Dayanaithi Maran vs Nirmala Seetharaman: நிர்மலா சீதாராமன் வாயில் வடை சுடுகிறார்! விட்டு விளாசிய தயாநிதி மாறன்!
Dayanaithi Maran vs Nirmala Seetharaman: தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய மெட்ரோ ரயிலுக்கான மத்திய அரசின் பங்கு நிதி நிலுவையில் உள்ளது. இது குறித்து தமிழ்நாடு முதல்வர் நிதிக்காக பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனர்
வாயில் வடை சுடுவது போல் மத்திய பட்ஜெட் உள்ளதாக திமுக எம்.பி தயாநிதி மாறன் குற்றம் சாட்டி உள்ளார்.
மூன்றாவது முறையாக பொறுப்பேற்று உள்ள மோடி அரசின் சார்பில் முதல் நிதிநிலை அறிக்கை நாடாளுமன்ற மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
நிர்மலா சீதாராமன் உரை
நாடாளுமன்ற மக்களவையில் பட்ஜெட் உரையை வாசித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "பிரதமர் மோடி தலைமையிலான அரசாங்கத்தின் மீது இந்திய மக்கள் நம்பிக்கை வைத்து, வரலாற்று சிறப்புமிக்க மூன்றாவது முறையாக அதை மீண்டும் தேர்ந்தெடுத்துள்ளனர். ஏழைகள், பெண்கள், விவசாயிகள், இளைஞர்களை மையப்படுத்தி பட்ஜெட் தயாரிக்கப்பட்டு உள்ளது என தெரிவித்தார்.
9 முன்னுரிமைகள்
ஒன்பது முன்னுரிமைகளில் உற்பத்தி, வேலைகள், சமூக நீதி, நகர்ப்புற மேம்பாடு, எரிசக்தி பாதுகாப்பு, உள்கட்டமைப்பு, புதுமை மற்றும் சீர்திருத்தங்கள் ஆகியவை அடங்கியதாக இருக்கும் என தெரிவித்த அவர், காலநிலையை எதிர்க்கும் விதைகளை உருவாக்குவதற்கான ஆராய்ச்சியின் விரிவான மதிப்பாய்வை அரசாங்கம் மேற்கொள்கிறது என தெரிவித்தார். அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஒரு கோடி விவசாயிகள் இயற்கை விவசாயத்தில் ஈடுபடுவார்கள் என்ற அவர், உற்பத்தியை அதிகரிக்க பெரிய அளவிலான காய்கறி உற்பத்தி கிளஸ்டர்கள் ஊக்குவிக்கப்படும் என்று கூறினார்.
தயாநிதி மாறன் விமர்சனம்
பட்ஜெட் மீதான விவாதத்தின் மீது நாடாளுமன்ற மக்களவையில் திமுக எம்.பி தயாநிதி மாறன் பேசினார். அப்போது, ’தமிழ் மிகவும் சிறப்பான மொழி! தமிழ் மொழியில் பேச முடியாமல் போனது எனது துரதிர்ஷ்டம். அடுத்த பிறவியில் நான் தமிழனாக பிறக்க ஆசைப்படுகிறேன்’ என நமது பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் முதல் கட்ட நாடாளுமன்றத் தேர்தலின் போது பேசினார்.
ஆனால் நாடாளுமன்றத் தேர்தலின் கடைசி கட்டத்தில் ‘ஒரிசா மாநிலத்தின் கட்டுப்பாட்டை தமிழர்களுக்கு எப்படி கொடுக்க முடியும்’ என்று சொன்னார். இதனை தமிழர்கள் எப்போதும் மறக்கமாட்டார்கள்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக பதவியேற்ற போது, எனக்கு வாக்களித்த மக்களுக்காக மட்டும் பாடுபடாமல், வாக்களிக்காத மக்களுக்காகவும் பாடுபடுவேன் என்று கூறினார். ஆனால் நமது பிரதமர், அவர் கட்சிக்கு வாக்களித்த மக்களுக்காக உழைக்காமல் அவருக்கு ஆதரவளிக்கும் கட்சிகளுக்காக மட்டும் உழைக்கிறார்.
தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய மெட்ரோ ரயிலுக்கான மத்திய அரசின் பங்கு நிதி நிலுவையில் உள்ளது. இது குறித்து தமிழ்நாடு முதல்வர் நிதிக்காக பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை மெட்ரோ ரெயில் இரண்டாம் கட்ட பணிகளுக்கு இன்னும் ஒரு ரூபாயை கூட தரவில்லை. ரஷ்யா - உக்ரைன் போரில் போது குறைந்த விலையில் நமக்கு எண்ணெய் கிடைத்தது. ஆனால் அதனால் சாதாரண மக்களுக்கு எந்த பயனும் கிடைக்கவில்லை. இது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
தமிழ்நாட்டில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டபோது, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வந்து பார்த்தார். ஆனால் இது வரை ஒரு ரூபாய் கூட வரவில்லை, உண்மையில் அவர் அங்குள்ள கோவில்களுக்கு சென்று அங்குள்ளவர்களிடம் உண்டியலில் பணம் போடாமல் நேரடியாக அர்ச்சகரிடம் பணத்தை கொடுங்கள் என்று கூறினார்.
நான் தமிழக மக்களிடம் சென்று மத்திய அரசுக்கு வரி செலுத்தாதீர்கள். ஏனென்றால் நாம் கட்டும் பணம் எல்லாம் வேறு மாநிலங்களுக்கு சென்றுவிடுகின்றது என்று கூறினால் சரியாக இருக்குமா? என கூறீனார்.
உங்களுக்கு வந்தால் ரத்தம், எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா என்று கேள்வி எழுப்பிய தயாநிதி மாறன், வாயில் வடை சுடுவது போல் பட்ஜெட் உள்ளதாக குற்றம் சாட்டினார்.
டாபிக்ஸ்