தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Mansoor Ali Khan: ‘பிரதமர் மோடியை கைது செய்து திகார் ஜெயில்ல அடைக்கனும்’.. பரபரப்பை கிளப்பிய நடிகர் மன்சூர் அலிகான்!

Mansoor Ali Khan: ‘பிரதமர் மோடியை கைது செய்து திகார் ஜெயில்ல அடைக்கனும்’.. பரபரப்பை கிளப்பிய நடிகர் மன்சூர் அலிகான்!

Karthikeyan S HT Tamil
Apr 25, 2024 03:21 PM IST

Actor Mansoor Ali Khan: சென்னை சத்யமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகையை, இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவரும், நடிகருமான மன்சூர் அலிகான் இன்று சந்தித்து பேசினார்.

காங்கிரஸ் கட்சியில் இணைய விருப்பம் தெரிவித்து நடிகர் மன்சூர் அலிகான் கடிதம் கொடுத்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியில் இணைய விருப்பம் தெரிவித்து நடிகர் மன்சூர் அலிகான் கடிதம் கொடுத்துள்ளார்.

ட்ரெண்டிங் செய்திகள்

இந்திய ஜனநாயக புலிகள் என்ற பெயரில் புதிய கட்சி ஒன்றை நடிகர் மன்சூர் அலிகான் சமீபத்தில் தொடங்கி இருந்தார். மக்களவைத் தேர்தலுக்கு முன்பு அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி அக்கட்சிக்கு ஆதரவளித்த நிலையில், அதிமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கப்படாததால் வேலூர் தொகுதியில் நடிகர் மன்சூர் அலிகான் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார். அவருக்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

வேலூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பலாப்பழம் சின்னத்துக்கு வாக்கு அளிக்க கோரி அவர் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வந்தார். இதனிடையே, குடியாத்தம் பகுதியில் இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரத்தில் ஈடுப்பட்டுக் கொண்டிருக்கும்போது அவருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

இந்த நிலையில், மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளதை அடுத்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகையை நேரில் சந்தித்து அக்கட்சியில் இணைய கடிதம் அளித்துள்ளார் மன்சூர் அலிகான். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி முன்னிலையில் அக்கட்சியில் சேர விருப்பம் தெரிவித்து அவர் கடிதம் அளித்துள்ளார்.

தேர்தல் முடிந்த பிறகு கட்சியில் இணைவதற்கான கடிதம் ஏற்றுக்கொள்ளப்படும் என்று செல்வப் பெருந்தகை கூறினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நடிகர் மன்சூர் அலிகான், பிரதமரை கைது செய்து திகார் சிறையில் அடைத்த பிறகு தான் தேர்தல் நடத்த வேண்டும். இந்த தேர்தல் அவர் தலைமையில் நேர்மையாக நடக்காது. காங்கிரஸ் கட்சியில் இணைவதற்கான கடிதம் கொடுத்துள்ளேன். முதலில் காங்கிரஸ் கட்சியில் தான் இருந்தேன், மீண்டும் தாய் கழகத்தில் இணைய உள்ளேன். இதன் மூலம் தனது இந்திய ஜனநாயக புலிகள் கட்சியையும் காங்கிரஸ் கட்சியுடன் இணைத்து அதன் உறுப்பினர்கள் அனைவரும் காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளனர்." என்று தெரிவித்தார்.

முன்னதாக, இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து மன்சூர் அலிகான் நீக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது. நாடாளுமன்ற தேர்தல் குறித்து இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் கண்ணதாசன் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அதேபோல், இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து மன்சூர் அலிகான் நீக்கப்பட்டுவதாக செயற்குழு முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. தலைவருக்கு இருந்த அதிகாரங்கள் அனைத்தும் பொதுச்செயலாளர் கண்ணதாசனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இனி மன்சூர் அலிகான் உறுப்பினராக மட்டுமே இருக்க முடியும். தன்னிச்சையாக செயல்பட்டதாலும், நிர்வாகிகள் இடையே எந்தவித ஆலோசனையையும் மேற்கொள்ளாததாலும் செயற்குழுவைக் கூட்டி நடவடிக்கை எடுத்தாக கண்ணதாசன் தெரிவித்திருந்தார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point

டாபிக்ஸ்