Dr. Krishnasamy: ஊடகவியலாளர் மீது பாயந்து பிராண்டிய கிருஷ்ணசாமி..கோவை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்
அரசியலில் ஆதரவற்று தொடர் தோல்வியின் விரக்தியில் தனது இருப்பை தக்க வைத்துக்கொள்ள ஊடகவியலாளர் மீது பாயந்து பிராண்டிய மருத்துவர் கிருஷ்ணசாமிக்கு கோவை பத்திரிகையாளர் மன்றம் தனது கண்டனத்தை தெரிவித்து கொள்வதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக கோவை பத்திரிகையாளர் மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது
புதிய தமிழகம் கட்சி தலைவர் மருத்துவர் கிருஷ்ணசாமி செய்தியாளர் சந்திப்பு கோவையில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 17) நடைபெற்றது. அப்போது அவரிடம் இட ஒதுக்கீடு தொடர்பான கேள்விகளை செய்தியாளர்கள் எழுப்பினர். அப்போது அவர் பேசிய பேச்சு ஆபாசமாக இருந்த நிலையில் அங்கிருந்த சக செய்தியாளர்கள் கிருஷ்ணசாமியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் செய்தியாளர்கள் சந்திப்பின்போது பரபரப்பு ஏற்பட்டது.
திணறிய கிருஷ்ணசாமி
செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் திணறிய கிருஷ்ணசாமி, ஒரு கட்டத்தில் நிதானம் இழந்து அச்சில் ஏற்ற முடியாத வார்த்தையை நேரலையில் பேசி இருக்கிறார். அவர் இதுபோன்று நடந்து கொண்டிருப்பது முதல் முறையல்ல என்பதால் செய்தியாளர்களுக்கு வியப்பு ஏற்படவில்லை.