தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Chief Minister Mk Stalin Should Resign Says Eps

EPS : முதல்வர் பதவி விலக வேண்டும்.. அதிமுக ஆட்சியில் சாராயத்திற்கு எதிராக பாட்டு பாடியவர்கள் இப்போது எங்கே? - இபிஎஸ்!

Divya Sekar HT Tamil
May 16, 2023 01:31 PM IST

கள்ளச்சாராயம், போலி மதுபானம் விற்பனை குறித்து போலீசுக்கு தெரிந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லைஏனெனில் இந்த விற்பனையில் ஈடுபடுபவர்கள் தி.மு.க.வை சேர்ந்தவர்கள் தான் என இபிஎஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

இபிஎஸ்
இபிஎஸ்

ட்ரெண்டிங் செய்திகள்

விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தை அடுத்த மீனவ கிராமமான எக்கியார் குப்பத்தில் சில தினங்களுக்கு முன் 50-க்கும் மேற்பட்டோர் கள்ளச்சாராயம் அருந்தியதாக கூறப்படுகிறது. இதில் 16 பேருக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

கள்ளச்சாராயம் அருந்திய 6 பேர் மயக்கமடைந்த நிலையில் அவர்கள் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் ஊர் முழுவதும் சாராயம் அருந்தியவர்கள் ஆங்காங்கே மயங்கி சுருண்டு விழுந்துள்ளனர். இதையடுத்து முண்டியம்பாக்கம், மரக்காணம், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளில் மே 13, 14-ஆம் தேதிகளில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் மரக்காணம் மற்றும் மதுராந்தகத்தில் இதுவரை கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்தது. தொடர்ச்சியாக மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் பலர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.இந்நிலையில் திண்டிவனத்தை சேர்ந்த மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதன்மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், 38-க்கும் மேற்பட்டோர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை, புதுவை ஜிப்மர் மருத்துவமனை, புதுவை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை அதிமுகவின் பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இன்று காலை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி சிகிச்சை பெற்று வருபவர்களிடம் நலம் விசாரித்தார். அங்கு பணியில் இருந்த மருத்துவர்களிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.

தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், கள்ளச்சாராய உயிரிழப்பு குறித்து திமுக கூட்டணி கட்சிகள் பேசாதது ஏன்? நடிகர்கள், சமூக போராளிகள் அதுகுறித்து பேசாமல் இருப்பது ஏன்? அதிமுக ஆட்சியில் சாராயத்திற்கு எதிராக பாட்டு பாடியவர்கள் எல்லாம் இப்போது எங்கே போனார்கள்? என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்கள் சந்திப்பின் போது கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் அவர் பேசுகையில்,”மரக்காணம் எக்கியார்குப்பத்தில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்ததில் 60-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். சிகிச்சை பெற்று வரும் மற்றவர்களுக்கு சிறுநீரக கோளாறு, கண்பார்வை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவகள் கூறியுள்ளனர். இதேபோல செங்கல்பட்டு மாவட்டத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

இது துயரமான, அதிர்ச்சியான வேதனையான சம்பவமாகும். இதற்கு பொறுப்பேற்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வேண்டும். டாஸ்மாக் மதுக்கடையில் கூட 10 சதவீதம் கூடுதலாக பணம் வசூலிக்கிறார்கள். இந்த வகையில் கிடைத்த ரூ.30 ஆயிரம் கோடியை என்ன செய்வதென்றே தெரியவில்லை என பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார். 

கள்ளச்சாராயம், போலி மதுபானம் விற்பனை குறித்து போலீசுக்கு தெரிந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.ஏனெனில் இந்த விற்பனையில் ஈடுபடுபவர்கள் தி.மு.க.வை சேர்ந்தவர்கள். குறிப்பாக விழுபபுரம் மாவட்டத்தில் தி.மு.க.வில் பொறுப்பில் உள்ளவர் கள்ளச்சாராயம், போலி மதுபான விற்பனையில் சம்பந்தப்பட்டுள்ளார்.

கடந்த 2 ஆண்டுகளில் கள்ளச்சாராயம், போலி மதுபானம் விற்பவர்கள் அதிகரித்துள்ளனர். இவர்களை கட்டுப்படுத்த விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனை கட்டுப்படுத்த தவறியதால்தான் தற்போது 18 உயிர்களை நாம் இழந்து இருக்கிறோம்.

விழுப்புரம் மாவட்டம் எக்கியார்குப்பம் கிராமத்தில் 13 பேர் இறந்திருக்கிறார்கள். கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் கள்ளச்சாராயம், போலி மதுபானங்கள் விற்பவர்களை கண்காணிக்க தனிக்குழு அமைக்கப்பட்டது. அவர்கள் கண்காணிக்கப்பட்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால், 2 ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் கள்ளச்சாராயமும் போலி மதுபானமும் பெருகியுள்ளது” என தெரிவித்தார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

IPL_Entry_Point

டாபிக்ஸ்