100 Years of Kalaignar: 'துணிவு இருந்தால் துக்கம் இல்லை'..கருணாநிதியின் பொன்மொழிகள் - ஓர் சிறப்பு தொகுப்பு
HBD Kalaignar: முன்னாள் முதல்வரும், திமுக-வின் முன்னாள் தலைவருமான கருணாநிதியின் 100வது பிறந்தநாள் விழா இன்று (ஜூன் 3) கொண்டாடப்படுகிறது. இந்தநாளில் அவரது சிறந்த பொன்மொழிகளை இங்கு காணலாம்.
கருணாநிதி
தமிழகத்தின் முதல்வராக 5 முறை பதவி வகித்தவர் கருணாநிதி. நாடகம், திரைப்படம், இலக்கியம், அரசியல் எனப் பல்வேறு துறைகளில் அழியாத் தடம் பதித்து தமிழ் மொழி, மாநில முன்னேற்றத்துக்குப் பெரும் பங்காற்றியவர். இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத ஆளுமைமிக்க தலைவர்களில் ஒருவரான கருணாநிதியின் 100-வது பிறந்த நாள் விழா இன்று (ஜூன் 3) கொண்டாடப்படுகிறது. இந்தநாளில் அவரது சிறந்த பொன்மொழிகளை இங்கு காணலாம்.
கருணாநிதி பொன்மொழிகள்:
- மிஞ்சினால் கெஞ்சுவது எப்படி கோழைத்தனமோ; அதைப் போன்றுதான் கெஞ்சினால் மிஞ்சிகிற வீரமும் ஆகும்.
- 'முடியுமா நம்மால்' என்பது தோல்விக்கு முன்பு வரும் தயக்கம். 'முடித்தே தீருவோம்' என்பது வெற்றிக்கான தொடக்கம்.
- நான் தாக்குதலை தாங்கிக்கொள்ளும் பழக்கம் உள்ளவன் மட்டுமல்ல..தாக்குதலை விரும்புபவனும் கூட..தாக்கப்பட்டால் தான் நான் கூட மெருகு பெற முடியும்.
- கோரிக்கைகளை நீட்டுவதில் நான் குறைபடுவது இல்லை.. சிலநேரங்களில் கோரிக்கைகளுக்கு பதிலாக கோரக் கைகள் நீட்டப்படுவதை கண்டுதான் பயம் கொள்கிறேன்.
- உலகில் ஓரிருவர் சரித்திரமாகிறார்கள்.. ஒருசிலர்.. சரித்திரத்தை உருவாக்குகிறார்கள்.. பலர் சரித்திரத்தில் இடம் பெறுகிறார்கள்.. மிகப்பலரோ இவை எதுவுமின்றி தரித்திரங்களாகவே மறைந்து போகிறார்கள்.
- ஒளியில் தான் நமது நிழலின் வடிவம் நமக்கு தெரிகிறது.. சோதனையில் தான் நமது நெஞ்சின் வலிமை நமக்கு புரிகிறது.
- புத்தகத்தில் உலகைப் படித்தால் அறிவு செழிக்கும்… உலகத்தையே புத்தகமாய்ப் படித்தால் அனுபவம் தழைக்கும்.
- குச்சியை குச்சியால் சந்திக்க வேண்டும்...கூர்வாளை கூர்வாளால் சந்திக்க வேண்டும்…
- தனிமை போன்ற ஒரு கொடுமையும் இல்லை; அதைப்போல் ஒரு உண்மையான நண்பனும் இல்லை.
- நான் நீ என்று சொல்லும் போது உதடுகள் ஒட்டாது.. நாம் என்று சொன்னால் தான் உதடுகள் கூட ஒட்டும்.
- ஒருவர் எத்தனை ஆண்டுகள் வாழ்கிறார் என்பதை, அவர் இறந்துபோன நாளிலிருந்து கணக்கிட்டு தெரிந்துகொள்ளலாம்.
- ஆசைகள் சிறகு ஆகலாம். அதற்காக கால்களை இழந்துவிட்டு பறந்தால் பூமிக்கு திரும்ப முடியாது.
- உயிரையே குடிக்க வந்த எதிரியே ஆயினும் உரிய மரியாதை அளிப்பதுதான் இந்த (தமிழ்) மண்ணுக்கே சொந்தமான பண்பாடு.
- அதிகார வர்க்கம், முள் நிறைந்த ரோஜாவாக இருக்கலாம். முள்ளம்பன்றியாக சிலிர்த்துக் காட்டக்கூடாது.
- பாராட்டும் புகழும் குவியும் போது குட்டையான வாசலுக்குள்,குனிந்து செல்வது போன்ற அடக்கம் வேண்டும்.
- ஒரு மெழுகுவர்த்தியைக் கொளுத்தினால், அதைக்கொண்டு ஆயிரம் விளக்குகளை ஏற்ற முடியும். அறிவொளி பெற்ற ஒரு பெண்ணாலும் அது முடியும்.
- உண்மையை மறைக்க முனைவது விதையை பூமிக்குள் மறைப்பது போலத் தான்…
- துணிவிருந்தால் துக்கமில்லை… துணிவில்லாதவனுக்கு தூக்கமில்லை….ஓயாமல் உழைத்த ஒரு தமிழன் இங்கே ஓய்வெடுத்துக் கொள்கிறான் என்று என் கல்லறையில் எழுதப்படும் எழுத்துக்களுக்காக நான் தவமிருக்கிறேன்.
டாபிக்ஸ்
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.