PM Modi In Kanyakumari: 45 மணி நேர தியானத்தை நிறைவு செய்தார் மோடி! திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை செலுத்தினார்!
PM Modi In Kanyakumari: தனது 45 மணி நேர தியானம் நிறைவு பெற்ற நிலையில், அங்குள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்
கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறையில் கடந்த மூன்று நாட்களாக இருந்து வந்த தியானத்தை பிரதமர் நரேந்திர மோடி நிறைவு செய்து உள்ளார். தனது 45 மணி நேர தியானம் நிறைவு பெற்ற நிலையில், அங்குள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.
2024 மக்களவைத் தேர்தலின் ஏழாவது மற்றும் இறுதி கட்ட வாக்குப் பதிவு, எட்டு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தேர்தல் இன்று நடைபெற்று வரும் நிலையில், பிரதமர் மோடி இன்று தனது மூன்றாவது நாள் தியானத்தை நிறைவு செய்தார். கடந்த மே மாதம் 30ஆம் தேதி அன்று தனது தியானத்தை பிரதமர் மோடி தொடங்கினார்.
’சூரிய அர்க்யா’ செய்த பிரதமர் மோடி:
19 ஆம் நூற்றாண்டின் தத்துவஞானி சுவாமி விவேகானந்தர் 1893 இல் சிகாகோவில் நடைபெற்ற உலக மதங்களின் பாராளுமன்றத்தில் இந்தியாவின் ஆன்மீகப் புகழை உலகிற்கு எடுத்துச் சென்றார். கன்னியாகுமரியில் 1970 ஆம் ஆண்டு துறவியின் நினைவாக இந்த நினைவிடம் கட்டப்பட்டது. அங்கு பிரதமர் மோடி தியானத்தில் ஈடுபட்டார்.
சூரிய உதயத்தின்போது, ''சூரிய அர்க்யா'' செய்த பின்னர் பிரதமர் மோடி தனது மூன்றாவது நாள் தியானத்தை இன்று (ஜூன் 1) காலையில் தொடங்கினார்.
சூரியனின் வடிவில் வெளிப்படும் கடவுளுக்கு வணக்கம் செலுத்துவதை உள்ளடக்கிய ஆன்மீகப் பயிற்சி தான் 'சூரிய அர்க்யா' என்ற சடங்கு. அதை பிரதமர் மோடி இன்று காலையில் விவேகானந்தர் பாறையில் செய்தார்.
பிரதமர் மோடி ஒரு பாரம்பரிய சிறிய பாத்திரத்திலிருந்து சிறிதளவு நீரைக் கடலில் காணிக்கையாக (அர்க்யா) ஊற்றி, தனது பிரார்த்தனை மணிகளை (ஜப மாலை) பயன்படுத்தி, பிரார்த்தனை செய்தார். காவி உடை அணிந்திருந்த பிரதமர் மோடி, சுவாமி விவேகானந்தர் சிலைக்கு மலர்த் தூவி மரியாதை செலுத்தினார்.
தியானத்தை நிறைவு செய்த பிரதமர்
பின்னர் பிரதமர் தனது 'ஜப மாலை'யுடன் மண்டபத்தைச் சுற்றி வந்தார். மூன்றாம் நாள் தியானம் சனிக்கிழமையான, இன்று பிற்பகல் 3 மணி அளவில் நிறைவடைந்தது.
பின்னர் விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து வெளியே வந்த மோடி படகு மூலம் திருவள்ளுவர் சிலையை அடைந்தார். அங்கு திருவள்ளுவர் சிலையில் பாதத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இன்று மாலை 6 மணி உடன் நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நிறைவடைய உள்ள நிலையில், பிரதமர் மோடி டெல்லி செல்கிறார்.
நாடாளுமன்றத் தேர்தல் 2024:
இந்தியாவில் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது.
முதல் கட்ட தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில் நடந்து முடிந்தது.
இரண்டாம் கட்ட தேர்தல் கடந்த ஏப்ரல் 26ஆம் தேதியும், மூன்றாம் கட்ட தேர்தல் கடந்த மே 7ஆம் தேதியும், மே 13ஆம் தேதி அன்று நான்காம் கட்ட தேர்தலும் நடந்து முடிந்தது.
வரும் மே 20ஆம் தேதி அன்று 5ஆம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவும், மே 25ஆம் தேதி அன்று 6ஆம் கட்ட வாக்குப்பதிவும் நடைபெற்ற முடிந்த நிலையில், ஜூன் 1ஆம் தேதியான இன்று இறுதி கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. ஜூன் 4ஆம் தேதி அன்று பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.