Bangalore Opposition Meet: ’NDA-வுக்கு பாஜக புத்துயிர் அளிக்க பாட்னா கூட்டமே காரணம்’ பெங்களூருவில் ஜெய்ராம் ரமேஷ் பேட்டி
”கூட்டணிக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி என்ற அதே பெயரைப் பயன்படுத்துவதா அல்லது புதிய பெயரை உருவாக்குவதா என்பது உள்ளிட்ட அனைத்து விஷயங்களிலும் எதிர்க்கட்சிகள் விரிவாக விவாதிக்கும்”
பாஜகவுக்கு எதிரான எதிர்க்கட்சிகள் கூட்டம் பெங்களூருவில் இன்று மாலை தொடங்கிய நிலையில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை இந்திய அரசியல் சூழ்நிலையில் ஒரு மாற்றமாக இருக்கும். பிரதமர் நரேந்திர மோடிக்கு திடீரென தேசிய ஜனநாயக கூட்டணி நினைவுக்கு வந்துள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு புத்துயிர் கொடுக்க பாஜக முயற்சி நடக்கிறது. கடந்த காலங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி குறித்து பேசாத பாஜக தற்போது திடீரென தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது. பாட்னாவில் நடைபெற்ற எதிர்கக்ட்சிகள் கூட்டத்தின் விளைவுதான் இதற்கான காரணம் என்று ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.
அரசியல் சாசனத்தை பாதுகாக்கும் சக்திகளுடன் இருக்கப்போகிறோமா? அல்லது அரசியல் சாசனத்தை தாக்கும் கட்சி உடன் இருக்கப்போகிறோமா என்பதை அனைத்து கட்சிகளும் முடிவு செய்ய வேண்டும் என்றும் ரமேஷ் கூறினார்.
இந்த செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், இந்த ஆட்சி முற்றிலும் தோல்வியடைந்து, பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஏமாற்றியவர்களுக்கு நேரம் வரும்போது மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். 26 எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக முன்னோக்கி நகர்ந்து மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்கவும், இந்த சர்வாதிகார அரசின் நடவடிக்கைகள் குறித்த கவலைகளை நிவர்த்தி செய்யவும் இங்கு வந்துள்ளனர் என வேணுகோபால் தெரிவித்தார்.
இந்த இரண்டாவது சந்திப்பில் எதிர்காலத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை இந்தக் கூட்டத்தில் முடிவு செய்வோம். நாடாளுமன்ற கூட்டத்தொடர் வரும் ஜூலை 20ஆம் தேதி தொடங்குகிறது, அதற்கான வியூகத்தையும் எதிர்க்கட்சிகள் வகுக்கும் என்றார்.
கூட்டணிக்கு யார் தலைவர் என்ற கேள்விக்கு வேணுகோபால், "எங்களிடம் போதுமான தலைவர்கள் உள்ளனர், பல்வேறு பதவிகளில் தங்கள் திறமையை நிரூபித்துள்ளனர். நீங்கள் தலைவரைப் பற்றி கவலைப்பட வேண்டாம், நாட்டின் நிலையைப் பற்றி கவலைப்படுங்கள்" என்றார்.
பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்ற வெற்றிகரமான கூட்டத்திற்குப் பிறகு இன்று நடைபெறும் இரண்டாவது எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் இந்தியா முழுவதிலும் இருந்து 26 அரசியல் கட்சிகள் பங்கேற்றுள்ளது என்று வேணுகோபால் கூறினார்.
கூட்டணிக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி என்ற அதே பெயரைப் பயன்படுத்துவதா அல்லது புதிய பெயரை உருவாக்குவதா என்பது உள்ளிட்ட அனைத்து விஷயங்களிலும் எதிர்க்கட்சிகள் விரிவாக விவாதிக்கும் என்றும் அவர் கூறினார்.