Silanthi Check Dam: சிலந்தியாறு தடுப்பணை பணிய நிறுத்திக்கோங்க.. கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!
Silanthi Check Dam: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தேவி குளம் பகுதியில் பெருகுடா என்ற இடத்தில் கேரள அரசு தடுப்பனை கட்டி வருவதாக சமீபத்தில் தகவல்கள் வெளியானது. இந்நிலையில் தடுப்பணை கட்டும் பணியை நிறுத்துமாறு கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
Silanthi Check Dam: சிலந்தியாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணிகள் குறித்து தற்போது வெளியாகி உள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது. இந்த நிலையில், இது தொடர்பாகக் கேரள முதல்வருக்குத் தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அமராவதி அணை விபரம்
திருப்பூர் மாவட்டம் உடுமலை பேட்டையில் இருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது அமாராவதி அணை. இந்த அணையானது சுமார் 90 அடி உயரம் கொண்டது. இந்த அணை 4 டிஎம்சி நீர் கொள்ளவு கொண்டது. கடந்த 1958ம் ஆண்டு அமராவதி அணை கட்டப்பட்டது. இதன் முக்கிய நீர் ஆதாரம் பாம்பாறு, தேனாறு, சிலந்தி ஆறு மற்றும் சின்னாறு ஆகியவை ஆகும். இந்த அணையின் மூலம் தமிழகத்தின் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் சுமார் 55 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகிறது. மேலும் இந்த அமராவிதி ஆற்றுப்படுகை வாயிலாக 110 கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தான் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தேவி குளம் பகுதியில் பெருகுடா என்ற இடத்தில் கேரள அரசு தடுப்பணை கட்டி வருவதாக சமீபத்தில் தகவல்கள் வெளியானது. இதனால் அமராவதி அணைக்கு வரும் நீரின் அளவு குறைய வாய்ப்புள்ளது என்ற அச்சம் எழுந்துள்ளது. இந்நிலையில் தடுப்பணை கட்டும் பணியை நிறுத்துமாறு கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். இதுகுறித்து மக்கள் செய்தி தொடர்பு துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
"காவிரிப் படுகையில், அமராவதி (பம்பார்) துணைப்படுகையின் ஒரு பகுதியான சிலந்தியாற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவதாக சமீபத்தில் சில ஊடகங்களில் வந்த செய்திகளின் காரணமாக, அமராவதி ஆற்றில் நீர்வரத்து வெகுவாகக் குறையும் என்று தமிழ்நாட்டு விவசாயிகளிடையே அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால்இப்பணியினை நிறுத்தி வைக்க வேண்டுமென்று வலியுறுத்தி,தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்களுக்கு ன்று (23-5-2024) கடிதம் எழுதியுள்ளார்.
தமிழக முதல்வர் கடிதம்
இந்த தடுப்பணை தொடர்பான திட்ட விவரங்கள் ஏதும் தமிழ்நாடு அரசிடமோ அல்லது காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திடமோ வழங்கப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி, தமிழ்நாட்டின் நீர்வளத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அவர்கள் கேரள நீர்வளத் துறை அதிகாரிகளிடம் ஏற்கனவே கேட்டுள்ளவாறு, இத்திட்டம் குறித்த தற்போதைய நிலவரம் மற்றும் கேரளாவின் பவானி மற்றும் அமராவதி(பம்பார்) துணைப் படுகைகளுக்கான பெருந்திட்டம் (Master Plan) ஆகிய முழு விவரங்களை அளிக்க வேண்டுமென்றும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தனது கடிதத்தில் கோரியுள்ளார்.
இந்தப் பிரச்சினை குறித்து சட்டப்படி ஆய்வு செய்வதற்கு இவ்விவரங்கள் மிகவும் தேவை என்பதால், இந்த விவரங்களை தமிழ்நாட்டிற்கு உடனடியாக அளிக்கவும், தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களுக்கிடையேயான உண்மையான தோழமை
உணர்வை நிலைநிறுத்தவும், இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வரை இந்தப் பணியைத் நிறுத்தி வைக்குமாறு கேரள அரசின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்துமாறும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கேரள முதலமைச்சர் திரு. பினராயி விஜயன் அவர்களிடம் வலியுறுத்தியுள்ளார்." இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்