Manu Bhaker: இரண்டு பதக்கங்களை வெல்ல காரணமாக இருந்த துப்பாக்கி..! மோடியிடம் காண்பித்த மனு பாக்கர்
Paris Olympics 2024: பாரிஸ் ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வெல்ல காரணமாக இருந்த துப்பாக்கியை மோடியிடம் காண்பித்தார் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கர்.

பாரிஸ் ஒலிம்பிக் 2024இல், இந்தியாவின் இளம் துப்பாக்கி சுடுதல் வீராங்கனையான மனு பாக்கர் இரண்டு பதக்கங்களை வென்று வரலாற்று சாதனை புரிந்தார். இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் ஒரே விளையாட்டு பதிப்பில் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.
பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் வெண்கலம் வென்று, ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்தியாவின் முதல் பெண் துப்பாக்கி சுடும் வீராங்கனை என்ற சாதனை புரிந்தார். இதன் பின்னர், கலப்பு 10 மீட்டர் ஏர் பிஸ்டல் குழு போட்டியில் சக வீரர் சரப்ஜோத் சிங்குடன் இணைந்து வெண்கலம் வென்றார்.
பிரதமர் மோடியுடன் சந்திப்பு
பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய அணியினரை சந்தித்தார். அப்போது மனு பாக்கர், தனக்கு இரண்டு பதக்கங்களை வெல்ல காரணமாக இருந்த கைத்துப்பாக்கியை பிரதமரிடம் காண்பித்தார். தொடர்ந்து தனது பதக்கங்களை பிரதமரிடம் கொடுத்தார்.