மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு.. மரண தண்டனை விதிக்கப்பட்ட ஏழு பேர் தண்டனையும் ரத்து செய்தது ஐகோர்ட்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு.. மரண தண்டனை விதிக்கப்பட்ட ஏழு பேர் தண்டனையும் ரத்து செய்தது ஐகோர்ட்!

மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு.. மரண தண்டனை விதிக்கப்பட்ட ஏழு பேர் தண்டனையும் ரத்து செய்தது ஐகோர்ட்!

Divya Sekar HT Tamil
Jun 14, 2024 11:29 AM IST

Doctor Subbiah murder case : நரம்பியல் மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஏழு பேர், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட இருவர் என ஒன்பது பேரையும் விடுதலை செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு.. மரண தண்டனை விதிக்கப்பட்ட ஏழு பேர் தண்டனையும் ரத்து செய்தது ஐகோர்ட்!
மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு.. மரண தண்டனை விதிக்கப்பட்ட ஏழு பேர் தண்டனையும் ரத்து செய்தது ஐகோர்ட்!

மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு

பொன்னுசாமியின் மனைவி மேரி புஷ்பம் மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த கபடி வீரர் ஏசுராஜன் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்தது சென்னை அமர்வு நீதிமன்றம். இதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில் இன்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அதன்படி நரம்பியல் மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஏழு பேர், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட இருவர் என ஒன்பது பேரையும் விடுதலை செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நிலப் பிரச்னை தொடர்பாக சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் பிரபல நரம்பியல் மருத்துவர் சுப்பையா, கடந்த 2013 ஆண்டு செப்டம்பர் மாதம் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

மேல் முறையீடு

இதுதொடர்பான வழக்கில், அரசு பள்ளி ஆசிரியர் பொன்னுசாமி, அவரின் மகன்களான வழக்கறிஞர் பாசில், என்ஜினீயரான போரிஸ் மற்றும் வில்லியம், டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமார், என்ஜினீயர் முருகன், செல்வபிரகாஷ் ஆகிய ஏழு பேருக்கு மரண தண்டனையும், பொன்னுசாமியின் மனைவி மேரி புஷ்பம் மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த கபடி வீரர் ஏசுராஜன் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் விதித்து, கடந்த 2021 ஆகஸ்ட் மாதம் சென்னை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

பொன்னுசாமி, பாசில், போரிஸ், வில்லியம், டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமார் உள்ளிட்ட ஏழு பேருக்கும் விதிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதி செய்ய கோரி விசாரணை நீதிமன்றம், வழக்கு தொடர்பான விபரங்களை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு அனுப்பிவைத்தது.

இதேபோல, ஏழு பேரும் மரண தண்டனையை எதிர்த்தும், ஆயுள் தண்டனையை எதிர்த்து மேரி புஷ்பம் மற்றும் ஏசுராஜன் ஆகியோரும் மேல் முறையீடு செய்திருந்தனர்.

முறையாக நிரூபிக்கவில்லை

இந்த வழக்குகளை நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் சுந்தர் மோகன் அமர்வு விசாரித்தது. குற்றவாளிகள் தரப்பில், விசாரணை நீதிமன்றம் முறையாக தங்களின் வாதங்களை கருத்தில் கொள்ளவில்லை. கொலை, கூட்டுச் சதி, உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் காவல் துறை தரப்பில் முறையாக நிரூபிக்கவில்லை என வாதிடப்பட்டது.

காவல்துறை தரப்பில், அனைத்து தரப்பு வாதங்களை முழுமையாக கவனத்தில் கொண்டு விசாரணை நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது. விசாரணை நீதிமன்றம் விதித்த தண்டனை உறுதி செய்ய வேண்டும் என வாதிடப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்கள் நிறைவடைந்ததை அடுத்து, வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் சுந்தர் மோகன் அமர்வு, இன்று தீர்ப்பளித்தது.

அனைவரும் விடுதலை

குற்றம் சாட்டப்பட்ட ஒன்பது பேருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை காவல் துறை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்க தவறி விட்டது எனக் கூறி, மரண தண்டனை விதிக்கப்பட்ட ஏழு பேர், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட இருவர் என ஒன்பது பேருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். 

மேலும் ஒன்பது பேரும் வேறு வழக்குகளில் தேவையில்லை என்றால் உடனடியாக விடுதலை செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.