TN Police vs TNSTC: முடிவுக்கு வந்தது போலீஸ்-போக்குவரத்து துறை மோதல்! கட்டி அணைத்து சமாதானம்!
TN Police vs TNSTC: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக நிலவி வந்த போலீஸ் மற்றும் அரசு போக்குவரத்துதுறை இடையே ஆன மோதல் முடிவுக்கு வந்தது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக நிலவி வந்த போலீஸ் மற்றும் அரசு போக்குவரத்துதுறை இடையே ஆன மோதல் முடிவுக்கு வந்தது.
காவலர் நடத்துனர் இடையே வாக்குவாதம்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி வழியாக தூத்துக்குடிக்கு சென்ற அரசுப் பேருந்தில் காவலர் ஆறுமுகப்பாண்டி காவல்துறை சீருடையில் இருப்பதால் டிக்கெட் எடுக்க முடியாது என கூறி அரசு பேருந்து நடத்துனரிடம் வாக்குவாதம் செய்தார்.
தொடர்ந்து நடத்துநர் அரசு பேருந்தில் காவலர்கள் பயணிக்க வாரண்ட் வேண்டும் அப்படி இல்லாத பட்சத்தில் டிக்கெட் எடுக்க வேண்டும் என கூறியதை தொடர்ந்து, அவர் எல்லோருக்கும் ஒரே விதிமுறைகளை கொண்டு வாருங்கள் போக்குவரத்து துறையில் பணியாற்றும் தொழிலாளர்களை மட்டும் இலவசமாக பேருந்துகளில் ஏற அனுமதிக்கிறீர்கள். நாங்களும் அரசு வேலை பார்ப்பவர்கள் தான் எங்களையும் இலவசமாக நீங்கள் பயணிக்க விட வேண்டும் என தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
போக்குவரத்து துறை விளக்கம்
இதையடுத்து இது தொடர்பாக போக்குவரத்து துறை சார்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில், "காவலர்கள் பேருந்தில் பயணிக்கும் போது கட்டாயம் டிக்கெட் எடுக்க வேண்டும். வாரண்ட் இருக்கும் பட்சத்தில் மட்டுமே அவர்களுக்கு கட்டணமில்லா பயணம் அனுமதிக்கப்படுகிறது. அந்தத் தொகையையும் போக்குவரத்துத் துறை அரசிடம் திரும்பப் பெற்றுக் கொள்கிறது.
நேற்று நாங்குநேரியில் நடைபெற்ற சம்பவத்தின்போது பேருந்து நடத்துநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காவலர் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு பேருந்துகளுக்கு அபராதம் விதித்த போலீஸ்
இந்த சம்பவம் காவல்துறையினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு சாலை விதிமுறைகளை மீறியதாக காவல்துறையினர் அபராதம் விதித்தனர்.
சென்னை - புதுச்சேரி பேருந்து தாம்பரத்தில் 'நோ பார்க்கிங்' பகுதியில் நிறுத்தி பயணிகளை ஏற்றியதற்காக தாம்பரம் போக்குவரத்து காவல் போலீசார் 1000 ரூபாய் அபராதம் விதித்தனர்.
தாம்பரம் அருகே மணிமங்கலத்தில் ஒரு பேருந்திற்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கிளாம்பாக்கத்தில் நோ பார்க்கிங்-ல் நிறுத்தப்பட்ட அரசு பேருந்திற்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது.
அதிக பயணிகளை ஏற்றி வரும் அரசு பேருந்துகளுக்கும் போக்குவரத்து காவல்துறையினர் அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். பேருந்து நிறுத்தம் இல்லாத பகுதிகளில் நிறுத்தி பயணிகளை ஏற்றினாலும் அபராதம் விதிக்கப்பட்டது.
பிரச்னையை தீர்க்க வலியுறுத்திய அரசியல் தலைவர்கள்
தமிழ்நாடு காவல்துறை மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் இடையே ஏற்பட்டுள்ள இந்த பிரச்னையை அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் கட்சித் தலைவர்கள் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி வந்தனர்.
’டிக்கெட் எடுத்துதான் பயணித்தேன்’
இதனிடையே அரசு பேருந்து நடத்துனருடன் வாக்குவாதம் செய்த காவலர் ஆறுமுகபாண்டி சென்னை கீழ்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசியதில், காவல்துறையை கலங்கப்படுத்துவது போல் நடத்துனர் வீடியோ போட்டு உள்ளார். முறையாக டிக்கெட் எடுத்துதான் பேருந்தில் பயணித்தேன் என விளக்கம் அளித்து இருந்தார்.
போலீஸ் - போக்குவரத்துத்துறை இடையே சமாதானம்
நம்ம இரண்டு பேருமே பொதுத்துறையில் வேலை செய்கிறோம். நீங்க போலீஸ் சூப்பிரண்டு, நான் பஸில் வேலை செய்கிறேன், நீங்கள் உங்கள் கருத்தை சொன்னீர்கள். நான் எனது கருத்தை சொன்னேன், இது சோஸியல் மீடியாவில் பரவிட்டது. எனது கருத்துக்கு நான் வருத்தம் தெரிவித்து கொள்கிறேன் என நடத்துனர் கூறிய நிலையில், எனது கருத்துக்கு நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்று காவலர் கூறி விட்டு இருவரும் பரஸ்பரம் தேனீர் அருந்து வீடியோ தற்போது சமுகவலைத்தளங்களில் வைரல் ஆகி உள்ளது.
டாபிக்ஸ்