BADLAPUR CASE: குற்றங்கள் அதிகரிக்கும்போது ராக்கி கட்டுவதில் ஆர்வமாக உள்ள மகாராஷ்டிர முதலமைச்சர் - உத்தவ் தாக்கரே தாக்கு
BADLAPUR CASE: பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்கும்போது ராக்கி கட்டுவதில் ஆர்வமாக உள்ள மகாராஷ்டிர முதலமைச்சர் என உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டேவை விமர்சித்துள்ளார்.
BADLAPUR CASE: மழைக்கு மத்தியில், நெற்றி மற்றும் கைகளில் கருப்பு பட்டைகளை அணிந்து, சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி (என்சிபி-எஸ்பி), உத்தவ் தாக்கரேவின் சிவசேனா (யுபிடி) மற்றும் காங்கிரஸ் அடங்கிய மகா விகாஸ் அகாதியின் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் இன்று(ஆகஸ்ட் 24) மகாராஷ்டிராவின் பல்வேறு இடங்களில், பத்லாபூர் பாலியல் வன்கொடுமை வழக்குக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னாள் முதலமைச்சரும் சிவசேனா (யுபிடி) தலைவருமான உத்தவ் தாக்கரே தாதரில், உள்ள சிவசேனா பவனுக்கு வெளியே நடந்த போராட்டத்தில் கலந்துகொண்டார். ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான மாநில அரசைத் தாக்கிப் பேசிய உத்தவ் தாக்குரே, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஆளும் அரசு ஆதரவளிப்பதாக குற்றம்சாட்டினார்.
"நாங்கள் பந்த் ஏற்பாடு செய்துள்ளோம்.சகோதரிகள் மற்றும் மகள்களின் பாதுகாப்புக்காக நாங்கள் பந்துக்கு அழைப்பு விடுத்தோம். மகாராஷ்டிராவில் பந்த் போராட்டம் நடத்துவது ஏன்?’’ என்று உத்தவ் தாக்கரே கேள்வி எழுப்பினார்.
பெண்களுக்கு எதிரான குற்றம் அதிகரிக்கும்போது ராக்கி கட்டுவதில் மும்முரமாக உள்ள மகாராஷ்டிர முதலமைச்சர்:
இதுபோன்ற "வெட்கங்கெட்ட அரசாங்கத்தை" மகாராஷ்டிரா ஒருபோதும் பார்த்ததில்லை என்று கூறிய அவர், மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் அவரது துணை முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆகியோரை கேலி செய்தார். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்கும் போது, இந்த "கான் மாமா" ராக்கி கட்டுவதில் மும்முரமாக உள்ளார் என்று கூறினார்.
மாநிலத்தில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வருவதாகவும், வெறும் 10 நாட்களில் இதுபோன்ற 12 சம்பவங்கள் நடந்துள்ளதாகவும் யுபிடி சிவசேனா மாநிலங்களவை எம்.பி. கூறினார்.
"தினமும் தானேவில் போக்சோ சட்டத்தின் கீழ் ஒரு புதிய வழக்கு பதிவு செய்யப்படுகிறது. அதை எதிர்த்துப் போராட்டம் நடத்தி வருகிறோம். உத்தரப்பிரதேசத்தை தொடர்ந்து மகாராஷ்டிராவில் கொடூரமான குற்றங்கள் நடந்து வருகின்றன. மகாராஷ்டிராவின் பெண்கள் சக்தி சட்டம் பற்றி கேட்கிறார்கள்" என்று அவர் கூறினார்.
மறுபுறம், காங்கிரஸ் தலைவர் நானா படோல், தேசியவாத காங்கிரஸ்-சமாஜ்வாதி தலைவர் ஜெயந்த் பாட்டீல் ஆகியோர் கட்சித் தொண்டர்களுடன் போராட்டத்தில் பங்கேற்றனர்.
சில இடங்களில் பாஜக நடத்திய போராட்டம்:
இருப்பினும், எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை சமாளிக்கும் வகையில், மாநிலத்தின் பல்வேறு இடங்களில் பாரதிய ஜனதா கட்சி போராட்டங்களை நடத்தியது. சத்ரபதி சம்பாஜி நகரில், பத்லாபூர் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு விரைவான விசாரணை மற்றும் கடுமையான தண்டனை கோரி பாஜக தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த வழக்கை விரைவு நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும் என்றும், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும் பாஜக தலைவர்கள் கோரினர்.
மகாராஷ்டிராவில் அரசியல் கட்சிகள் அல்லது தனிநபர்கள் பந்த் நடத்த மும்பை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் விஜய் வதேட்டிவார் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, நீதிமன்ற தீர்ப்பை மதித்து பந்தை வாபஸ் பெற்றுள்ளோம் என்று, இதுபோன்ற சூழ்நிலையில், அரசாங்கம் கவனம் செலுத்தாதபோது, குரல் எழுப்புவது எதிர்க்கட்சிகளின் வேலை என்று விஜய் வதேட்டிவார் கூறியதாக பி.டி.ஐ செய்தி முகமை தகவல் வெளியிட்டுள்ளது.
பாலியல் வன்கொடுமை பற்றி பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருக்கு எப்படி தெரிந்தது?
பத்லாபூர் பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட 4 வயது சிறுமி கழிவறைக்குச்செல்ல தயங்கினார். கழிவறைக்கோ, பள்ளிக்கோ செல்ல அவள் தயங்கியதால், அவர்களது குடும்பத்தினர் மருத்துவப் பரிசோதனைக்கு சென்றனர். பரிசோதனை முடிவுகளில் பாலியல் வன்கொடுமை உறுதிசெய்யப்பட்டது.
இந்தச் சம்பவம் ஆகஸ்ட் 13ஆம் தேதி பள்ளியின் கழிப்பறையில் நடந்ததாக எஃப்.ஐ.ஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பெற்றோர் கடந்த 16-ம் தேதி புகார் அளித்தனர். 4 வயது குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக பள்ளியின் துப்புரவு ஊழியர் அக்ஷய் ஷிண்டே (23) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த குற்றம் மாநிலத்தில் பெரும் போராட்டங்களைத் தூண்டியுள்ளது மற்றும் எதிர்க்கட்சிகள் “மகாராஷ்டிரா பந்த்”க்கு அழைப்பு விடுத்தன.
தொடர்புடையை செய்திகள்