Kilambakkam Bus Stand: ’நீங்களே ஒத்துக்கிட்டீங்க!’ கிளாம்பாக்கம் தொடர்பாக ஸ்டாலின் - ஈபிஎஸ் இடையே வாதம்
”சிறு பிரச்னை மட்டுமல்ல, பெரும், பெரும் பிரச்னைகள் எல்லாம் இருந்தது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈபிஎஸ்க்கு பதில்!”

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடைபெற்றது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தால் மக்கள் சந்திக்கும் சிரமங்கள் குறித்து அதிமுக எம்.எல்.ஏ செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்து பேசிய சிஎம்டிஏ துறை அமைச்சர் சேகர்பாபு, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கழிப்பறை இல்லை, குடிநீர் வசதி இல்லை, உணவு இல்லை என்று சொல்லி பயணிகள் யாரும் புகார் சொல்லவில்லை. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் 100 சதவீத பயன்பாட்டுக்கு வந்துள்ளது. வயது முதிந்தவர்கள் பஸ்களில் ஏற பேட்டரி கார்கள் உள்ளது. தூங்குபவர்களை எழுப்பலாம், தூங்குபவர்களை போல நடிப்பவர்களை எழுப்ப முடியாது. இந்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு எதிர்க்கட்சிகள் சாடலுக்கு என்ன காரணம் என யோசித்தேன். சிறப்பு வாய்ந்த பேருந்து நிலையம் முதற்கட்டமாக தொடங்கப்படும் போது சிறுசிறு பிரச்னைகள் இருப்பது இயல்பு, காலப்போக்கில் சரி செய்து விடலாம். ஆனால் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் என பெயர் வைத்ததால்தான் இந்த அவதூறுகளை இவர்கள் பரப்பி வருகிறார்கள்.
சட்டமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் வாருங்கள், என்ன வசதிகள் என்பதை காண்பிக்கிறோம். குறைகளை சொல்லுங்கள் அதை நிறைவேற்றித்தர தயாராக உள்ளோம் என கூறினார்.