தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Pm Modi Message: 'சண்டை அது போன மாசம்.. இது இந்த மாசம்': பிரதமர் மோடி மாலத்தீவு அதிபர் முய்ஸுக்கு ரம்ஜான் வாழ்த்து!

PM Modi Message: 'சண்டை அது போன மாசம்.. இது இந்த மாசம்': பிரதமர் மோடி மாலத்தீவு அதிபர் முய்ஸுக்கு ரம்ஜான் வாழ்த்து!

Marimuthu M HT Tamil
Apr 11, 2024 12:49 PM IST

PM Modi Message: ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸுவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸுவுடன் பிரதமர் நரேந்திர மோடி
மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸுவுடன் பிரதமர் நரேந்திர மோடி

ட்ரெண்டிங் செய்திகள்

இதுகுறித்து மாலத்தீவில் உள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், " ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, இந்தியப் பிரதமர் திரு நரேந்திர மோடி மாலத்தீவு அதிபர் டாக்டர் முகமது முய்ஸு, மாலத்தீவு அரசு மற்றும் மக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்தார்" என்று குறிப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையில் பிரச்னைகள் வலுத்தன.  மாலத்தீவு அமைச்சர்கள் சிலர், இந்தியாவை விமர்சித்தனர். இந்தியப் பிரதமர் லட்சத்தீவு சுற்றுலா சென்றதோடு மட்டுமல்லாமல், லட்சத்தீவு சுற்றுலாவை ஆதரியுங்கள் என்றார்.  இதனால் மாலத்தீவுக்கு சுற்றுலா செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்தது. 

அதன்பின், மாலத்தீவு அதிபர், சீன அதிபரை சந்தித்தார். இருந்தாலும் இரு நாடுகளுக்கு இடையே உறவில் சிக்கல் இருந்தது. சமீபத்தில் தான், இந்திய - மாலத்தீவு நாடுகளுக்கு இடையிலான நிர்வாக ரீதியிலான சர்ச்சைகளுக்கு மத்தியில், அத்தியாவசியப் பொருட்களை மாலத்தீவுக்கு ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதித்தது. பின், இந்தியாவுக்கு மாலத்தீவு நன்றி தெரிவித்தது. 

இந்நிலையில் தான், "ரம்ஜான் பாரம்பரிய உற்சாகத்துடன் கொண்டாடும்போது, உலகெங்கிலும் உள்ள மக்கள் இரக்கம், சகோதரத்துவம் மற்றும் ஒற்றுமை ஆகியவற்றின் மதிப்புகளை நினைவூட்டுகிறார்கள். அவை நாம் அனைவரும் விரும்பும் அமைதியான மற்றும் உள்ளடக்கிய உலகத்தை உருவாக்குவதில் அவசியம்"என்ற வாழ்த்துச் செய்தியை பிரதமர் மோடி, மாலத்தீவுக்கு பகிர்ந்துள்ளார். 

மாலத்தீவு -  இந்தியப் பிரச்னையின் பின்னணி:

மேலும், சீனாவுக்கு நெருக்கமானவராகக் கருதப்படும் மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸு கடந்த ஆண்டு பதவியேற்றதிலிருந்து இந்தியாவுக்கும் மாலத்தீவுகளுக்கும் இடையிலான உறவுகள் மோசமடைந்துள்ளன. ஆட்சிக்கு வந்தவுடன் அவர் எடுத்த முதல் வாக்குறுதிகளில் ஒன்று, மாலத்தீவின் பரந்த கடல் எல்லையில் ரோந்து செல்ல அங்கு நிறுத்தப்பட்டிருந்த இந்திய பாதுகாப்புப் படையினரை வெளியேற்றுவதாகும்.

துணை அமைச்சர் உட்பட சில மாலத்தீவு அமைச்சர்கள் இந்தியாவை குறிவைத்து இனவெறி கருத்துகளை தெரிவித்ததாலும், லட்சத்தீவை சுற்றுலா தலமாக மேம்படுத்துவதற்கான பிரதமர் மோடியின் முயற்சியை கேலி செய்ததாலும் இந்த ஆண்டு ஜனவரியில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் கடும் மோசமடைந்தன. இந்த கருத்துகள் சமூக ஊடகங்களில் பிரபலங்கள் உட்பட பல இந்தியர்களைத் தூண்டியது. அவர்கள் மாலத்தீவு தேசத்தை புறக்கணிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தனர்.

கடந்த மாதம், மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸு, அவரது இந்திய எதிர்ப்புத்தன்மையை மீண்டும் அதிகரித்தாகத் தெரிகிறது. அதன்படி, அனைத்து இந்திய ராணுவ சிப்பாய்களும் இந்தியப் பெருங்கடல் தீவுக்கூட்டத்தை விட்டு வெளியேற மே 10 வரை காலக்கெடு விதித்ததாக கூறப்படுகிறது. இதனால், மே 10-ம் தேதிக்குள் 89 இந்திய ராணுவ வீரர்கள் வெளியேற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது ஒருபுறம் போய்க்கொண்டிருக்க, இந்தியா நல்லுறவினை மேம்படுத்தும் முயற்சியில் மாலத்தீவு மக்களுக்கு ரம்ஜான் வாழ்த்துகளைக் கூறியுள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம். என்ன நடக்கிறது என்பதை!

IPL_Entry_Point

டாபிக்ஸ்