Macau Open 2024: கம்பேக் தராத ஸ்ரீகாந்த்..அரையிறுதிக்கு முன்னேறிய தெரசா - காயத்ரி ஜோடி! அடுத்த போட்டி யாருடன்?
Macau Open 2024: காயத்திலிருந்து மீண்டு வந்து கம்பேக் தராத ஸ்ரீகாந்த் காலிறுதி சுற்றுடன் வெளியேறியுள்ளார். பெண்கள் இரட்டையர் பிரிவில் தெரசா - காயத்ரி ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
மக்காவ் ஓபன் 2024 பேட்மிண்டன் போட்டிகள் சீனாவில் உள்ள மக்காவ் நகரில் நடைபெற்று வருகிறது. செப்டம்பர் 24ஆம் தேதி தொடங்கிய இந்த போட்டிகள் செப்டம்பர் 29ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் வெற்றியாளர்களுக்கு மொத்த பரிசு தொகையாக 210, 000 அமரிக்கா டாலர்கள் வழங்கப்படவுள்ளது.
காலிறுதியில் வெளியேறிய ஸ்ரீகாந்த்
இந்தியா நட்சத்திர வீரரும், ஆறாவது சீட் வீரராக இருந்து வரும் கிடாம்பி ஸ்ரீகாந்த், ஆண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியில் ஹாங்காங் நாட்டை சேர்ந்த எங் கா லாங் அங்கஸ் என்பவரை எதிர்கொண்டார்.
பரபரப்பான இந்த போட்டியில் 2021 உலக சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப்பதக்கம் வென்ற வீரரான ஸ்ரீகாந்த் 16-21 12-21 என நேர் செட்களில் மோசமான தோல்வியை தழுவினார்.
மொத்தம் 31 நிமிடங்கள் வரை இந்த போட்டி நீடித்தது. காயத்தால் அவதிப்பட்டு வந்த ஸ்ரீகாந்த், கடந்த மே மாதத்துக்கு பின் களமிறங்கிய இந்த போட்டியில் எதிர்பார்த்த கம்பேக் கொடுக்க முடியவில்லை.
மகளிர் இரட்டையர் பிரிவில் வெற்றி
மகளிருக்கான இரட்டையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் மூன்றாம் சீட் வீராங்கனைகளான தெரசா ஜாலி மற்றும் காய்த்ரி கோபிசந்த் ஆகியோர் சீனா தைப்பேயின் ஆறாம் சீட் வீராங்கனைகளான ஹுயு யின் ஹு மற்றும் லின் ஜி யுன் ஆகியோரை எதிர்கொண்டனர்.
விறுவிறுப்பு மிக்க இந்த ஆட்டத்தில் 21-12 21-17 என்ற புள்ளிக்கணக்கில் இந்திய ஜோடி வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.
இதையடுத்து தங்களது அரையிறுதி ஆட்டத்தில் மற்றொரு சீனா தைப்பே ஜோடியும், எட்டாம் சீட் வீராங்கனைகளுமான ஷேய் பீ ஷான் மற்றும் ஹங் யன் ஷூ ஆகியோர் எதிர்கொள்ள இருக்கிறார்கள்.
உலக அளவில் 23வது ரேங்கிங்கில் இருக்கும் இந்திய ஜோடி கடந்த ஜூன் மாதம் சிங்கப்பூர் ஓபன் சூப்பர் 750 தொடரில் அரையிறுதியில் விளையாடியது. அதன் பின்னர் தற்போது மீண்டும் மக்காவ் ஓபன் தொடரில் அரையிறுதி போட்டியில் விளையாட இருக்கிறது.
மக்காவ் ஓபன் தொடர்
இந்த தொடர் 2024 பிடிபிள்யூஎஃப் சுற்றுப்பயணத்தின் நடைபெறும் 28 தொடர்களில் ஒன்றாக உள்ளது. 2006 முதல் மக்காவ் பேட்மிண்டன் தொடர்கள் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் கடந்த 2013 முதல் 2015 வரை தொடர்ந்து மூன்று ஆண்டுகளில் மகளிர் ஒற்றையர் பிரிவு போட்டியில் பி.வி. சிந்து கோப்பை வென்றார். மக்காவ் ஓபன் தொடரில் இந்தியா சார்பில் பி.வி. சிந்து மட்டுமே கோப்பை வென்றுள்ளார்.
கடைசியாக இந்த தொடர் 2019இல் நடைபெற்றது. இதன் பின்னர் 4 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் நடைபெற்று வருகிறது.
இந்த தொடர் பொதுவாக உலகெங்கிலும் உள்ள சிறந்த வீரர்களை ஈர்க்கிறது. பல பதக்கங்கள் வென்று தங்களை பெயரை நிறுவிய நட்சத்திரங்கள் மற்றும் வளர்ந்து வரும் திறமையாளர்களுக்கான தளத்தை வழங்குகிறது. இந்த தொடரின் போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஒற்றையர், இரட்டையர், கலப்பு இரட்டையர் உட்பட பல்வேறு பிரிவுகள் இடம்பெற்றுள்ளன.
போட்டிகள் பொதுவாக ஆண்டுதோறும் மக்காவ்வில் நடைபெறும். இதன் போட்டி சூழல் மற்றும் துடிப்பான உள்ளூர் கலாச்சாரத்திற்காக அறியப்படுகிறது.
டாபிக்ஸ்