கருப்பு நாட்களாக அறிவித்து விடுங்கள்.. தொழிலாளர் உரிமைக்கும், சமூகநீதிக்கும் முதல் எதிரி தி.மு.க. தான் - ராமதாஸ்!
Ramadoss : குத்தகை முறையில் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களை நியமிக்கும் போது சமூக நீதியும், தொழிலாளர்களின் உரிமைகளும் நிரந்தரமாக குழி தோண்டி புதைக்கப்பட்டு விடும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தொழிலாளர்களின் வாக்குகளை வாங்கி ஆட்சிக்கு வந்த திமுக, தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிப்பதற்கு பதிலாக சமூகநீதி நாளான செப்டம்பர் 17&ஆம் தேதியையும், தொழிலாளர்கள் நாளான மே ஒன்றாம் தேதியையும் கருப்பு நாளாக அறிவித்து விடலாம்.
சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்திற்கு 1200 ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களை குத்தகை முறையில் நியமிப்பதற்கான ஒப்பந்தப்புள்ளிகளை தமிழக அரசு கோரியிருக்கிறது. தொழிலாளர்களின் உழைப்பை மதித்து, அதற்கேற்ற ஊதியத்தையும், சமூகப் பாதுகாப்பையும் வழங்க வேண்டிய தமிழக அரசே, அவர்களின் உழைப்பைச் சுரண்டி, சமூகநீதியை படுகொலை செய்வது கண்டிக்கத்தக்கது.
ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு
சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் நேற்று வெளியிடப்பட்டுள்ள ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பில், 700 ஓட்டுனர்களையும், 500 நடத்துனர்களையும் குத்தகை அடிப்படையில் வழங்குவதற்காக தனியார் மனிதவள நிறுவனங்களிடமிருந்து விலைப்புள்ளிகளும், தொழில்நுட்பப் புள்ளிகளும் கோரப் பட்டுள்ளன.
அதாவது, மாநகரப் பேருந்துகளை இயக்குவதற்குத் தேவையான ஓட்டுனர்கள், நடத்துனர்களை மாநகரப் போக்குவரத்துக் கழகமே தேர்ந்தெடுப்பதற்கு பதிலாக, மனிதவள நிறுவனம் தேர்ந்தெடுத்து அனுப்பும் ஓட்டுனர்களையும், நடத்துனர்களையும் பயன்படுத்திக் கொள்ளும். அவர்களுக்கான ஊதியத்தை நிரந்தர பணியாளர்களுக்கு இப்போது எவ்வளவு ஊதியம் வழங்கப்படுகிறதோ, அதைவிட குறைவான அளவில் கணக்கிட்டு, சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்துக்கு மாநகர போக்குவரத்துக் கழகம் வழங்கும்.
தொழிலாளர்களின் உரிமைகளும் நிரந்தரமாக குழி தோண்டி புதைக்கப்பட்டு விடும்
மாநகரப் போக்குவரத்துக் கழகம் வழங்கும் தொகையை பெற்றுக் கொள்ளும் நிறுவனம், அதில் ஒரு பகுதியை எடுத்துக் கொண்டு மிகக் குறைந்த தொகையை ஒப்பந்த ஓட்டுநர்களுக்கு வழங்கும். இது வழக்கமாக வழங்கப்பட வேண்டிய ஊதியத்தில் பாதிக்கும் குறைவாகவே இருக்கும். ஊதியம் தவிர, ஓய்வூதியம், பணிக்கொடை உள்ளிட்ட எந்த உரிமையும் வழங்கப்படாது.
இவற்றை விட பெரிய அநீதி, தனியார் மனிதவள நிறுவனங்கள் மூலம் செய்யப்படும் நியமனங்களில் எந்த வகையான இட ஒதுக்கீடும் வழங்கப்படாது. மொத்தத்தில் குத்தகை முறையில் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களை நியமிக்கும் போது சமூக நீதியும், தொழிலாளர்களின் உரிமைகளும் நிரந்தரமாக குழி தோண்டி புதைக்கப்பட்டு விடும்.
தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டி, சமூகநீதியை குழிதோண்டி புதைக்கும் செயலில் திமுக அரசு ஈடுபடுவது இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டு அக்டோபர் & நவம்பர் மாதங்களில் இதே மாநகரப் போக்குவரத்துக் கழகத்துக்கு குத்தகை அடிப்படையில் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களை நியமிக்க ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டன.
நேரடித் தேர்வு மூலம் நிரப்ப வேண்டும்
அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ‘‘இது அபாயகரமான சோதனை. தனியார் நிறுவனங்கள் மூலம் ஓட்டுநர், நடத்துனர்கள் நியமிக்கப் பட்டால், இட ஒதுக்கீடு பின்பற்றப்படாது. அவர்களால் விபத்து ஏற்பட்டால், இழப்பீடு வழங்குவதில் சிக்கல்கள் எழும். இந்த முறையை கைவிட்டு, அனைத்து அரசு போக்குவரத்துக் கழகங்களிலும் ஓட்டுநர், நடத்துனர் காலிப் பணியிடங்களை, நேரடித் தேர்வு மூலம் நிரப்ப வேண்டும்’’ எனத் தீர்ப்பளித்தது.
அதன்பிறகும் திருந்தாத தமிழக அரசு, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோயில் ஆகிய மண்டலங்களில் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களை குத்தகை முறையில் நியமிப்பதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக உயர்நீதிமன்றத்தால் கடந்த ஆண்டு ரத்து செய்யப்பட்ட ஒப்பந்தப்புள்ளியை மாநகரப் போக்குவரத்துக் கழகம் மீண்டும் கோரியுள்ளது. தொழிலாளர்களின் உரிமைகளை மதிக்க அரசு தயாராக இல்லாததையே இது காட்டுகிறது.
திமுகவுக்கு சமூகநீதி குறித்து பேசுவதற்கு தகுதியுண்டா?
சமூகநீதிக்கு எதிரான குத்தகை முறையில் 1200 ஓட்டுனர்களும், நடத்துனர்களும் நியமிக்கப்படும் போது இடஒதுக்கீடு கடைபிடிக்கப்படாது. அதனால், 69% இட ஒதுக்கீட்டின் அடிப்படையில், பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு கிடைக்க வேண்டிய 318 வேலைவாய்ப்புகளும், இஸ்லாமியர்களுக்கு கிடைக்க வேண்டிய 42 வேலைவாய்ப்புகளும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கிடைக்க வேண்டிய 240 வேலைவாய்ப்புகளும், பட்டியலினம் மற்றும் பழங்குடியினத்தவருக்கு கிடைக்க வேண்டிய 228 வேலைகளும் பறிக்கப்படும். இந்த அநீதியை அரங்கேற்றும் திமுகவுக்கு சமூகநீதி குறித்து பேசுவதற்கு தகுதியுண்டா?
தொழிலாளர் உரிமையும், சமூக நீதியும் தெருவில் கிடந்து எடுக்கப்பட்டவையல்ல. இட ஒதுக்கீட்டுக்காக நடத்தப்பட்ட போராட்டங்கள் எண்ணற்றவை; இந்தப் போராட்டத்தில் பலி கொடுக்கப்பட்ட உயிர்கள் கணக்கில் அடங்காதவை. அதேபோல், அதிகார வர்க்கத்தினரால் சுரண்டப்படும் தொழிலாளர் உரிமையை மீட்டெடுப்பதற்காக உலகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
தொழிலாளர் உரிமைக்கும், சமூகநீதிக்கும் முதல் எதிரி தி.மு.க. தான்
அவற்றின் பயனாகவே 8 மணி நேர பணியும், பிற தொழிலாளர் உரிமைகளும் தொழிலாளர்களால் வென்றெடுக்கப் பட்டன. அவற்றின் சாட்சியாகவே செப்டம்பர் 17 ஆம் தேதி சமூகநீதி நாளும், மே ஒன்றாம் தேதி பாட்டாளிகள் நாளும் கொண்டாடப்பட்டு வருகின்றன. ஆனால், போராடிப் பெற்ற இரு உரிமைகளையும் திமுக அரசு, கொடூரமாக பறித்திருக்கிறது. இதை விட கொடிய சமூக அநீதியை எவரும் இழைக்க முடியாது. இதன் மூலம் தொழிலாளர் உரிமைக்கும், சமூகநீதிக்கும் முதல் எதிரி தி.மு.க. தான் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர்களின் வாக்குகளை வாங்கி ஆட்சிக்கு வந்த திமுக, தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிப்பதற்கு பதிலாக சமூகநீதி நாளான செப்டம்பர் 17&ஆம் தேதியையும், தொழிலாளர்கள் நாளான மே ஒன்றாம் தேதியையும் கருப்பு நாளாக அறிவித்து விடலாம். தொழிலாளர்களின் உரிமைகளையும், சமூகநீதியையும் படுகொலை செய்து வரும் திமுகவுக்கு தமிழக மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.” என தெரிவித்துள்ளார்.