Karnataka: கர்நாடகாவில் காங்கிரஸை எதிர்க்க குமாரசாமியுடன் இணையும் பாஜக? எடியூரப்பா பரபரப்பு பேட்டி!
எடியூரப்பாவின் இந்த பேச்சு பாஜக- மஜத கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தைக்கு அடித்தளமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
காங்கிரஸ் அரசுக்கு எதிராக குமாரசாமி உடன் எதிர்காலத்தில் ஒன்றாக போராடுவோம் என பாஜக மூத்த தலைவர் எடியூரப்பா கூறிய கருத்து பாஜக-மஜத கூட்டணிக்கு அடித்தளமாக அமைந்துள்ளது.
அடுத்தாண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை வலுப்படுத்தும் பணிகளை பாஜக செய்து வருகிறது. தேசிய ஜனநாயக கூட்டணியின் முக்கிய அங்கங்களாக இருந்த சிவசேனா, ஐக்கிய ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகள் உடன் பாஜகவுக்கு பிணக்கை ஏற்படுத்தி உள்ள நிலையில் இது தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று அக்கட்சி கருதுவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் கட்சிகளை இணைக்க பாஜக திட்டமிட்டு வருகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி ஆளும் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி பாஜக மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். காங்கிரஸ் கட்சியை கண்டித்து சட்டப்பேரவையில் பாஜக எம்.எல்.ஏக்கள் நேற்று அமளியிலும் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக முன்னாள் முதலமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான எடியூரப்பா, “கர்நாடக எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பதை கட்சித் தலைமையுடன் பேசி முடிவு செய்வோம். இன்று மாலை அல்லது நாளைக்குள் இது குறித்த அறிவிப்பு வெளியாகும். காங்கிரஸ் கட்சி குறித்த எச்.டி.குமாரசாமி கூறுவது முற்றிலும் உண்மை, அவரின் அறிக்கையை நான் ஆதரிக்கிறேன். குமாரசாமியும் நாங்களும் எதிர்காலத்தில் ஒன்றாக போராடுவோம்” என கூறினார்.
எடியூரப்பாவின் இந்த பேச்சு பாஜக- மஜத கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தைக்கு அடித்தளமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.