கொரியா மாஸ்டர்ஸ் தொடர்..ஒற்றை இந்தியராக போராடும் கிரண் ஜார்ஜ் - அரையிறுதிக்கு தகுதி
கொரியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் கிரண் ஜார்ஜ், ஜப்பானின் டகுமா ஒபயாஷியை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.
கொரியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் கொரியாவிலுள்ள இக்சான் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவை சேர்ந்த 24 வயது இளம் வீரர் கிரண் ஜார்ஜ் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.
ஆதிக்கம் மிக்க வெற்றி
ஜப்பான் வீரர் டகுமா ஒபயாஷிக்கு எதிரான காலிறுதி போட்டியில் இந்தியாவின் கிரண் ஜார்ஜ் ஆதிக்கம் மிக்க ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 39 நிமிடங்கள் வரை நீடித்த இந்த போட்டியில், ஐந்தாவது சீட் ஐப்பான் வீரரை 21-14, 21-16 என்ற புள்ளி கணக்கில் நேர் செட்களில் வீழ்த்தினார் இந்திய வீரர்.
அரையிறுதியில் யாருடன் மோதல்
இதையடுத்து கிரண் ஜார்ஜ் தனது அரையிறுதி ஆட்டத்தில் தாய்லாந்து நாட்டை சேர்ந்த டாப் சீட் வீரர், உலக அளவில் ஐந்தாவது இடத்தில் இருக்கும் வீரரான குன்லவுட் விதிசார்ன் என்பவரை எதிர்கொள்ள இருக்கிறார். இந்த போட்டி ஜார்ஜுக்கு கடினமான பலப்பரிட்சையாக அமையும் என தெரிகிறது.
சீனாவின் லியு லியாங்குக்கு எதிராக 21-15, 21-11 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார் குன்லவுட் விதிசார்ன்.
இதற்கு முன்பு ஜார்ஜ் - விதிசார்ன் ஆகிய இருவரும் இரண்டு முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளனர். இந்த ஆண்டு ஜனவரியில் நடந்த இந்தோனேசியா மாஸ்டர்ஸில் விடிட்சார்ன் வெற்றி பெற்றார்.
சமீபத்தில் நடைபெற்று முடிந்த பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் குன்லவுட் விதிசார்ன் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். ஒடிசா ஓபன், இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் தொடர்களை வென்ற வீரராக இந்தியாவின் ஜார்ஜ் இருந்து வருகிறார்.
அதே நேரத்தில், கடந்த 2017இல் மலேசியா சர்வதேச தொடரில், விதிசார்னை வீழ்த்தி ஜார்ஜ் வெற்றி பெற்றார்.
ஒற்றை ஆளாக போராடும் ஜார்ஜ்
தற்போது இந்த தொடரில் விளையாடி வரும் ஒரே இந்தியராக ஜார்ஜ் இருந்து வருகிறார். உலக தரவரிசையில் 44வது இடத்தில் இருக்கும் இவர், மூன்றாம் சீட் வீரரான சீனா தைப்பேயின் சி யு ஜெனை 21-17, 19-21, 21-17 என்ற செட் கணக்கில் தனது முந்தைய ஆட்டத்தில் வீழ்த்தினார்.
கொரியா மாஸ்டர்ஸ் தொடர்
பிடபிள்யூஎஃப் உலக டூர் சூப்பர் 300 தொடர்களில் ஒன்றாக கொரியா மாஸ்டர்ஸ் தொடர் இருந்து வருகிறது. இந்த தொடர் கொரியாவில் கடந்த 2007இல் இருந்து நடந்து வருகிறது. தற்போது 16வது பதிப்பாக நடந்துகொண்டிருக்கிறது. இந்த தொடரில் ஒரு முறை கூட எந்த வகை போட்டியிலும் இந்தியா பட்டம் வென்றது இல்லை.
இதையடுத்து தற்போது அரையிறுதி தகுதி பெற்றிருக்கும் இந்திய வீரர் இறுதி போட்டிக்கு முன்னேறினால் முதல் பதக்கத்தை வென்று வரலாறு படைக்கும் வாய்ப்பை பெறுவார்.
டாபிக்ஸ்