கழிப்பறைக்கு தங்க வைக்கப்பட்ட தூய்மைப் பணியாளர்கள்.. இதுவா திமுக அரசின் சமூக நீதி? - அன்புமணி கேள்வி!
Anbumani : அனைவருக்கும் சமூகநீதி வழங்கப்படுகிறது; அனைவரின் உரிமைகளும் பாதுகாக்கப் படுகின்றன என்றெல்லாம் மூச்சுக்கு முன்னூறு முறை தம்பட்டம் அடித்துக் கொள்கிறது திமுக அரசு. ஆனால், ஒரு மாதத்திற்கும் மேலாக தொழிலாளர்களை கழிப்பறையில் தங்க வைத்திருக்கிறது திமுக அரசு என அன்புமணி தெரிவித்துள்ளார்.

அரசுத் துறைகளில் குத்தகை முறை தொழிலாளர் நியமனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டு, நிலையான தொழிலாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுக் கழிப்பறைகளை பராமரிப்பதற்காக அழைத்து வரப்பட்ட வெளிமாநிலத் தூய்மைப் பணியாளர்களை, ஒரு மாதத்திற்கும் மேலாக திருப்பூரில் உள்ள நஞ்சப்பா மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியின் கழிப்பறைக்குள் தங்க வைத்திருந்தது பெரும் அதிர்ச்சியளிக்கிறது.
இது கடுமையாக கண்டிக்கத்தக்கது
ஏராளமானோர் பயன்படுத்தும் கழிப்பறைக்குள் தங்கியபடியே அந்த தூய்மைப்பணியாளர்கள் சமைத்து, உண்டு, உறங்கி வந்திருக்கின்றனர் என்ற செய்தியை கேட்கும் போதே நெஞ்சம் பதறுகிறது.வெளிமாநிலத் தொழிலாளர்கள் தூய்மைப்பணிக்காக அழைத்து வரப்படும் நிலையில், அவர்களுக்கு உழைப்புக்கேற்ற ஊதியம், சத்தான உணவு, பாதுகாப்பான தங்குமிடம் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டியது தமிழக அரசு மற்றும் திருப்பூர் மாநகராட்சியின் கடமை ஆகும்.