WatchVideo: இப்படி ஒரு வரவேற்பா: ராய்ப்பூரில் இந்திய அணிக்கு ராஜமரியாதை!
INDvsNZ 2nd ODI: நம்மூரில் கரகாட்டம், ஒயிலாட்டம் ஆடி வரவேற்பதைப் போல, அங்குள்ள பாரம்பரிய நடனங்களை ஆடி இந்திய வீரர்களை வரவேற்றனர்.
இந்தியா சுற்றுப்பயணம் செய்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி, மூன்று ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று வருகிறது. ஐதராபாத்தில் நடந்த முதல் ஒரு நாள் போட்டியில், சிறப்பாக ஆடிய இந்திய அணி, முதல் ஒரு நாள் போட்டியை வெற்றி பெற்றது.
ட்ரெண்டிங் செய்திகள்
இந்திய அணியின் சுப்மன் கில் சிறப்பாக ஆடி, அந்த போட்டியில் இரட்டை சதம் அடித்தார். தனியாளாக அவர் விளையாடிய விதம், பலரின் பாராட்டை பெற்றது. அதே போட்டியில் நியூசிலாந்து அணியும் எளிதில் தோல்வியை தழுவவில்லை.
கடைசி வரை போராடி, இறுதி ஓவர் வரை ஆட்டத்தை தன் பக்கம் வைத்திருந்து தான் தோல்வியை தழுவியது. ‘சாவு பயத்தை காட்டிட்டாங்க பரமா’ என்பதை உண்மையில் நியூலாந்து அணி அன்று காட்டியது என்று கூட கூறலாம்.
இந்நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை நடைபெற உள்ளது. மத்திய பிரதேச மாநிலம் ராய்ப்பூரில் நடைபெறும் இரண்டாவது ஒரு நாள் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி, நேற்று இரவு ராய்பூரில் உள்ள ஓட்டலுக்கு சிறப்பு பேருந்தில் வருகை தந்தனர்.
முன்னதாக கிரிக்கெட் வீரர்களை வரவேற்க, ஓட்டல் வளாகத்தில் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். பாதுகாப்பு கெடுபிடிகளை தாண்டி, அவர்கள் அனைவரும் இந்திய கொடியோடு அங்கு திரண்டனர். போதாக்குறைக்கு பாரம்பரிய நடன ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது.
நம்மூரில் கரகாட்டம், ஒயிலாட்டம் ஆடி வரவேற்பதைப் போல, அங்குள்ள பாரம்பரிய நடனங்களை ஆடி இந்திய வீரர்களை வரவேற்றனர். பாரம்பரிய முறைப்படி இந்திய வீரர்கள் அனைவருக்கும் துண்டு போர்த்தப்பட்டது.
மகிழ்ச்சியோடு அந்த மரியாதையை பெற்றுக்கொண்ட இந்திய கிரிக்கெட் வீரர்கள், தங்கள் அறைகளுக்குச் சென்றனர். இன்று தீவிர பயிற்சியில் ஈடுபடும் இந்திய அணி, அதே உத்வேகத்துடன் நியூசிலாந்து அணியை நாளை சந்திக்க உள்ளது. நியூசிலாந்து அணி ஏற்கனவே ராய்ப்பூருக்கு வந்து பயிற்சியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.