Mitchell Starc: 5 விக்கெட் எடுத்ததற்கான சீக்ரெட் இதுதான்-மிட்செல் ஸ்டார்க்
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Mitchell Starc: 5 விக்கெட் எடுத்ததற்கான சீக்ரெட் இதுதான்-மிட்செல் ஸ்டார்க்

Mitchell Starc: 5 விக்கெட் எடுத்ததற்கான சீக்ரெட் இதுதான்-மிட்செல் ஸ்டார்க்

Manigandan K T HT Tamil
Mar 20, 2023 03:12 PM IST

Ind vs Aus: ‘கடந்த 13 ஆண்டுகளாக எனது பந்துவீச்சு திட்டம் மாறவில்லை. நேராக பந்துவீசி ஸ்டம்பை காலி செய்வதே எனது இலக்கு.’

ஆஸி., பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்
ஆஸி., பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் (ANI)

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் தொடரில் ஆஸி., வென்றது. இதையடுத்து 1-1 என்ற கணக்கில் தொடர் சமனில் உள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் நேற்று நடந்தது.

ஆனால், 26 ஓவர்களில் முடிவுக்கு வந்தது இந்திய அணியின் இன்னிங்ஸ். இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 117 ரன்கள் எடுத்தது.

அதற்கு காரணம் ஆஸி., பவுலர் மிட்செல் ஸ்டார்க். அவர் அட்டகாசமாக பந்துவீசி 5 இந்திய வீரர்களை ஆட்டமிழக்கச் செய்தார்.

இதையடுத்து, ஆஸி., அணி விக்கெட் இழப்பின்றி 121 ரன்கள் வெற்றி கண்டது. தொடக்க வீரர்களான டிராவிஸ் ஹெட் 51 ரன்களும், மிட்செல் மார்ஷ் 66 ரன்களும் விளாசி அணியை வெற்றிப் பாதைக்கு இட்டுச் சென்றனர்.

இந்நிலையில், தனது பவுலிங் திட்டம் குறித்து மிட்செல் ஸ்டார்க் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கடந்த 13 ஆண்டுகளாக எனது பந்துவீச்சு திட்டம் மாறவில்லை. நேராக பந்துவீசி ஸ்டம்பை காலி செய்வதே எனது இலக்கு. அப்படியே ஸ்விங் செய்யவும் முயற்சி செய்வேன்.

பவர்பிளேயில் அதிக விக்கெட்டுகளை எடுக்க வேண்டும் என்றே நினைப்பேன். முன்பெல்லாம் நிறைய ரன்களை கொடுத்து விடுவேன். தற்போது விக்கெட்டுகள் கிடைக்கிறது. புதிதாக எந்த திட்டமும் தீட்டவில்லை.

இந்தியாவுக்கு எதிராக கடைசி 2 ஒரு நாள் ஆட்டங்களிலும் எனது பழைய பவுலிங் திட்டத்தையே பயன்படுத்தினேன்.

உலகக் கோப்பை கிரிக்கெட்டுக்கு முன்னோட்டமாக இதை கருதுகிறேன். இந்த ஒரு நாள் தொடரை நாங்கள் ஜெயிக்க பாடுபடுவோம்.

இப்போது சென்னைக்கு செல்கிறோம். அந்த ஆட்டத்திலும் ஜெயித்துவிட்டால் உலகக் கோப்பை தொடரில் சிந்தனையை குவிக்க வேண்டியதுதான் எங்கள் அடுத்த திட்டம் என்றார் மிட்செல் ஸ்டார்க்.

ஒரு நாள் கிரிக்கெட்டில் 9 முறை 5 விக்கெட்டுகளை எடுத்த வீரர் என்ற முன்னாள் ஆஸி., வீரர் பிரெட் லீயின் சாதனையையும் ஸ்டார்க் சமன் செய்தார்.

வரும் புதன்கிழமை இரு அணிகளுக்கு இடையே கடைசி ஒரு நாள் கிரிக்கெட் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவுள்ளது.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.