித்துக்கொள்கிறார்கள்.
தமிழகத்தில் ஒருசில இடங்களில், அவ்வப்போது கள்ளச் சாராயம் காய்ச்சுவது இருந்து வந்தாலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலங்களின் போது கள்ளச் சாராயம் காய்ச்சுதல், விற்பனை செய்தல் போன்றவை முழுவதுமாக கட்டுப்படுத்தப்பட்டன. வெளி மாநிலங்களில் இருந்து சாராயம் கடத்தி வரப்படுவதும் முற்றிலும் தடுக்கப்பட்டது. இந்த விடியா திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, கள்ளச் சாராயம் காய்ச்சுவதும், விற்பதும் கன ஜோராக நடந்துவருவது மட்டுமின்றி, விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் 22 பேர் கள்ளச் சாராயம் அருந்தி உயிரிழந்துள்ளனர். அவர்கள் குடித்தது கள்ளச் சாராயமா ? விஷச் சாராயமா? என்ற பட்டிமன்றத்தைத் தான் இந்த விடியா திமுக அரசு நடத்தியதே தவிர, சமூக விரோதச் செயல்களை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.