DMK vs BJP: ’கோபாலபுர இளவரசே! கார் ரேஸ் நிகழ்ச்சிக்கு மிரட்டி பணம் வாங்குவதா?’ உதயநிதிக்கு அண்ணாமலை எச்சரிக்கை!
F4 பந்தய நிகழ்ச்சி, கோபாலபுர இளவரசர் திரு உதயநிதி ஸ்டாலினின் கனவுத் திட்டமாகும், கடந்த ஆண்டு நடைபெறுவதாக இருந்த இந்நிகழ்ச்சி, பின்னர் ஒத்திவைக்கப்பட்டு அடுத்த மாதம் சென்னையில் நடைபெறவிருக்கிறது. இதற்காக, தமிழக அரசு ஏற்கனவே 40 கோடி செலவிட்டுள்ளது.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஏற்பாட்டில் நடைபெறும் F4 மோட்டார் பந்தய நிகழ்ச்சிக்காக தொழிலதிபர்களிடம் மிரட்டில் பணம் வாங்கப்படுவதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளார்.
இது தொடர்பாக ‘எக்ஸ்’ சமூகவலைத்தளத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பதிவிட்டுள்ள இடுகையில், ஊழலுக்கான புதிய வழிமுறைகளைக் கண்டுபிடித்து, தனது இந்தி கூட்டணிக் கட்சிகளுக்குப் புதிய ஊழல் பாதையை அமைத்துக் கொடுப்பதில், திமுக தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறது. கடந்த காலங்களில், மருத்துவக் கல்விச் சேர்க்கைக்கான மாணவர்களின் தகுதிப் பட்டியலைக் கொடுத்து, கட்சிக்கு நன்கொடை வாங்கும் வழியை அறிமுகப்படுத்திய திமுக, இப்போது நன்கொடை வசூலிப்பதில் புதிய உயரத்துக்குச் சென்றுவிட்டனர்.
நிதி வழங்கவில்லை எனில் சிக்கல்
தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் (TNPCB), F4 மோட்டார் பந்தய நிகழ்ச்சிக்காக, சென்னை மற்றும் மேற்கு கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த பெரும்பான்மையான தொழில்முனைவோர்களிடம் நிதி வசூலிக்க வேண்டும் என்ற பணி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. நிதி வழங்கவில்லை என்றால், சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று, தொழில்முனைவோர்களைக் கட்டாயப்படுத்தி வருகின்றனர்.
கோபாலபுர இளவரசரின் கனவுத்திட்டம்
இந்த F4 பந்தய நிகழ்ச்சி, கோபாலபுர இளவரசர் திரு உதயநிதி ஸ்டாலினின் கனவுத் திட்டமாகும், கடந்த ஆண்டு நடைபெறுவதாக இருந்த இந்நிகழ்ச்சி, பின்னர் ஒத்திவைக்கப்பட்டு அடுத்த மாதம் சென்னையில் நடைபெறவிருக்கிறது. இதற்காக, தமிழக அரசு ஏற்கனவே 40 கோடி செலவிட்டுள்ளது. இப்போது, தமிழ்நாட்டிலுள்ள சிறு தொழில் அதிபர்கள், தொழில் முனைவோர் மற்றும் தொழிலதிபர்கள் அனைவரும், திரு உதயநிதி ஸ்டாலினின் மோட்டார் பந்தய நிகழ்ச்சிக் கனவுகளை நனவாக்க, நிதி வழங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மூலம் நடவடிக்கை
மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள், ஒவ்வொரு நிறுவனங்களிடம் இருந்தும், 25,000 முதல் 1,00,00,000 வரை வசூல் செய்யப் பணிக்கப்பட்டுள்ளனர். இந்த நிதி, “ரேசிங் ப்ரோமோஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்” (Racing Promotions Private Ltd) என்ற நிறுவனத்தின் பெயரில் வழங்கப்பட்டுள்ளன. அவர்கள் கேட்கும் நிதி வழங்கப்படவில்லை என்றால், நிறுவனத்தின் மீது, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளின் நடவடிக்கைகளை நிச்சயம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்ற நிலை நிலவுகிறது.
பின்னணியில் அகிலேஷ் ரெட்டி
இந்த “ரேசிங் ப்ரோமோஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்” நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக, கோபாலபுர இளவரசரின் நெருங்கிய நண்பரான திரு அகிலேஷ் ரெட்டி என்பவர் இருப்பது தற்செயலானது அல்ல.
இந்த நிறுவனத்தின் வருமானம் மற்றும் நிதி அறிக்கைகளை, பொதுவெளியில் வெளியிட வேண்டும் என்று தமிழ்நாடு பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன். பொதுமக்கள் கடினமாக உழைத்துச் சேர்க்கும் பணத்தை, திமுக அரசு எப்படிக் கொள்ளையடிக்கிறது என்பதைத் தமிழக மக்களும் தெரிந்து கொள்ளட்டும். தனது தனிப்பட்ட ஆசைகளுக்கு நிதி வழங்க, தமிழக மக்களைக் கட்டாயப்படுத்த முடியாது என்பதைத் திரு.உதயநிதி ஸ்டாலினுக்கு நினைவூட்ட விரும்புகிறோம் என அண்ணாமலை கூறி உள்ளார்.
உதயநிதி விளக்கம்
சென்னையில் நடைபெற உள்ள கார் பந்தையம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள கார் பந்தயத்தை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றது. இதில் பெரும்பாலும் அரசு பணம் செலவிடப்படவில்லை. ஸ்பான்சர்கள் மூலம் நிகழ்ச்சி நடத்தப்படுகின்றது என கூறினார்.