தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  One Nation One Election Polls Expense: ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்தினால் இத்தனை கோடி செலவாகுமா? வெளியான தகவல்

One nation One Election Polls Expense: ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்தினால் இத்தனை கோடி செலவாகுமா? வெளியான தகவல்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Sep 13, 2023 11:49 AM IST

நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவை தேர்தலை நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நடத்துவதற்கு ரூ. 10 லட்சம் கோடி வரை செலவாகும் என தெரியவந்துள்ளது.

ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்தினால் எவ்வளவு செலவாகும் என்பது குறித்து ஆய்வு முடிவு வெளியாகியுள்ளது
ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்தினால் எவ்வளவு செலவாகும் என்பது குறித்து ஆய்வு முடிவு வெளியாகியுள்ளது

ட்ரெண்டிங் செய்திகள்

இதற்கிடையே நாடாளுமன்றம், சட்டப்பேரவை தேர்தலை ஒரே நேரத்தில் நடத்துவதற்கான சாத்திய கூறுகளை ஆய்வு செய்ய முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த தலைமையில் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளது. ஒரே நேரத்தில் இந்த இரண்டு தேர்தல்களையும் நடத்துவதால் செலவு, நேரம் மிச்சமாகும் என மத்திய அரசு சார்பில் கூறப்படுகிறது.

இதையடுத்து ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து பல்வேறு தரவுகள், தேர்தல் செலவினங்கள் அடிப்படையில் ஊடக ஆய்வுகளுக்கான மையமான, சிஎம்எஸ் ஆய்வு மேற்கொண்டுள்ளது. இதன் முடிவுகளின் அடிப்படையில், அதன் தலைவர் என். பாஸ்கர் ராவ் கூறியதாவது:

நாடாளுமன்றம், மாநில சட்டப்பேரவை, ஊராட்சி, நகராட்சி உள்பட அனைத்து அமைப்புகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு ரூ. 10 லட்சம் கோடி செலவாகும் என கணிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள 4,500 வரை உள்ள சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த ரூ. 3 லட்சம் கோடி வரை செலவாகலாம். அத்துடன் நாடு முழுவதும் உள்ள நகராட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்த ரூ. 1 லட்சம் கோடி வரை செலவாகலாம்.

நாடு முழுவதும் மாவட்ட கவுன்சில், மண்டலங்கள், கிராம் ஊராட்சி உறுப்பினர்கள் ஆகிய இடங்களுக்கு தேர்தல் நடத்த ரூ. 4.30 லட்சம் கோடி வரை செலவாகும். அதன்படி ஒட்டுமொத்மாக அனைத்து அமைப்புகளுக்கு சேர்த்து ரூ. 10 லட்சம் கோடி வரை செலவாக வாய்ப்புள்ளது.

ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதன் மூலம் பயண செலவு, அச்சு செலவு, ஊடக பிரச்சாரங்கள், வாக்கு சாவடி சரக்கு போக்குவரத்து போன்ற சில விஷயங்களை மட்டுமே குறைக்க முடியும்.

எனவே தேர்தல் செலவுகளை குறைக்க ஒரே நேரத்தில் தேர்தலை நடத்துவதை காட்டிலும், தேர்தல் நடத்தை விதிமுறைகளை தீவிரமாக நடைமுறைப்படுத்துவது, வாக்கு பதிவு நாளை குறைப்பதும் அவசியமாகிறது. அவ்வாறு செய்யும் பட்சத்தில் ரூ. 10 லட்சம் கோடி செலவை, ரூ. 3 முதல் ரூ. 5 லட்சம் கோடி வரை குறைக்கலாம்.

இதில் மத்திய, மாநில அரசுகளால் மட்டுமல்லாமல், அரசியல் கட்சிகள் மேற்கொள்ளும் செலவும் சேர்க்கப்பட்டுள்ளது. தற்போதையை நடைமுறையில் தேர்தல் நாள் அறிவிப்பதற்கு முன்னரே பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான பிரச்சாரத்தை தொடங்குகின்றன.

தேர்தல் நாள் அறிவிக்கப்பட்ட பின்னர் அரசியல் கட்சிகள் மேற்கொள்ளும் பிரச்சாரம் தொடர்பான செலவுகள் மட்டும் தேர்தல் ஆணையத்திடம் கணக்கு காட்டுமாறு அறிவுறுத்தப்படுகிறது. அத்துடன் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பிரச்சாரத்துக்கு செய்யப்படும் செலவுகள் குறித்த வரம்பு எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை.

கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் அரசியல் கட்சிகள் நன்கொடையாக ரூ. 6,400 கோடி வரை வசூலித்து, ரூ. 2,600 கோடி மட்டும் செலவழித்துள்ளன.

2024 தேர்தலில் ரூ. 1.20 லட்சம் கோடி வரை செலவழிக்க அரசியல் கட்சிகள் திட்டமிட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

IPL_Entry_Point