PTR Palanivel Thiagarajan: அமெரிக்கா முதல் ஆடியோ சர்ச்சை வரை…! பிடிஆரிடம் இருந்து நிதித்துறை பறிப்பு பின்னணி!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Ptr Palanivel Thiagarajan: அமெரிக்கா முதல் ஆடியோ சர்ச்சை வரை…! பிடிஆரிடம் இருந்து நிதித்துறை பறிப்பு பின்னணி!

PTR Palanivel Thiagarajan: அமெரிக்கா முதல் ஆடியோ சர்ச்சை வரை…! பிடிஆரிடம் இருந்து நிதித்துறை பறிப்பு பின்னணி!

Kathiravan V HT Tamil
May 11, 2023 01:08 PM IST

"கடந்த இரண்டு ஆண்டுகள் நிதித்துறை பொறுப்பு வழங்கியதற்காகவும், தற்பொழுது எழுச்சிமிக்க புதிய பொறுப்பை வழங்கி மக்களுக்காகப் பணியாற்றும் வாய்ப்பை அளித்துள்ள என் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்." என பிடிஆர் கூறி உள்ளார்.

2023-24ஆம் நிதியாண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட்டை தாக்கல் செய்யும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் - கோப்புப்படம்
2023-24ஆம் நிதியாண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட்டை தாக்கல் செய்யும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் - கோப்புப்படம்

அமைச்சரவை மாற்றம் வெளியானதும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டார். அதில் "கடந்த இரண்டு ஆண்டுகள் நிதித்துறை பொறுப்பு வழங்கியதற்காகவும், தற்பொழுது எழுச்சிமிக்க புதிய பொறுப்பை வழங்கி மக்களுக்காகப் பணியாற்றும் வாய்ப்பை அளித்துள்ள என் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்." என கூறி உள்ளார்.

யார் இந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

நீதிகட்சியின் தலைவரும், மதராஸ் மாகாணத்தின் முன்னாள் பிரதமராக சில காலம் இருந்த பி.டி.ராஜனின் பேரனும் முன்னாள் சபாநயகர் பிடிஆர் பழனிவேல் ராஜனின் ஒரே மகனுமான பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், தன் தந்தையின் மறைவுக்கு பின்னர் 10 ஆண்டுகளுக்கு பிறகு அரசியலுக்கு கொண்டு வரப்பட்டார்.

சிறுவயதில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்
சிறுவயதில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

2006 ஆம் ஆண்டில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக பொறுப்பேற்று மதுரைக்கு திரும்பிய பிடிஆர் பழனிவேல் ராஜன் வழியிலேயே மரணமடைந்தார். அப்போதே அவரது தந்தை வெற்றி பெற்றிருந்த மதுரை மத்திய தொகுதியில் போட்டியிட தியாகராஜனை மறைந்த திமுக தலைவரும், அன்றைய முதலமைச்சருமான மு.கருணாநிதி வலியுறுத்தி இருந்தார். ஆனால் அவர் அந்த வேண்டுகோளை ஏற்கவில்லை.

மறைந்த அமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன்
மறைந்த அமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன்

அமெரிக்காவில் மேற்படிப்பும் பின்னர் அங்கேயே தனது முனைவர் பட்டத்திற்கான ஆய்வையும் முடித்திருந்த தியாகராஜன் லேமென் பிரதர்ஸ் உள்ளிட்ட உலகின் மிக பெரிய முதலீட்டு நிறுவனங்களில் முக்கிய பொறுப்புக்களை வகித்தார்.

சட்டமன்ற உறுப்பினர் முதல் நிதியமைச்சர் வரை

2016ஆம் ஆண்டில் தனது கார்பரேட் பணிகளில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்ட பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மதுரை மத்திய தொகுதியில் போட்டியிட்டு வென்றார். 2021 தேர்தலிலும் அதே தொகுதியில் வென்று நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சரானார்.

பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்
பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

மிக மோசமான நிலையில் இருந்த நிதித்துறையை மீட்டெடுக்க அவர் மேற்கொண்ட முயற்சிகள் மிகுந்த கவனத்தையும் பலரின் பாராட்டுக்களையும் பெற்றன. ஆனால் அரசின் துறைகளுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டிய நிதியை விடுவிப்பதில் தாமதம் செய்வதாக அவர் மீது புகார்கள் எழுந்தது.

தேசிய அளவில் கவனம் பெற்ற நேர்காணல்கள்

திராவிட மாடல் குறித்த பிடிஆரின் பேச்சுக்கள் தேசிய அளவில் திமுக மீதான பிம்பத்தை மாற்றி அமைப்பதில் முக்கிய பங்கு வகித்தது. ஆங்கில ஊடகங்களுக்கு அவர் அளித்த நேர்காணல்கள் நாடு முழுவதும் கவனம் பெற்றது.

இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் இறுதியில் பிடிஆர் பேசியதாக கூறி இரண்டு ஆடியோக்களை பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் மற்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோர் வெளியிட்டனர். இது பிடிஆரின் அரசியல் வாழ்கையை திருப்பி போட்டு விட்டது.

அரசியல் வாழ்கையை திருப்பி போட்ட ஆடியோ

பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் வெளியிட்டிருந்த முதல் ஆடியோவில், உதயநிதி ஸ்டாலின் மற்றும் சபரிசன் ஆகியோர் 30 ஆயிரம் கோடி ஊழல் பணத்தை சேர்த்துவிட்டதாக குறிப்பிட்டு பேசி இருந்தார்.

இந்த ஆடியோ சமூகவலைத்தளங்களில் வைரல் ஆன நிலையில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இதற்கு மறுப்பு தெரிவித்து ட்வீட் செய்திருந்தார்.

”மகனும் மருமனும்தான் கட்சியே”

பின்னர் கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசும் 57 வினாடிகள் கொண்ட இரண்டாவது ஆடியோ ட்விட்டரில் வெளியிட்டார்.

அதில், ஒரு நபர் ஒரு பதவி என்ற கொள்கைக்கு நான் அரசியலுக்கு வந்த நாள் முதலே ஆதரவு அளித்து வருகிறேன். பாஜகவிடம் எனக்கு பிடித்த விஷயம் என்னவென்றால், கட்சியையும் மக்களையும் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு பிரிந்திருக்க வேண்டும் அல்லவா?. ஆனால் இங்கு எல்லா முடிவுகளையும் எம்.எல்.ஏக்களும் அமைச்சர்களும்தான் எடுக்கின்றனர்.

நிதி மேலாண்மை செய்வது சுலபம்... இது ஒரு அமைப்பா? அவர்களுக்கு வரும் ஊழல் பணம் அத்தனையும் அவர்களே எடுத்துக் கொள்கிறார்கள்... முதல்வரின் மகனும் மருமகனும்தான் கட்சியே... அவர்களை நிதி மேலாண்மை செய்ய சொல்லுங்கள்... அதனால் 8 மாதங்கள் பார்த்த பிறகு முடிவு செய்துவிட்டேன்... இது ஒரு நிலையான முறை கிடையாது. எனக்கு இருக்கும் மிகப்பெரிய வசதி என்னவென்றால் இப்போது நான் விலகினால் இந்த குறுகிய காலத்தில் நான் வெளியே சென்றால் அவர்கள் செய்தது அனைத்தும் எதிர்வினையாக அவர்களுக்கே திருப்பி அடிக்கும்... நான் இந்த யுத்தத்தை மிக சீக்கிரமாக கைவிடதாக எனது மனசாட்சி சொல்லாது என கருதுகிறேன்.நான் அந்த பதவியில் இல்லாத போது அதை பற்றி கவலைப்பட வேண்டிய கவலை எனக்கு இல்லை என பிடிஆர் பேசி இருந்தார்.

ஆடியோவுக்கு பிடிஆர் மறுப்பு

இந்த ஆடியோ விவகாரத்திற்கு பிறகு விரிவான வீடியோ ஒன்றை வெளியிட்ட பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் “முதலமைச்சர் மற்றும் சபரிசன் ஆகியோரிடம் இருந்து என்னைப் பிரிப்பதன் மூலமாக தங்களது அரசியல் எண்ணங்களை நிறைவேற்றத் துடிக்கிறது ஒரு பிளாக் மெயில் கும்பல். ஆனால் இது போன்ற கோழைத்தனமான முயற்சிகள் ஒருபோதும் வெற்றி பெறாது.” என கூறி இருந்தார்.

மேலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (AI) மூலம் நான் பேசியதாக இதுபோன்ற ஆடியோக்கள் போலியாக உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கம் அளித்திருந்தார்.

ஆடியோ சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த முதல்வர்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்து பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசும் ஆடியோ அரசியல் சர்ச்சையை கிளப்பியது. அவரது அமைச்சர் பதவி பறிக்கப்படும் என செய்திகள் பரவிய நிலையில் கடந்த மே ஒன்றாம் தேதி சென்னை ஆழ்வார் பேட்டை இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பிடிஆர் சந்தித்து பேசி இருந்தார்.

பின்னர் இது குறித்து அதற்கு அடுத்த நாள் முதலமைச்சர் வெளியிட்டிருந்த வீடியோவில் ”இதுகுறித்து அவரே இரண்டு முறை விரிவான விளக்கம் அளித்துவிட்டார். மக்களுக்கான பணிகளைச் செய்யவே எனக்கு நேரம் சரியாக இருக்கிறது. மேலும் இதைப் பற்றி பேசி, மட்டமான அரசியலில் ஈடுபடுகிறவர்களுக்கு நான் விளம்பரம் தேடித் தர விரும்பவவில்லை என ஆடியோ சர்ச்சைக்கு முதலமைச்சர் முற்றுப்புள்ளி வைத்திருந்தார்.

ஏன் வழக்கு தொடரவில்லை?

ஆனால் பிடிஆர் பேசிய ஆடியோ போலியானது என்றால் அதனை வெளிட்டவர்கள் மீது ஏன் எந்த வழக்குப்பதிவும் செய்யவில்லை என்ற கேள்வி அரசியல் தளத்தில் பரவலாக வைக்கப்பட்டது. கடந்த மே 7ஆம் தேதி உடன் திமுக அரசு பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில், மதுரை சிம்மக்கல் பகுதியில் நடைபெற இருந்த தமிழ்நாடு அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசுவார் என முதலில் அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. ஆனால் இறுதி நேரத்தில் அவர் பெயர் நீக்கப்பட்டது. அவருக்கு பதிலாக அக்கூட்டத்தில் பேராசிரியர் ஜெயரஞ்சன் பேசுவார் என அறிவிக்கப்பட்டது. 

நிதித்துறையை பறிகொடுத்த பிடிஆர்

 

இந்த நிலையில் இன்று நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்தில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறைக்கு புதிய அமைச்சராக தங்கம் தென்னரசு நியமிக்கப்பட்டுள்ளர். அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு தகவல் தொழில் நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பதவியை காப்பாற்றிய மிஸ்டர் க்ளீன் இமேஜ்

தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் குறித்து தொடர்ந்து செய்திகள் வெளியானது. தொடக்கத்தில் நிதித்துறை பிடிஆர் பழனிவேல் தியாகராஜனிடம் இருந்து பறிக்கப்படும் என்று சொல்லப்பட்டாலும், பிடிஆர் மீது உள்ள மிஸ்டர் க்ளீன் இமேஜ், நிதித்துறையில் அவர் செய்த சீர்த்திருத்த பணிகள் ஆகியவைகளால் அவருக்கு நல்லபெயர் உள்ளது. ஒருவேளை அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கினால் அதற்கான காரணம் என்ன என்பது குறித்த விவாதம் தேசிய அளவில் எழலாம் என்பதால் இலாகாவை மட்டும் முதலமைச்சர் மாற்றி உள்ளதாக கூறுகின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

Whats_app_banner
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.