Edappadi Palaniswami: ஐஜியை மாற்றுவதால் சட்டம் ஒழுங்கு சரியாகி விடுமா? தமிழக அரசுக்கு ஈபிஎஸ் சரமாரி கேள்வி!
ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தை சேர்ந்தவர்கள் தற்போது சரண் அடைந்தவர்கள் மீது சந்தேகம் கொண்டு உள்ளனர். எனவே உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று கூறுகின்றனர், அவர்கள் சந்தேகங்களை போக்குவது அரசின் கடமை என எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.
ஐஜியை மாற்றுவதால் சட்டம் ஒழுங்கு சிறப்பாகி விடுமா என அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.
செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் பற்றி எந்தவித கேள்விகளுக்கும் பதில் இல்லை. நாங்கள் உண்மையான பதில் சொன்னால் திரித்து வெளியிடுகின்றனர் என கூறினார்.
கேள்வி:- சென்னை மாநகர காவல் ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனரே?
ஐஜியை மாற்றுவதால் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்காது. நிர்வாகம் சிறப்பாக இருந்தால்தான் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கும். முதலமைச்சர் சிறப்பாக செயல்பட்டு இருந்தால் சட்டம் ஒழுங்கு காக்கப்பட்டு இருக்கும். பொம்மை முதலமைச்சர் தமிழ்நாட்டை ஆள்வதால் காவல்துறை அதிகாரிகளுக்கு முழு சுதந்திரம் இல்லை. திமுக ஆட்சியில் காவல்துறை முறையாக செயல்படவில்லை. கொலை நடக்காத நாளே இல்லை. ரவுடிகள் ராஜ்யம் நடந்து வருகின்றது, இதை ஒடுக்க காவல்துறைக்கு முழு சுதந்திரம் கொடுக்க வேண்டும்.
கேள்வி:- ஆம்ட்ராங் கொலையில் உண்மையான குற்றவாளிகள் கைது இல்லை என கூறுகின்றார்களே?
ஆம்ஸ்ட்ராங் படுகொலையை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. தேசிய கட்சியின் மாநிலத் தலைவராக உள்ளார். அவர் கொலை திட்டமிட்டு அரங்கேறி உள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன. ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தை சேர்ந்தவர்கள் தற்போது சரண் அடைந்தவர்கள் மீது சந்தேகம் கொண்டு உள்ளனர். எனவே உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று கூறுகின்றனர், அவர்கள் சந்தேகங்களை போக்குவது அரசின் கடமை.
கேள்வி:- வேங்கைவயல் விவகாரத்தில் 2 ஆண்டுகளாக ஒருவரை கூட கைது செய்யவில்லை என நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளதே?
ஒரு திறமையற்ற முதலமைச்சர் தமிழ்நாட்டை ஆண்டு கொண்டு உள்ளார். எல்லா இலாகாவும் தேய்ந்து போய் வருகின்றது. அதை தீர்க்க இந்த ஆட்சிக்கு திறமை கிடையாது.
அதிமுக ஆட்சியில் சேலம் மாநகரம் வளர்ந்து வரும் நகரமாக இருந்தது. பல்வேறு பாலங்கள் கட்டப்பட்டது. ஒரு திட்டத்தை முடித்தால் உடனடியாக மக்கள் பயன்பாடுக்கு கொண்டு வர வேண்டும். ஆனால் எந்தெந்த துறையில் எவ்வளவு கொள்ளை அடிக்கலாம் என்பதுதான் இந்த அரசின் திட்டம்.
கேள்வி:- கோவை, நெல்லை மாநகர மேயர்கள் ராஜினாமா செய்து உள்ளார்களே?
இது குறித்து திமுக தலைவரை கேட்டால்தான் தெரியும். இதை ஒரு உட்கட்சி சண்டையாகதான் நான் கருதுகிறேன். அவர்களுக்குள் ஒற்றுமை கிடையாது. காஞ்சிபுரத்திலும் இதே நிலைதான் தொடர்கின்றது.
கேள்வி:- அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடுகளில் சிபிசிஐடி ரெய்டுகள் நடைபெறுகின்றதே?
வேண்டும் என்றே திட்டமிட்டு திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் உள்ளதால், அதற்கு பழிவாங்கும் விதமாக இதை செய்கின்றனர். இது சிவில் வழக்கு, இதை வேண்டும் என்றே கிரிமினல் வழக்காக மாற்றி நடவடிக்கை எடுக்க முயல்கின்றனர். இது ஒரு ஜோடிக்கப்பட்ட வழக்கு.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:-
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/