தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Aus Vs Pak T20: 20 ஓவர் ஆட்டத்தில் 5 விக்கெட்டுகளை எடுத்த 4வது ஆஸி., வீராங்கனை!

Aus vs Pak T20: 20 ஓவர் ஆட்டத்தில் 5 விக்கெட்டுகளை எடுத்த 4வது ஆஸி., வீராங்கனை!

Manigandan K T HT Tamil
Jan 24, 2023 12:17 PM IST

பாகிஸ்தான்-ஆஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

வெற்றி மகிழ்ச்சியில் ஆஸி., வீராங்கனைகள்
வெற்றி மகிழ்ச்சியில் ஆஸி., வீராங்கனைகள்

ட்ரெண்டிங் செய்திகள்

முன்னதாக, பாகிஸ்தான் மகளிர் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. ஏற்கனவே 3 ஒரு நாள் கொண்ட தொடரை முழுமையாக ஆஸி., அணியிடம் பறிகொடுத்தது பாகிஸ்தான்.

இந்நிலையில், டி20 தொடர் இன்று தொடங்கியது. சிட்னி மைதானத்தில் இன்று நடைபெற்ற முதல் டி20 ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

இதையடுத்து முதலில் விளையாடி பாகிஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 118 ரன்களை எடுத்தது. பாகிஸ்தான் தரப்பில் ஒமைமா சோஹைல் 30 ரன்கள் எடுத்தார். அந்த அணியின் கேப்டன் மரூஃப் 1 ரன்னில் நடையைக் கட்டினார்.

ஆஸி., தரப்பில் அதிகபட்சமாக மேகன் 4 ஓவர்கள் வீசி 15 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து அதில் ஒரு மெய்டன் ஓவரையும் வீசி 5 விக்கெட்டுகளை அள்ளினார். ஈ.பெர்ரி, அலானா கிங் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை சுருட்டினர்.

119 ரன்கள் இலக்கு

இதையடுத்து, ஆஸி., மகளிர் அணி 119 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களத்தில் இறங்கியது. தொடக்க வீராங்கனையான எல்லிஸ் பெர்ரி, அரை சதம் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் அணியின் வெற்றியை உறுதிசெய்தார்.

அவர் 40 பந்துகளில் 57 ரன்களை விளாசினார். கேப்டன் மெக் லானிங் 14 ரன்களிலும், ஆஷ்லி கார்ட்னர் 30 ரன்களிலும், டஹிலா மெக்ராத் 14 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

5 விக்கெட்டுகள் வீழ்த்தி பவுலர்

டி20 போட்டிகளில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய நான்காவது ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் என்ற பெருமையை மேகன் பெற்றார். மேலும் மோலி ஸ்ட்ரானோ (10 ரன்கள் விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகள்) மற்றும் தற்போதைய சக வீராங்கனை ஜெஸ் ஜோனாசென் (12 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகள்) ஆகியோருக்கு அடுத்த இடத்தில் மேகன் இடம்பிடித்துள்ளார்.

ஜே.எல்.ஹன்டர் 22 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். மேகன் 15 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை சுருட்டியுள்ளார். ஆட்ட நாயகி விருதும் அவருக்கே வழங்கப்பட்டது.

5 விக்கெட்டுகளை எடுத்து மேகன்
5 விக்கெட்டுகளை எடுத்து மேகன்

இரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 கிரிக்கெட் ஆட்டம் ஹோபர்ட்டில் 27ஆம் தேதி நடைபெறவுள்ளது.

WhatsApp channel

டாபிக்ஸ்