HT Politics: விஜய்க்கு எதிரி விஜய் தானா? - மௌனத்தால் தமிழக அரசியலை உடைக்கிறாரா?
2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலின் போது நடிகர் ரஜினிகாந்த்தை விட நடிகர் விஜய்க்கு அமோக வரவேற்பு இருந்தது.
தமிழ்நாடு அரசியலைப் பொறுத்தவரை ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள அரசியல் கட்சிகள் பல்வேறு வியூகங்களை வகுப்பது வழக்கமான ஒன்றுதான். பல்வேறு ஆலோசனைகளைப் பெற்று, பிரச்சாரங்களைச் செய்து திமுக ஆட்சியைக் கைப்பற்றியது.
திமுகவிற்கு அதிமுக மிகப்பெரிய எதிர்க்கட்சியாக இருந்தாலும், நடிகர்களான ரஜினிகாந்த், விஜய் அரசியல் பிரவேசமானது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அவ்வப்போது அறிவிப்புகளைக் கொடுத்து ரஜினிகாந்த் மக்களை அதிர வைத்துக் கொண்டிருந்தார். எதுவும் பேசாமல் அமைதியாக நடிகர் விஜய் தனது தாக்கத்தை அரசியல் களத்தில் நிலைநாட்டினார்.
ரஜினிகாந்த் மற்றும் விஜய் இருவருக்கும் மக்கள் மத்தியில் அதிகமான ஆதரவுகள் இருந்தன. 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலின் போது டெல்லியில் கொடுக்கப்பட்ட அழுத்தத்தின் காரணமாக அவரது வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர்.
தனது படம் வெளியாவதற்கு முன்பு நடத்தப்படும் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் தொடர்ந்து அரசியல் பேசி வந்தார். மெர்சல் திரைப்பட இசை வெளியீட்டு விழாவின் போது ஜிஎஸ்டி வரி குறித்து இலை மறை காய் மறையாக நடிகர் விஜய் பேசினார். அதைத்தொடர்ந்து நடிகர் விஜய்யைக் குறி வைத்துப் பல கண்டனங்கள் எழுந்தன.
அதேசமயம் நடிகர் ரஜினிகாந்த் கையில் எடுத்த அரசியல் குறித்து மக்களுக்குச் சலிப்பு ஏற்பட்டது. ஒரே துறையில் இருந்து நடிகர் விஜய் மற்றும் ரஜினிகாந்த் அரசியல் துறையில் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் இருவரின் பாணியும் வெவ்வேறாக இருந்தன. அதனை மக்களும் உணரத் தொடங்கினார்கள்.
விஜய் வீட்டில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையில் ஒரு ரூபாய் கூட அலுவலர்கள் கைப்பற்ற வில்லை என்பது மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் களமிறங்கிய விஜய் ரசிகர்களுக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்தது. இது நடிகை விஜய் தரப்புக்குக் கிடைத்த முதல் வெற்றியாகும்.
தனது அரசியல் பிரவேசத்தின் போது ரஜினிகாந்த் கொடுத்த பரபரப்பு பேட்டிகள் ஒரு பக்கம் தாக்கம் ஏற்படுத்தினாலும். சினிமாவில் பயணித்துக் கொண்டே அரசியல் களத்தில் நடிகர் விஜய் மௌனமாகப் பயணித்தது பலருக்கும் உருத்தத் தொடங்கியது.
2021 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் நடிகர்கள் அரசியலுக்கு வரத் தேவையில்லை அவர்களது வேலையைப் பார்த்தாலே போதும் எனப் பலர் தங்களது அதிகபட்ச கருத்துக்களைத் தெரிவித்து வந்தனர். இருந்த போதிலும் நடிகர் விஜய்க்கு ஆதரவு அதிகபட்சமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் அரசியலை விட்டு நடிகர் ரஜினிகாந்த் பின்வாங்கினாலும், அவர் களத்தில் இருக்கும் போதே நடிகர் விஜய்க்கு ஆதரவு அமோகமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அமைதியாக இருக்கும் விஜய்க்கு மக்கள் மத்தியில் இவ்வளவு ஆதரவு இருப்பது கவனிக்கத்தக்கது. அதற்கான சரியான காலத்தை எதிர்பார்த்து நடிகர் விஜய் காத்திருக்கிறார் என்று கூறினால் அது மிகையாகாது. ஏதோ ஒரு சூழ்நிலையில் அவருடைய அமைதி வெடித்தே ஆக வேண்டும். எனவே பொறுத்திருந்து பார்ப்போம்.