Half Fee: 'அரசு பஸ்ஸில் நாட்டுப் புறக் கலைஞர்களுக்கு பாதிக் கட்டணம் தான் வசூலிக்கணும்': அமைச்சர் சிவசங்கர் அறிவுறுத்தல்
Half Fee: ‘அரசு பேருந்தில் நாட்டுப் புறக் கலைஞர்களுக்கு பாதிக் கட்டணம் தான் வசூலிக்கணும்’ என்று அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Half Fee: தமிழ்நாடு அரசுப்போக்குவரத்து கழகப்பேருந்துகளில் கலை பண்பாட்டுத் துறையின்கீழ் இயங்கும் நாட்டுப் புறக் கலைஞர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள நாட்டுப் புறக்கலைஞர்கள் மற்றும் இதரக் கலைஞர்கள் தொழில் முறையாக பயணம் செய்யும்போது, 50% பயணக் கட்டணச் சலுகையுடன் பயணம் மேற்கொள்ளவும் மற்றும் அவர்களின் இசைக் கருவிகள்/தொழில் கருவிகளை கட்டணமில்லாமல் எடுத்துச் செல்லவும், ஏற்கனவே நடைமுறையில் உள்ள சலுகைகளை எந்த தொய்வும் இன்றி முறையாக வழங்கவேண்டும் என்று தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு அரசுப் பேருந்தில் நாட்டுப்புறக்கலைஞர்களுக்கு நிகழ்ந்தது என்ன? அமைச்சரின் விளக்கம்?:
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், '' சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த திரு.ஆகாஷ் என்ற தமிழ்நாடு இசைக் கல்லூரியில் கிராமிய இசை பயிலும் மாணவர், தனது இசைக்கருவியுடன் திண்டுக்கல், வடமதுரையில், தனது நிகழ்ச்சியை முடித்து திரும்பும்போது, திண்டுக்கல்லில் இருந்து மதுரை நோக்கி செல்லும் பேருந்தில் தனது இசைக்கருவிகளுடன் பயண அனுமதி மறுக்கப்பட்டது என்று தெரிவித்தார்.
இது குறித்து நடத்துநரிடம் விசாரணை மேற்கொண்டபோது, அவர் எடுத்துவந்த பொருள் பேருந்தின் உள்ளே லக்கேஜ் கேரியரில் நீட்டிக்கொண்டு இருந்ததால், இது மின் விளக்குகள் மற்றும் பக்கவாட்டு கண்ணாடிகளை உடைத்து விடும் என்பதால், 6 நபர் இருக்கை அருகில் உள்ள இடத்தில் இறக்கி வைக்குமாறு நடத்துநர் கூறியுள்ளார்.
ஆனால், அவர் தவறான புரிதல் காரணமாக வீடியோ எடுத்துக்கொண்டு தாமாக பேருந்திலிருந்து இறங்கி சென்று விட்டதாக தெரிய வருகிறது.
இக்கலைஞர்களுக்கு முழுமையாக சலுகைகளை வழங்கவேண்டும் என்ற நோக்கத்தில் கீழ்க்கண்ட விளக்கம் அளிக்கப்படுகிறது.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகப் பேருந்துகளில் கலை பண்பாட்டுத்துறையின்கீழ், இயங்கும் நாட்டுப் புறக் கலைஞர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள நாட்டுப் புறக் கலைஞர்கள் மற்றும் இதரக் கலைஞர்கள் தொழில் முறையாக பயணம் செய்யும்போது 50% பயணக் கட்டணச் சலுகையுடன் பயணம் மேற்கொள்ளவும் மற்றும் அவர்களின் இசைக் கருவிகள்/தொழில் கருவிகளை கட்டணமில்லாமல் எடுத்துச் செல்லவும், அரசாணைகள் 1992, 1993, 2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப்பேருந்துகளில் நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு 50% கட்டணச்சலுகை:
அதன்படி அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் நாடகம் மற்றும் கிராமிய கலைஞர்களுக்கு ஏற்கனவே 50 சதவிகித கட்டணச் சலுகை வழங்கப்பட்டுள்ளது. மேற்படி கலைஞர்கள் தங்கள் வாத்தியக் கருவிகளை, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் கட்டணமில்லாமல் எடுத்து செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஆடை அணிகலன்கள்,ஒப்பனைப் பொருட்கள், இசை வாத்தியக் கருவிகள், ஆர்மோனியம், தபேலா, டோலக், மிருதங்கம், நையாண்டி மேளம், நாதஸ்வரம், பம்பை, உறுமி, உடுக்கை, தவில், கொல்லிக் கட்டை, தப்பாட்டம், மாடு ஆட்டம், மயில் ஆட்டம், காவடி ஆட்டம், கரகம் ஆட்டம், பொய்கால் குதிரை மற்றும் இதர சிறிய அளவிலான கருவிகள் பேருந்தில் எடுத்துச் செல்லலாம் என்று அனுமதிக்கப்பட்டுள்ளது.
மேலும், நாட்டுப் புறக் கலைஞர்கள், இதரக் கலைஞர்கள் மற்றும் இசைப்பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டுள்ள முதலமைச்சர் அவர்கள், அந்த கலைஞர்களின் வாழ்க்கையில் மேலும் முன்னேற்றம் அடையவேண்டும் என்று ஊக்கம் அளித்து, உறுதுணையாக இருக்கும் இந்த அரசு, இந்நிகழ்வை கவனத்தில் கொண்டு, இனி வரும் காலங்களில், இது போன்ற ஒரு நிகழ்வுகள் நடைபெறாமல் இருக்கவேண்டும் என்பதற்காக அனைத்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக இயக்குநர்களுக்கும், அதிகாரிகளுக்கும், மற்றும் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், நாடகக் கலைஞர்கள் எடுத்து வரும் கலைப் பொருட்கள் பிற பயணிகளுக்கு இடையூறுகள் இல்லாதபடி பாதுகாப்பான முறையில் வைக்கப்பட வேண்டும் எனவும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாபிக்ஸ்