All india congress president: தலைவர் பொறுப்பு ஏற்ற மல்லிகார்ஜுன கார்கே
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே தேர்வான நிலையில், தில்லியில் அவர் இன்று பொறுப்பேற்று கொண்டார்.
கடந்த 17ஆம் தேதி அகில இந்திய காங்கிரஸ் கட்சி பதிவிக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் தலைவர் பதிவிக்காக கட்சியின் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜூனா கார்கே, சசி தரூர் ஆகியோர் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் 7 ஆயிரத்து 897 வாக்குகள் பெற்று பெரும்பான்மையோடு வெற்றி மல்லிகார்ஜுன கார்கே பெற்றார். மற்றொரு வேட்பாளரான சசி தரூர் 1,000 வாக்குகள் பெற்றிருந்தார்.
இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக மல்லிகார்ஜுன கார்கே இன்று பொறுப்பு ஏற்றுக்கொண்டார். தில்லியில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் கார்கேயிடம், கட்சியின் தேர்தல் பிரிவு தலைவரான மதுசூதனன் மிஸ்திரி வழங்கினார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்பட மூத்த தலைவர்கள் முன்னிலையில் கார்கே கட்சி தலைவராக பொறுப்பேற்று கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் தலைவருக்கான பொறுப்புகள் அனைத்தையும் சோனியா காந்தி, கார்கேயிடம் ஒப்படைத்தார். இதையடுத்து நேரு குடும்பத்தை சார்ந்திடாத ஒருவர் காங்கிரஸ் கட்சியின் தலைவராக 22 ஆண்டுகள் கழித்து பொறுப்பேற்றுள்ளார்.
முன்னதாக, தலைவர் பதவி பொறுப்பேற்பதற்கு முன்பு கட்சியின் முன்னாள் தலைவர்களான ஜவஹர்லால் நேரு, லால் பகதூர் சாஸ்த்ரி, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோரின் நினைவிடங்களுக்கு சென்று கார்கே அஞ்சலி செலுத்தினார்.