TN Assembly: ’டாக்டர்கள் நியமனம்!’ பேரவையில் மா.சு- விஜயபாஸ்கர் இடையே காரசார விவாதம்!
”மா.சுப்பிரமணியன் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள் எழுந்து நின்று அமளியில் ஈடுபட்டனர். இதனால் சட்டப்பேரவையில் கூச்சல் குழப்ம்”
தமிழ்நாடு சட்டப்பேரவையின் இரண்டாம் நாள் கூட்டம் தொடங்கி நடந்து வருகிறது. கேள்வி நேரத்தில் பேசிய கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை, கறம்பக்குடி தாலுகா மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டாலும் மருத்துவர்கள், செவிலியர்கள் நியமிக்கப்படவில்லை என்பதால் கூடுதல் மருத்துவர்கள், செவிலியர்களை நியமிக்க வேண்டுமென கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்து பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சட்டமன்ற உறுப்பினர்கள் அவர்கள் கறம்பக்குடி மருத்துவமனை தரம் உயர்த்தி 8 ஆண்டுகள் ஆன பின்னும் மருத்துவர்களோ, செவிலியர்களோ நியமிக்கப்படவில்லை என்று சொல்லி உள்ளார்.
கடந்த காலத்தில் 130 மருத்துவமனைகளில் தரம் உயர்த்த அரசாணை வெளியிட்டு பெயர் பலகைகளை மாற்றினார்களே தவிர பணி நியமனங்களை செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை செய்யவில்லை. கரம்பக்குடி மக்களிடத்தில் பேசி உள்ளோம். 8 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த தவறை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மா.சுப்பிரமணியன் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள் எழுந்து நின்று அமளியில் ஈடுபட்டனர். இதனால் சட்டப்பேரவையில் கூச்சல் குழப்பம் நிலவியது.
அப்போது பேசிய அவை முன்னவர் துரை முருகன், கேள்வி கேட்பதற்கு உரிமை உண்டு, இல்லை என்று சொல்லவில்லை. சபாநாயகர் கவனத்தை யாராவது ஒருவர் ஈர்த்தால் அவர் பதில் சொல்வார் என்றார்.
இதற்கு பதில் அளித்து பேசிய முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், கேள்வி நேரத்தில் குற்றச்சாட்டு கூடாது என்ற மரபை நீங்கள் சொல்லி உள்ளீர்கள். மாண்புமிகு அமைச்சர் அவர்கள் பெயர் அளவுக்கு அரசாணை பிறப்பித்துள்ளார் என சொல்லி உள்ளார். நான் விவாதத்திற்கு தயாராக உள்ளேன். கறம்பக்குடியில் 2 கோடி அளவுக்கு கட்டம் கொடுக்கப்பட்டுள்ளது. அங்கு மருத்துவர்கள் இல்லை என்று பொதுமக்கள் போராடு கிறார்கள். கேள்விக்கு பதில் இல்லாமல் விவாதத்திற்கு அழைத்தால் நான் பதில் அளிக்க தயார் என கூறினார்.
சி.விஜயபாஸ்கருக்கு பதில் அளித்து பேசிய மா.சுப்பிரமணியன், ஒரு மருத்துவமனையின் தரம் உயர்வு என்பது கட்டடம் கட்ட வேண்டும், மருத்துவர்களை நியமிக்க வேண்டும். மருத்துவ பணியிடங்களை உருவாக்க வேண்டும்.
இது போன்ற மருத்துவ பணியிடங்களை உருவாக்கமாமலேயே மருத்துவமனைகளை தரம் உயர்த்தி உள்ளார்கள். 130 மருத்துவமனைகளின் பட்டியலை உங்களிடம் தருகிறேன். இத்தனை மருத்துவமனைகளில் தரம் உயர்த்தி உள்ளோமே. மருத்துவர், செவிலியர்களை நியமனம் செய்துள்ளோமா என்பதை அடுத்த கூட்டத்தில் தாராளமாக பதில் சொல்லலாம் என கூறி உள்ளார்.