முல்லை பெரியாற்றில் புதிய அணையா! கேரளாவின் முடிவை புறக்கணிக்க வேண்டும்! மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!
Mullai Periyar Dam: முல்லைப் பெரியாறு அணைக்குப் பதிலாக, புதிய அணையைக் கட்டுவதற்கான கேரள அரசின் மேற்படி முன்மொழிவு, மாண்பமை உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளுக்கு முற்றிலும் எதிரானது என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவினை மீறி, முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டுவதற்கான ஆய்வினை மேற்கொள்ள கேரள அரசு முன்மொழிந்துள்ள கருத்துருவினை ஒன்றிய அரசு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளக்கூடாது என வலியுறுத்தி, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் அவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டதற்கு எதிர்ப்பு
அக்கடிதத்தில், மாண்பமை உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறி, முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டுவதற்கான ஆய்வினை மேற்கொள்வதற்கு கேரள அரசு விண்ணப்பித்துள்ள கருத்துருவினை ஒன்றிய அரசு பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டமைக்கு தமிழ்நாடு அரசு கடும் ஆட்சேபனையைத் தெரிவித்துக் கொள்வதாகத் தெரிவித்துள்ள முதலமைச்சர் அவர்கள், ஒன்றிய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் (MoEF) கீழ் உள்ள நிபுணர் மதிப்பீட்டுக் குழு (Expert Appraisal Committee), கேரள அரசின் பாசன வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி வாரியத்தின் மேற்படி கருத்துருவினை வரவிருக்கும் கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் சேர்த்துள்ளதையும் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளுக்கு முற்றிலும் எதிரானது
தற்போதுள்ள முல்லைப் பெரியாறு அணைக்குப் பதிலாக, புதிய அணையைக் கட்டுவதற்கான கேரள அரசின் மேற்படி முன்மொழிவு, மாண்பமை உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளுக்கு முற்றிலும் எதிரானது என்றும், தற்போதுள்ள அணை அனைத்து அம்சங்களிலும் பாதுகாப்பானது என பல்வேறு நிபுணர் குழுக்களால் மீண்டும் மீண்டும் கண்டறியப்பட்டு, மாண்பமை உச்ச நீதிமன்றம் 27.02.2006 மற்றும் 07.05.2014 தேதியிட்ட தனது தீர்ப்புகளில் அதனைத் தெளிவுபடுத்தியுள்ளதாகவும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். பின்னர், 2018 ஆம் ஆண்டில், புதிய அணை கட்டுவதற்கான ஆய்வினை மேற்கொள்ள கேரள அரசு முயற்சித்தபோது, மாண்பமை உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் இந்தப் பிரச்சினை கொண்டுசெல்லப்பட்டதாகவும், புதிய அணை கட்டுவது தொடர்பாக எந்தவொரு நடவடிக்கை மேற்கொண்டாலும், அதற்கு மாண்பமை உச்ச நீதிமன்றத்தின் அனுமதி தேவை என்று உச்சநீதிமன்றம் அப்போதே தெளிவாகத் தீர்ப்பு வழங்கியுள்ளதையும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.