Dr Krishnasamy: “கூழாங்கல்லுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை!” ஜான் பாண்டியன் கருத்துக்கு கிருஷ்ணசாமி பதில்
தென்காசி தொகுதியில் கிருஷ்ணசாமி போட்டியிட்டால் அவர் ஒரு சுயாட்சை வேட்பாளராகவே கருதுவேன் என்று ஜான் பாண்டியன் கூறிய கருத்துக்கு, மலையோடு மோதிக் கொண்டிருக்கிறோம், கூழாங்கல்லுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என கிருஷ்ணசாமி பதில் அளித்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள புதிய தமிழகம் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அக்கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி. அப்போது அவர் கூறியதாவது:
"நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் புதிய தமிழகம் அங்கம் பெற்றுள்ளது. அதில் தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் புதிய தமிழக கட்சி போட்டியிட இருக்கிறது.
புதிய தமிழகம் கட்சி தொடங்கப்பட்டு 28 ஆண்டுகள் ஆக இருக்கும் நிலையில், அதற்காக விழா கொண்டாடப்பட உள்ளது.
பிப்ரவரி மாதத்தில் தேர்தல் ஆணையத்திடம் டிவி சின்ன கேட்டு விண்ணப்பித்தோம். ஆனால் தேர்தல் ஆணையம் சரியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்ற காரணத்தினால் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். அதில் டிவி சின்னம் எங்களுக்கு வழங்க வேண்டும் என்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. இன்னும் ஓரிரு நாளில் டிவி சின்னம் வழங்கப்படும் என அவர் கூறியுள்ளார்.
தேர்தல் ஆணையம் பாகுபாடு
பாஜக கூட்டணி உள்ள கட்சிகளுக்கு உடனடியாக சின்ன ஒதுக்கி தேர்தல் ஆணையம் பாகுபாடு காட்டுகிறது. தேர்தல் ஆணையம் வழங்கும் சின்னத்தில் புதிய தமிழக கட்சி போட்டியிடும். இந்த முறை தேர்தல் நியாயமாக நடைபெறும் என்று நம்புகிறேன்.
காவலர்கள் மீது நடவடிக்கை
அதிமுக தலைமையில் உள்ள கூட்டணி கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட்டால் நிச்சயம் வெற்றி பெற முடியும். சங்கரன்கோவில் பகுதியில் மூன்று காவலர்கள் ஒன்று சேர்ந்து வேன் டிரைவர் ஒருவரை தாக்கி கொலை செய்துள்ளனர். அவர்களின் மீது இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. எஃப்ஐஆர் கூட பதிவு செய்யப்படவில்லை இதற்கு தமிழக அரசு பதில் சொல்ல வேண்டும், சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்றார்.
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான்பாண்டியன் தென்காசி தொகுதியில் கிருஷ்ணசாமி போட்டியிட்டால் அவர் ஒரு சுயேட்சை வேட்பாளராகவே கருதுவேன் என்று கூறிய கருத்துக்கு, "மலையோடு மோதிக் கொண்டிருக்கிறோம் கூழாங்கல்லுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை" என தெரிவித்தார்.
திருச்சியில் வரும் 24ஆம் தேதி மாநாட்டின் மூலம் தென்காசி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை அறிவிப்போம், அன்றைய தினம் திமுக தேர்தல் வாக்குறுதி என்ன செய்துள்ளது எவை செய்யவில்லை என்பதை குறித்து பட்டியலிட்டு கூற இருக்கிறோம்.
கடந்த முறை திமுக 38 இடங்களில் வெற்றி பெற்றும், அவர்களின் செயல்பாடு பெரிதாக சொல்லும்படி இல்லை. மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். அதிமுக கூட்டணி மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும். இது மக்களுக்கான கூட்டணியாக உள்ளது.
அதிமுக, பாஜக கூட்டணியில் இருந்திருந்தால் அமலாக்கத்துறை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடத்தி இருக்காது. அமலாக்கத்துறை அரசியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஏழாவது முறையாக போட்டி?
தென்காசி தொகுதியில் கிருஷ்ணசாமி போட்டியிடும்பட்சத்தில் அது 7வது முறையாக அமையும். ஏற்கனவே 6 முறை அந்த தொகுதியில் போட்டியிட்டுள்ல அவர் தோல்வியை தழுவியுள்ளார். கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் தென்காசியில் போட்டியிட்ட கிருஷ்ணசாமி 3,55,389 வாக்குகளை பெற்றார். கங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்து வரும் தென்காசி தொகுதியில் கடந்த முறை திமுக வேட்பாளர் தனுஷ் எம் குமார் 4,76,156 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
இந்த முறையும் தென்காசி தொகுதியில் திமுக வேட்பாளராக டாக்டர். ராணி ஸ்ரீகுமார் நிறுத்தப்பட்டுள்ளார்.
டாபிக்ஸ்