Ameer: ‘இஸ்லாமியர்களுக்கு அரணா? திமுகவிற்கு போடும் ஓட்டை பாஜகவிற்கு போட்டு விடலாம்’ இயக்குனர் அமீர் ஆவேசம்!
2YearsOfDMKgovt: ‘இதயத்தில் இடமிருக்கு, உங்களுக்கு பாதுகாப்பா இருக்கேன், இப்தாரில் கலந்து கொள்வது இதிலெல்லாம் எந்த பெருமையும் இல்லை’
திமுகவை ஆதரித்து வந்த இயக்குனர் அமீர், திமுகவின் இரண்டு ஆண்டு நிறைவுக்கு பின் அக்கட்சியையும், அக்கட்சியின் தலைமையிலான அரசையும் கடுமையாக விமர்சித்துள்ளார். தி டிபேட் சேனலில் அவர் அளித்த பேட்டி இதோ:
‘‘கடுமையான நெருக்கடியான சூழலில் தான் முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றார். ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினாக…’ என்று அவர் பதவியேற்ற போது, சாமானியனாக எனக்கு விசில் அடிக்க வேண்டும் என்று தோன்றியது. ஸ்டாலினுக்கு முதல்வர் ராசியே இல்லை என்று சொன்னதை முறியடித்து முதல்வரானவர் என்பது எனக்கு உண்மையில் மகிழ்ச்சியளித்தது. பொறுப்பேற்ற பின் நன்றாக தான் எல்லாம் போனது.
கடந்த நான்கு ஐந்து மாதமாக ஒரு தொந்தரவு இருப்பதாக உணர்கிறேன். இந்த ஆட்சி எதை நோக்கி போகிறது? ஒருவேளை பாஜக உடன் அதிமுக நேரடி கூட்டணியாகவும், திமுக மறைமுக கூட்டணியாக இருப்பதாக சந்தேகம் எழுகிறது. அப்படி தான் திமுக செயல்பாடு உள்ளது.
8 வழிச்சாலையை கடந்த ஆட்சியில் திமுக எதிர்த்தது. நானும் எதிர்த்தேன். ஆனால் திமுக இப்போது ஆதரிக்கிறது. ஏன்? அன்று எதிர்த்தது இன்று எப்படி சரியாக வரும்? அப்போ அது அரசியலா? திடீர்னு நொச்சிக்குப்பத்திலிருந்து மக்களை வெளியேற்றுகிறார்கள், அங்கே இருப்பவர்கள் எங்கே போவார்கள்? கொஞ்சம் கொஞ்சமாக பூர்வீக மக்களை வெளியேற்றுவதை தான் அரசு செய்யுமா?
வளர்ச்சி, வளர்ச்சி என்று சொல்லி வேறு மாநில, வேறு நாட்டிலிருந்து வருபவனுக்கு எல்லா வசதியையும் செய்து கொடுத்து, பூர்வீகமாக இருப்பவனை வெளியேற்ற வேண்டுமா? கடலில் மீன் பிடித்து கடலுக்கு அருகில் தானே விற்க முடியும்? அவனை எதற்கு விரட்டுகிறீர்கள்? நீதிமன்றம் மீது பழி போட முடியாது. அப்படி பார்த்தால் கடந்த ஆட்சியிலும் நீதிமன்றங்கள் சொல்லி எடுத்த நடவடிக்கைகளும் விமர்சிக்கப்பட்டதே. இப்போதும் அது தானே நடக்கிறது.
திடீர்னு 12 மணி நேர வேலை மசோதாவை நிறைவேற்றினார்கள். அதன் பின் பின்வாங்கியதை நான் வரவேற்கிறேன். பின்வாங்குவதும் சாதாரண விசயமில்லை. அதை பாராட்டுகிறேன். ஆனால், அந்த திட்டத்தை ஏன் கொண்டு வந்தீர்கள்? என்ன காரணம்? போராடும் மக்களுக்கு பதில் சொல்லாமல், எவனோ ஒரு கார்ப்பரேட்காரனுக்காக 12 மணி நேர வேலை சட்டத்தை போடுறீங்க.
திடீர்னு கல்யாண மண்படத்தில் குடிக்கலாம் என்கிறீர்கள். பூரண மதுவிலக்கு கொண்டு வருவோம் என்று சொன்னீங்க, நீட் தேர்வு ரத்து என்று சொன்னீங்க, அதையெல்லாம் விட்டுட்டு கல்யாண மண்டபத்துல, மைதானத்துல தண்ணி அடிங்கனு எதுக்கு ஆணை போடுறீங்க? கல்யாண வீட்டில் குடித்துவிட்டு வெளியே போனால் போலீஸ் பிடிக்காமல் இருக்குமா? போலீஸ் பிடிக்கும் என்பதற்காக கல்யாண வீட்டிலேயே இருக்க முடியுமா?
சமீபத்தில் நடக்கும் விசயங்களை எல்லாம் முதல்வர் கவனத்தில் கொள்ள வேண்டும். இல்லையென்றால் அவர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்த என்னைப் போன்றவர்கள் எல்லாம் என்ன செய்ய வேண்டியிருக்கும்!
சிறுபான்மையினருக்கு அரணாக திமுக இருக்கிறது என்று சொல்வதை எல்லாம் ஏற்க முடியாது. அப்படி யாரும் அரணாக இருக்க முடியாது, இருக்கவும் மாட்டாங்க. அது எப்படி அரணா இருக்க முடியும்? அரணாக இருந்து செய்த காரியத்தை பட்டியலிட முடியுமா? தமிழ்நாட்டில் ஜாதி, மத மோதல் இல்லாமல் இருப்பது ஆண்ட அனைத்து கட்சிக்கும் பங்கு இருக்கிறது. அது இல்லாமல் சிறுபான்மையினருக்கு திமுக செய்தது என்ன?
யாரும் தீவிரவாதத்தை ஆதரிக்கவில்லை. குண்டு வைத்தால் கொலை செய்தால் யாரா இருந்தாலும் தூக்கி போடுங்க. தமிழகத்தில் நீண்ட நாட்களாக சிறைவாசிகளாக உள்ள கைதிகளை சட்டத்திற்கு உட்பட்டு விடுதலை செய்யுங்கள் என்று கோரிக்கை உள்ளது. அண்ணா, பெரியார், கலைஞர் பிறந்தநாளில் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள், இது இஸ்லாமிய கைதிகளுக்கு பொருந்தாது என்று ஆணை போடுகிறீர்கள். அது ஏன்? அப்போ அந்த இஸ்லாமியனை தமிழனா? திராவிடனா? இந்தியனா? எதில் சேர்க்கப் போகிறீர்கள்?
ஆட்சிக்கு வருவதற்கு முன் சொன்னதை தான், ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகளாக சொல்லிக் கொண்டிருக்கிறார் ஸ்டாலின். ஆளுநருக்கு அனுப்பினால் அவர் கையெழுத்து போட்டுவிடுவாரா? எதிர்கட்சிகள் எதிர்ப்பை மீறி ஒரு சட்டத்தை சட்டமன்றத்தில் இயற்றும் திமுக, இஸ்லாமிய கைதிகள் விடுதலையை ஆளுநருக்கு அனுப்பினால் எப்படி? இது என்ன அரசியல்?
ஓராண்டிற்கு முன் இந்த ஆட்சியை பாராட்டினேன். இப்போது விமர்சிக்கிறேன். நான் கட்சி சார்ந்த விமர்சிக்கவில்லை. திமுக இஸ்லாமியர்களுக்கு அரணாக இருப்பதாக கூறும் போது, அது இல்லை என்பதை நான் கூறியே ஆக வேண்டும். இதயத்தில் இடமிருக்கு, உங்களுக்கு பாதுகாப்பா இருக்கேன், இப்தாரில் கலந்து கொள்வது இதிலெல்லாம் எந்த பெருமையும் இல்லை.
இஸ்லாமியர்களும், இஸ்லாமிய இயக்கங்களும் மீண்டும் மீண்டும், திமுக தான் இஸ்லாமியர்களின் பாதுகாவலர்கள் என்று சொல்வது அது அதை விட ஏமாற்று அரசியல். இஸ்லாமியர்கள், அவர்களின் உரிமையை அவர்கள் தான் கேட்டு பெற வேண்டும். சனாதனவாதிகள் ஏன் இஸ்லாமியர்களை வெறுக்கின்றனர்? இஸ்லாமிய கைதிகள் ஏன் விடுதலை செய்யப்படவில்லை? இந்த இரண்டு கேள்விக்கு எனக்கு பதில் வேண்டும். பாஜகவும், திமுகவும் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.
திமுகவின் செயல்பாடுகளில் பாஜக தவறாக நினைத்து விடுமோ என்கிற பயம் இருப்பதாக தெரிகிறது. நீங்கள் எதை செய்தாலும் அவர்கள் தப்பா தான் நினைப்பார்கள். அதற்காக இவர்கள் சமரசம் செய்து கொள்கிறார்கள். ‘கிவ் அண்ட் டேக்’ பாலிசியாக இந்த அரசு போய் கொண்டிருக்கிறது. இதுக்கு நான் நேரடியாகவே பாஜகவுக்கு ஓட்டு போட்டு விடலாமே? என் பக்கம் எப்போ தான் நிப்பீங்க? என்கிற கேள்வி இருக்கிறது.
ஜெயலலிதா ஆட்சியில் ஆர்.எஸ்.எஸ்., முகாம் நடக்கவில்லை, திமுக ஆட்சியில் நடக்கிறது. அப்போ எந்த அடிப்படையில் நீங்கள் இஸ்லாமியர்களின் அரண் என்கிறீர்கள்? கேட் ஓப்பனாகிவிட்டது. விஸ்வரூபம் எடுக்கும் போது நான் உயிரோடு இருப்பேனா என தெரியாது. ஆனால், என் பிள்ளைகள் நிலையை நான் நினைத்து பார்க்கிறேன். வடமாநிலங்களில் சந்திக்கும் பிரச்னை, 20 ஆண்டுகளில் தமிழகத்திலும் சந்திக்கலாம் என்கிற அச்சத்தில் நான் பேசுகிறேன்,’’
என்று அந்த பேட்டியில் மனதில் உள்ள குமுறல்கள் வெடித்து சிதறும் வகையில் அமீர் பேட்டியளித்துள்ளார்.