Kamalhasan: ’ஒத்த சீட்டுக்காக இப்படியா சீச்சீ!’ கமலை வெளுக்கும் நெட்டிசன்கள்!
”Chennai Flood: சென்னை வெள்ளம் தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவை பலரும் விமர்சித்து வருகின்றனர்”
சென்னை வெள்ளம் தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவை பலரும் விமர்சித்து வருகின்றனர்.
மிக்ஜாம் தீவிர புயல் தற்போது நெல்லூருக்கு வடகிழக்கில் 30 கிமீ, சென்னைக்கு சுமார் 170 கிமீ தொலைவிலும் நிலைக்கொண்டு இருக்கிறது. தொடர்ந்து வடதிசையில் நகர்ந்து தெற்கு ஆந்திர பகுதியான பாபட்லாவில் கரையை கடக்கும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் நேற்று முன் தினம் முதல் விடிய விடிய பெய்த தொடர் மழையால் கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக காட்டுப்பாக்கம் பகுதியில் 29 செ.மீ மழை பதிவாகி உள்ளது. நுங்கம்பாக்கத்தில் 24 செ.மீ, மீனம்பாக்கத்தில் 19 செ.மீ, அண்ணா பல்கலைக்கழகத்தில் 18 செ.மீ, நந்தனத்தில் 18 செ.மீ, பள்ளிக்கரணையில் 17 செ.மீ மழை பதிவாகி உள்ளது.
சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்த நிலையில் மாநகர் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
சென்னை மழைநீர் வடிகால் பணிகளுக்காக அரசு ஒதுக்கிய 4 ஆயிரம் கோடி ரூபாய் என்ன ஆனது என அதிமுக மற்றும் பாஜக கட்சிகளை சேர்ந்தவர்கள் விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னை மழை தொடர்பாக நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் ’எக்ஸ்’ சமூகவலைத்தளத்தில் பதிவிட்ட ட்வீட் பேசு பொருள் ஆகி உள்ளது. அதில் ”அரசு எவ்வளவுதான் முன்னெச்சரிக்கையோடு செயல்பட்டாலும் இயற்கைச் சீற்றங்களின் விளைவுகளை ஓர் எல்லை வரைதான் கட்டுப்படுத்த முடியும். இந்தத் தருணத்தில் நமது பாதுகாப்பை உறுதி செய்துகொண்டு, அரசு இயந்திரத்தோடு கைகோர்த்து செயல்பட்டு நிலைமை சீரடைய உதவ வேண்டியது அவசியம். மிக்ஜாம் புயல் ஏற்படுத்திய கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்யும்படி மக்கள் நீதி மய்ய உறவுகளை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என கூறி இருந்தார்.
சென்னை மழை தொடர்பாக கடந்த 2020ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் நடிகர் கமல்ஹாசன் பதிவிட்ட ட்விட்டர் பதிவை சுட்டிக்காட்டி, அதிமுக மற்றும் பாஜகவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
கடந்த 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 22ஆம் தேதி கமல்ஹாசன் பதிவ்ட்டுள்ள ட்விட்டர் பதிவில், “ஒரு மணி நேர மழை. தள்ளாடுகிறது தமிழகத்தின் தலை. வடகிழக்குப் பருவமழை வரட்டுமா என்று மிரட்டுகிறது. கருணை மழையைச் சேகரிக்க நீர் நிலைகள் தயார் செய்யப்படவில்லை. கடந்த வெள்ளத்தில் கற்ற பாடமென ஏதுமில்லை. வடிகால்கள் வாரப்படவில்லை.குழந்தைகள் மருத்துவமனையிலும் நீர் புகுவது குறையவில்லை. கரையோர மாவட்டங்கள் மேல் கடைக்கண்ணாவது வையுங்கள்” என பதிவிட்டிருந்தார்.
”ஒரு எம்.பி சீட்டுக்காக இப்படி மாறிவிட்டாரே?” என கூறி கமல்ஹாசனை நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
சென்னை மழை குறித்த கமலஹாசனின் ட்விட்டர் பதிவு வலைத்தளங்களில் பேசுபொருள் ஆகி உள்ளது.