இலவச சட்ட உதவி மற்றும் ஆதரவு வழங்குவதே நோக்கம்..தேசிய சட்ட சேவைகள் தினம் பற்றி தெரிந்த கொள்ள வேண்டிய விஷயங்கள்
நலிந்த பிரிவினருக்கு இலவச சட்ட உதவி மற்றும் ஆதரவை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு தேசிய சட்ட சேவைகள் தினம் ஆண்டுதோறும் நவம்பர் 9ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நாள் சட்டத்துக்கும், சட்ட உதவி தேவைப்படுபவர்களுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது.
நீதியை அணுகுவதில் சமமான முக்கியத்துவத்தை பெறுவதற்கும், ஒதுக்கப்படும் சமூகங்களுக்கு அதிகாரம் அளிப்பதை வலியுறுத்தும் விதமாகவும் தேசிய சட்ட சேவைகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்த நாள் சட்ட விழிப்புணர்வை ஊக்குவிப்பதற்கும், அனைத்து குடிமக்களுக்கும், குறிப்பாக விளிம்புநிலை சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்வதற்கும் ஒரு தளமாக செயல்படுகிறது.
பல்வேறு முன்முயற்சிகள் மற்றும் திட்டங்களின் மூலம், இந்த நாள் தனிநபர்களுக்கு அவர்களின் சட்ட உரிமைகள் பற்றிய அறிவை வலுப்படுத்த முயற்சிக்கிறது. மிகவும் சமமான சமூகத்தை வளர்ப்பதற்கு வழிமுறைகளை ஊக்குவிக்கிறது.
தேசிய சட்ட சேவைகள் தினத்தின் முக்கியத்துவம் வெறும் அனுசரிப்புக்கு அப்பாற்பட்டது; இது இலவச சட்ட உதவி கிடைப்பது குறித்து பொது விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.
தேசிய சட்ட சேவைகள் தினம் வரலாறு மற்றும் முக்கியத்துவம்
கடந்த 1995ஆம் ஆண்டு இந்திய உச்ச நீதிமன்றம் தேசிய சட்ட சேவைகள் தினத்தை தொடங்கியது. சமூகத்தின் நலிந்த பிரிவினருக்கு இலவச சட்ட உதவி மற்றும் ஆதரவை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ள இந்த நாள் உருவாக்கப்பட்டது.
அதன்படி, அப்போது உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதியாக இருந்த தலைமை நீதிபதி ஏ.எஸ் ஆனந்த் அழைப்புக்கு இணங்க ஆண்டுதோறும் நவம்பர் 9 ஆம் தேதி அனைத்து சட்ட சேவைகள் அதிகாரிகளாலும் "சட்ட சேவைகள் தினமாக" கொண்டாடப்படுகிறது.
மாநில சட்ட சேவைகள் அதிகாரிகளின் (NALSA) முதல் வருடாந்திர கூட்டம், செப்டம்பர் 12, 1998 அன்று புது தில்லியில் நடந்தது, மேலும் இந்தியாவில் நடைமுறையில் உள்ள திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் சட்ட உதவி திட்டங்களை வலுப்படுத்தவும் சீரமைக்கவும் முடிவுகளை இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்டது.
ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கு அதிகாரம் அளிப்பது, நீதிக்கான சம உரிமையின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுவது மற்றும் பொருளாதார குறைபாடுகள் காரணமாக யாரும் சட்டப்பூர்வ பிரதிநிதித்துவத்தை இழக்கக்கூடாது என்று வாதிடுவதை இந்த நாள் வலியுறுத்துகிறது.
தேசிய சட்ட சேவைகள் நாளில் என்ன செய்யலாம்
NALSA என்று அழைக்கப்படும் தேசிய சட்ட சேவைகள் ஆணையம் மற்றும் பிற சட்ட அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்பட்ட சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், பட்டறைகள் மற்றும் முகாம்கள் போன்ற பல்வேறு நடவடிக்கைகளில் பங்கேற்கலாம்.
தேசிய சட்ட சேவைகள் தினம், சட்டத்துக்கும், சட்ட உதவி தேவைப்படுபவர்களுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது.
இலவச சட்ட சேவைகள்
சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் கூற்றுப்படி, சமூகத்தின் ஏழை மற்றும் நலிந்த பிரிவினருக்கு இலவச சட்ட உதவி வழங்குவதற்காக பல அதிகாரங்கள்/நிறுவனங்கள் நிறுவப்பட்டுள்ளன. கிராண்ட்-இன்-எய்ட் மற்றும் பிற தளவாட ஆதரவு வடிவில் சட்ட சேவைகள் அதிகாரிகள்/நிறுவனங்களை வலுப்படுத்த அரசாங்கம் அனைத்து ஆதரவையும் வழங்குகிறது.
தேசிய சட்ட சேவைகள் ஆணைய இணையதளத்தின்படி, சமூகத்தின் நலிந்த பிரிவினருக்கு இலவச சட்ட சேவைகளை வழங்குவதற்கும், சச்சரவுகளை சுமுகமாகத் தீர்ப்பதற்கு லோக் அதாலத்களை நடத்துவதற்கும், 1987ஆம் ஆண்டு சட்ட சேவைகள் அதிகாரச் சட்டம், தேசிய சட்ட சேவைகள் ஆணையம் (NALSA) உருவாக்கப்பட்டது.
ஒவ்வொரு மாநிலத்திலும், NALSA இன் கொள்கைகள் மற்றும் வழிகாட்டுதல்களை நடைமுறைப்படுத்தவும், மக்களுக்கு இலவச சட்ட சேவைகளை வழங்கவும் மற்றும் மாநிலத்தில் லோக் அதாலத்களை நடத்தவும் மாநில சட்ட சேவைகள் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
டாபிக்ஸ்