ரத்தன் டாடா மறைவு..டாடா ட்ரஸ்ட் புதிய தலைவர் ஆனார் நோயல் டாடா! யார் இவர்? பின்னணி என்ன?
ரத்தன் டாடாவின் மறைவுக்கு பின் அவரது ஒன்றுவிட்ட சகோதரரான நோயல் டாடா, டாடா டிரஸ்ட்களின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டார். பல்வேறு டாடா நிறுவனங்களில் பின்னணி கொண்டவராகவும், பல டாடா நிறுவனங்களின் தலைவராகவும் நோயல் டாடா இருந்து வருகிறார்.
ரத்தன் டாடாவின் ஒன்றுவிட்ட சகோதரர் நோயல் டாடா, டாடா குழுமத்தின் சக்திவாய்ந்த பரோபகாரப் பிரிவின் தலைவராக அக்டோபர் 11ஆம் தேதி நியமிக்கப்பட்டார். இதன் மூலம் அவர் 165 பில்லியன் டாலர் மதிப்பு மிக்க குழுமத்தின் மீது மறைமுக செல்வாக்கை செலுத்தும் நபராக ஆகியுள்ளார்.
யார் இந்த நோயல் டாடா?
• நோயல் டாடா, ஒரு ஐரிஷ் குடிமகன் ஆவார். பொதுமக்களின் பார்வையில் இருப்பதைக் காட்டிலும் செயல்பாடுகளில் கவனம் செலுத்துபவராக திகழ்கிறார். இதன் காரணமாக அவர் பற்றிய சுயவிவரமானது வெளி உலகுக்கு குறைவாகவே தெரியவந்துள்ளது. அவர் பல டாடா குழும நிறுவனங்களின் வாரியங்களில் தலைமை பொறுப்புகளில் இருந்து வருகிறார்.
•நேவல் டாடா மற்றும் சிமோன் டாடா ஆகியோரின் மகன்தான் நோயல் டாடா. முதலில் சூனூ கமிசாரியட்டை என்பவரை மணந்திருந்தார் நேவர் டாடா. அவருக்கு ரத்தன் மற்றும் ஜிம்மி டாடா என்ற இரண்டு குழந்தைகள் இருந்தனர். நோயல், மறைந்த பல்லோன்ஜி மிஸ்திரியின் மகளும், மறைந்த சைரஸ் மிஸ்திரியின் சகோதரியுமான ஆலு மிஸ்திரியை மணந்தார். இந்த தம்பதியருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்: மகள்கள் லியா மற்றும் மாயா, மற்றும் மகன் நெவில்.
• நோயல் டாடா, டாடா இன்டர்நேஷனலில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார், பின்னர் 1999இல் ட்ரெண்டின் நிர்வாக இயக்குனர் ஆனார், அங்கு அவர் வெஸ்ட்சைட் சில்லறை சங்கிலியின் விரிவாக்கத்துக்கு தலைமை தாங்கினார்.
• 2019 முதல், சர் ரத்தன் டாடா அறக்கட்டளை மற்றும் சர் டோராப்ஜி டாடா அறக்கட்டளையின் குழுவில் நோயல் உள்ளார். அவரது குழந்தைகள் 2023இல் இந்த அறக்கட்டளைகளுடன் இணைக்கப்பட்டு, பின் பல்வேறு அறக்கட்டளைகளின் அறங்காவலர்களாக நியமிக்கப்பட்டனர்.
டாடா அறக்கட்டளைகள் எவ்வளவு சக்திவாய்ந்தவை?
டாடா குழுமத்தினுள், டாடா டிரஸ்ட்ஸ் குறிப்பிடத்தக்க அதிகாரத்தைக் கொண்டுள்ளது. டாடா குழுமத்தின் ஹோல்டிங் நிறுவனமான டாடா சன்ஸ் பிரைவேட் லிமிடெட்டின் 65.9% பங்குகளை இது கொண்டுள்ளது,
அதே சமயம் 12.87% பல டாடா குழும நிறுவனங்களுக்கும், 18.4% ஷபூர்ஜி பல்லோன்ஜி குடும்பத்துக்கும் சொந்தமானது. நுகர்வோர் பொருட்கள், ஹோட்டல்கள், ஆட்டோமொபைல்கள் மற்றும் விமான நிறுவனங்கள் போன்ற தொழில்களில் 30 நிறுவனங்களை டாடா சன்ஸ் மேற்பார்வையிடுகிறது.
14 அறக்கட்டளைகளை நிர்வகிக்கும் ஒரு குடை அமைப்பான டாடா டிரஸ்ட்ஸ், டாடா சன்ஸ்ஸைக் கட்டுப்படுத்துகிறது. இரண்டு முக்கிய அறக்கட்டளைகளான சர் டோராப்ஜி டாடா டிரஸ்ட் மற்றும் சர் ரத்தன் டாடா டிரஸ்ட் ஆகியவை டாடா சன்ஸ் நிறுவனத்தில் 50 சதவீதத்துக்கும் அதிகமான பங்குகளை வைத்துள்ளன.
டாடா டிரஸ்ட்கள் நேரடியாக டாடா சன்ஸ் நிறுவனத்தை நிர்வகிப்பதில்லை என்றாலும், ரத்தன் டாடா தலைமையிலான அதன் நியமிக்கப்பட்ட நிர்வாகக் குழு மூலம் செல்வாக்கைப் பயன்படுத்துகிறது. இந்தக் குழுவில் வேணு சீனிவாசன், விஜய் சிங், மெஹ்லி மிஸ்திரி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
டாடா டிரஸ்ட்ஸ், டாடா சன்ஸ் குழு உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பகுதியையும் நியமிக்கிறது, அவர்கள் முக்கிய முடிவுகள் மீது வீட்டோ அதிகாரம் (குறிப்பிட்ட நடவடிக்கை நடப்பதைத் தடுக்கும் சட்ட அதிகாரம்) பெற்றுள்ளனர்.
டாடா டிரஸ்ட்ஸ் தலைவராக நோயல் டாடா எப்படி தேர்ந்தெடுக்கப்பட்டார்?
2012இல் ரத்தன் டாடா ஓய்வு பெற்றபோது, டாடா சன்ஸ் நிறுவனத்தை வழிநடத்தும் வாய்ப்புள்ளவராக நோயல் டாடா கருதப்பட்டார். இருப்பினும், அவரது மைத்துனரான சைரஸ் மிஸ்திரி அந்தப் பாத்திரத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2016இல், ரத்தன் டாடா மற்றும் மிஸ்திரி இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, மிஸ்திரி தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக நடராஜன் சந்திரசேகரன் நியமிக்கப்பட்டார். மிஸ்திரி 2022இல் கார் விபத்தில் இறந்தார்.
இப்போது, மும்பையில் நடைபெற்ற கூட்டத்தில் டாடா அறக்கட்டளையின் தலைவராக நோயல் டாடா ஒருமனதாக நியமிக்கப்பட்டார். ஒரு டாடா நிர்வாகியின் கூற்றுப்படி, குழுவின் பல நீண்டகால உறுப்பினர்கள் அறக்கட்டளைகளை வழிநடத்த அவரது நியமனத்தை ஆதரித்ததாக கூறப்படுகிறது