EPS vs DMK:ஜாபர்சாதிக் விவகாரம்! ஒரு கோடி கேட்டு எடப்பாடி பழனிசாமி மீது திமுக மான நஷ்ட வழக்கு! பேச தடை விதிக்க கோரிக்கை!
”ADMK Vs DMK: போதை பொருள் கடத்தல் விவகாரத்தில் தன்னை தொடர்புபடுத்தி பேசியதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோர் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழக்கு தொடர்ந்தார். இந்த நிலையில் திமுக சார்பில் ஈபிஎஸ் மீது மான நஷ்ட வழக்கு தொடரப்பட்டுள்ளது.”
போதை பொருள் கடத்தல் வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஒரு கோடி கேட்டு திமுக சார்பில் மான நஷ்ட வழக்கு தொடரப்பட்டுள்ளது.
திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் செய்துள்ள மனுவில், போதை பொருள் வழக்கில் திமுகவை தொடர்புபடுத்தி பேச அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
போதைப் பொருள் கடத்தல் வழக்கின் பின்னணி என்ன?
இந்தியாவில் இருந்து தேங்காய் பவுடர், திராட்சை, உலர் பழங்கள் மற்றும் ஹெல்த் மிக்ஸ் பாக்கெட்டுகளில் மறைத்து வைத்து மெதம்பெடமைன் எனும் போதைப்பொருள் தயாரிக்கப் பயன்படும் முக்கிய வேதிப்பொருளான சூடோபெட்ரின் சர்வதேச நாடுகளுக்கு கடத்தப்படுவதாக, டெல்லியில் உள்ள மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து மேற்கு டெல்லியின் கைலாஷ் பார்க் பகுதியில் உள்ள குடோனில் கடந்த 15ஆம் தேதி போதைப் பொருள் தடுப்பு பிரிவினரும் டெல்லி போலீசாரும் சோதனை செய்தனர். இதில் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 50 கிலோ வேதிப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து அங்கிருந்த சென்னையைச் சேர்ந்த முகேஷ், முஜிபுர், விழுப்புரத்தைச் சேர்ந்த அசோக்குமார் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த கடத்தலில் மூளையாக செயல்பட்டு வந்தவர் தமிழகத்தைச் சேர்ந்த ஜாபர் சாதிக் என்பது அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்தது.
திமுக அயலக அணி நிர்வாகியாக இருந்த ஜாபர் சாதிக்கை அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து திமுக நீக்கியது.
ஜாபர் சாதிக்கை விசாரணைக்கு ஆஜராகுமாறு சென்னை சாந்தோமில் உள்ள அவரது வீட்டில் கடந்த மாதம் 23-ம் தேதி சம்மன் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. ஆனால், அவர் தலைமறைவானார். இதையடுத்து அவரது வீட்டில் சோதனை நடத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் முக்கிய ஆவணங்களை கைப்பற்றி வீட்டுக்கு சீல் வைத்தனர். மேலும் ஜாபர் சாதிக், வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க, விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸும் அனுப்பப்பட்டது.
இதற்கிடையில், தலைமறைவாக இருந்து வந்த ஜாபர் சாதிக் கடந்த மார்ச் 9 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். ஜாபர் சாதிக்கை கைது செய்த மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் 7 நாட்கள் காவலில் எடுத்து அவரிடம் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
இந்தநிலையில் தான் ஜாபர் சாதிக்கின் கூட்டாளி சதா என்பவரை மார்ச் 13 அன்று சென்னையில் வைத்து மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ரூ.2,000 கோடி சூடோபெட்ரைன் என்ற போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஏற்கனவே 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திமுகவை கண்டித்து ஈபிஎஸ் போராட்டம்!
தமிழ்நாட்டில் போதை பொருள் பரவலை கட்டுப்படுத்த கோரி தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் மாவட்டம் தோறும் போராட்டம் நடத்தப்பட்டது. மேலும் போதை பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக் திமுகவில் இருந்தது குறித்து எடப்பாடி பழனிசாமி பேசி இருந்தார்.
திமுக சார்பில் வழக்கு!
இந்த நிலையில் போதை பொருள் கடத்தல் விவகாரத்தில் தன்னை தொடர்புபடுத்தி பேசியதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோர் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த நிலையில் திமுக சார்பில் ஈபிஎஸ் மீது மான நஷ்ட வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
ட்விட்டர் : https://twitter.com/httamilnews
பேஸ்புக்: https://www.facebook.com/HTTamilNews
யூடியூப்: https://www.youtube.com/@httamil
கூகுள் நியூஸ்: https://bit.ly/3onGqm9