BJP VS DMK: ’மீண்டும் ஒரு வேங்கை வயல் சம்பவம்? குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம்!’ ஸ்டாலினை விளாசும் எல்.முருகன்!
“வேங்கைவயல் குடிநீர்த் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட கொடூரம் நிகழ்ந்து ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகள் ஆகி விட்டன. ஆனால், அதில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை”
வேங்கைவயல் போன்ற கொடூரத்தை போலி திராவிட மாடல் திமுக அரசு கைகட்டி வேடிக்கை பார்த்து வருவதால் தான் இதபோன்ற கொடுமைகள் மீண்டும் மீண்டும் நிகழ்கின்றன என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுக்கோட்டை மாவட்டம் சங்கம்விடுதி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் பட்டியலின மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் இருந்து விநியோகிக்கப்பட்ட குடிநீரை குடித்த குழந்தைகள் உள்ளிட்ட பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை ஆய்வு செய்த போதுசில நாட்களுக்கு முன்பாகவே மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
வேங்கைவயல் குடிநீர்த் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட கொடூரம் நிகழ்ந்து ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகள் ஆகி விட்டன. ஆனால், அதில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
வேங்கைவயல் போன்ற கொடூரத்தை போலி திராவிட மாடல் திமுக அரசு கைகட்டி வேடிக்கை பார்த்து வருவதால் தான் இதபோன்ற கொடுமைகள் மீண்டும் மீண்டும் நிகழ்கின்றன.
மக்கள் குடிப்பதற்கான குடிநீர்த் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டுள்ளது மிக கொடூரமான செயலாகும். பட்டியலின மக்களுக்கு எதிராக இத்தகைய கொடுமைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் அவற்றைத் தடுக்க தமிழக அரசு தொடர்ந்து தவறி வருகிறது.
அதுமட்டுமல்லாமல் இந்த சம்பவத்திற்கு தமிழகம் முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில் அதனை ஆய்வு செய்த அதிகாரிகளை வைத்து தொட்டியில் பாசி பிடித்ததால் துர்நாற்றம் வீசியதாக சம்பவத்தை வழக்கம்போல் திசை திருப்பும் வேலையில் திமுக அரசு இறங்கி உள்ளது.
திமுக அரசின் இந்த செயல், மனித நாகரீகம் கொஞ்சமும் ஏற்றுக் கொள்ள முடியாத மிருகதனத்தை நியாயப்படுத்துவது போல் உள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கான குடிநீர்த் தொட்டியை கண்காணிக்க வேண்டியதும், ஒவ்வொரு நாளும் குடிநீர் மக்கள் பயன்படுத்தத் தக்க வகையில் பாதுகாப்பாக இருக்கிறதா? என்பதை ஆய்வு செய்ய வேண்டியதும் தமிழக அரசின் பணி. ஆனால் திமுக அரசு தனது கடமையை செய்யத் தவறி விட்டது.
நடவடிக்கை எடுக்க வேண்டிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாய் மூடி மவுனமாக இருக்கிறார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக தமிழகத்தில் நடக்கும் அத்துமீறல்கள் கொஞ்சம் நஞ்சமல்ல.
திமுக அரசு பதவியேற்று ஏறக்குறைய 3 ஆண்டுகளை தொடவுள்ள நிலையில் தமிழகத்தில் பட்டியலின, பழங்குடியின மக்கள் அனுபவித்து வரும் கொடூரங்கள் கொஞ்சமல்ல. இந்த கொடுமைகளில் சிலவற்ற மட்டும் நான் பட்டியலிடுகிறேன். இதற்கு மு.க. ஸ்டாலின் பதில் சொல்லட்டும்.
புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயலில் பட்டியல் சமூகத்தினர் பயன்படுத்தும் குடிநீர்த் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதில் தொடர்புடைய குற்றவாளிகளை இன்று வரை கண்டுபிடிக்காமல் பாதிக்கப்பட்ட மக்களை பரிசோதனை என்ற பெயரில் வழக்கில் சிக்க வைக்கவும் இந்த அரசு முயலுகிறது. பாதிக்கப்பட்ட வேங்கைவாசல் மக்களுக்கு மு.க.ஸ்டாலின் கூறும் சமூக நீதி என்ன?
வேங்கைவாசல் மட்டுமல்லாமல் தமிழகத்தின் பலப்பகுதிகளில் தீண்டாமை, இரட்டைக்குவளை, இரட்டை சுடுகாடு, கோயில்களுக்குள் பட்டியலின மக்கள் செல்ல முடியாத சூழல் நிலவுகிறதே இது தான் திராவிட மாடல் ஆட்சியா?
உலகின் பல பகுதிகளில் இல்லாத இந்த மாபெரும் சமூக அநீதி தொடர்ந்து நிகழ்வது திமுகவினர் திராவிட பெருமை பேசும் தமிழகத்தில் தான் என்பது வேதனையான ஒன்று. இதனை கண்டு காணாமல் இருப்பதுதான் திமுகவின் சமூக நீதியா?
இதுபோன்ற கொடூர சம்பவங்களுக்கு திமுகவை சேர்ந்தவர்களும் துணை போய் கொண்டு இருக்கிறார்களே அவர்களை கண்டிக்க திராணியற்ற முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் இருக்கிறாரே.
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியில் வீடு புகுந்து பட்டியலினத்தைச் சேர்ந்த பள்ளி மாணவரும், அவரது தங்கையும் வெட்டப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
தமிழகத்தின் பல பகுதிகளில் ஜாதி வன்மமும், ஆயுத கலாச்சாரமும் மாணவர்களிடம் தலை தூக்குவதை தடுக்க தமிழக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை
திமுகவினரின் மதுபான ஆலைகளில் தயாரிக்கப்பட்டு தமிழக அரசின் டாஸ்மாக் மதுபான கடைகள் மூலம் விற்பனை செய்யும் மதுபானம் இன்று பெரியவர்கள் மட்டுமின்றி சிறுவர்களும் குடித்து போதையில் உழுலும் சூழல் உள்ளது. இதன் காரணமாக குடியினால் கணவனை இழந்து தவிக்கும் தமிழக தாய் மார்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் பட்டியலின பெண்களின் எண்ணிக்கை அதிகம்.
இதுமட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் கொடூரமான போதை கலாச்சாரம் பெருகி வருகிறது. போதைப் பொருட்களை விற்பனை செய்பவர்கள் பலரும் திமுகவினராக உள்ளனர். அவர்களை கைது செய்யாமல் திமுக அரசின் காவல் துறை கைகட்டி வேடிகை பார்க்கிறது.
தமிழகத்தில் பெருகி வரும் போதைப் பொருட்கள் கடத்தல் குற்றசம்பவங்களில் குற்றவாளிகளை கண்டறியவும், ஆயுத கலாச்சசாரத்தை ஒழித்து கட்டவும், தமிழக காவல்துறையும், அந்த துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?
இந்த சம்பவங்களில் திமுகவினர் பின்னணி இருப்பதால் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்.
சமூக நீதிக்கு தாங்கள் தான் சொந்தக்காரர்கள் என வாய்கிழிய பேசும் திமுகவினர் செய்வது என்ன என்பதை தமிழகம் மட்டுமல்லாமல் இந்த நாடே பார்த்துக் கொண்டு தான் இருக்கிறது.
பட்டியலின மக்களை தங்கள் சுயலாப அரசியலுக்கு பயன்படுத்தும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இதற்கு சொல்லப்போகும் பதில் என்ன? அவரின் செயலற்ற தன்மையால் இன்று ஒட்டுமொத்த தமிழகமும் தள்ளாடி நிற்கிறது.
தமிழ்நாட்டில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக குடிநீர் தொட்டிகளில் மலம், மாட்டுச்சாணம் போன்றவற்றை கலக்கும் நிகழ்வுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
பள்ளிகளிலும், பட்டியலின மக்கள் வாழும் பகுதிகளிலும் இத்தகைய நிகழ்வுகள் தொடர்கிறன.
புதுக்கோட்டை மாவட்டத்தில் குடிநீர்த் தொட்டியில் சாணம் கலக்கப்பட்ட நிகழ்வும் வேங்கைவயல் நிகழ்வு எந்த அளவுக்கு கொடூரமானதோ, அதே அளவுக்கு கொடூரமானது செயல். இத்தகைய செயல்களில் ஈடுபட்டவர்கள் மன்னிக்கப்படுவதற்கு தகுதியற்றவர்கள். இந்த நிகழ்வின் பின்னணியில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர திமுக அரசும், காவல்துறையும் முன்வர வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
டாபிக்ஸ்