Karnataka Election Results: கர்நாடகாவின் புதிய முதலமைச்சர் யார்? - சித்தராமயா சொன்ன பதில்
காங்கிரஸ் கட்சி முன்னிலையில் உள்ள நிலையில் அடுத்த முதல்வர் டி.கே.சிவக்குமாரா? சித்தராமையாவா? என கேள்வி எழுந்துள்ளது.
கர்நாடகாவில் 134 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் உள்ளது மொத்தமுள்ள 224 தொகுதிகளில் ஆட்சி அமைக்க 113 தொகுதிகளில் பெரும்பான்மை பெறுவது அவசியம், தேவையான 113 தொகுதிகளை விட கூடுதலாக 20 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது. பாஜக 64 இடங்களிலும், மதசார்பற்ற ஜனதாதளம் 22 இடங்களிலும், மற்றவர்கள் 4 இடங்களிலும் முன்னிலையில் உள்ளனர்.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா, புதிய முதலமைச்சர் யார் என்பதை புதியதாக தேர்வு செய்யப்படுள்ள எம்.எல்.ஏக்கள் முடிவு செய்வார்கள் என சித்தராமையா தெரிவித்துள்ளர்.
தொடர்ந்து பேசிய அவர், “130 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம். இது காங்கிரஸ் கட்சியின் மாபெரும் வெற்றி. கர்நாடக மக்கள் பாஜக ஆட்சியில் அலுத்துவிட்டதால் மாற்றத்தை விரும்பினர். ஆபரேஷன் ‘கமலா’ என்ற பெரில் பா.ஜ.க அதிக பணம் செலவழித்தது. ராகுல் ஜியின் பாதயாத்திரை, கட்சியினரை உற்சாகப்படுத்த உதவியது” என்றார்
இந்த வெற்றி நரேந்திர மோடி, அமித் ஷா மற்றும் ஜேபி நட்டாவுக்கு எதிரான மக்களின் ஆணை என்ற அவர், பிரதமர் 20 முறை கர்நாடகா வந்தார்; கடந்த காலத்தில் எந்த பிரதமரும் இப்படி பிரச்சாரம் செய்யவில்லை, ஆனால் மக்கள் காங்கிரஸ் கட்சியை தேர்வு செய்துள்ளதாக கூறினார்.
கர்நாடக தேர்தல் முடிவு, லோக்சபா தேர்தலுக்கான படிக்கல் என்ற சித்தராமையா, பாஜக அல்லாத அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து பாஜகவை தோற்கடிப்பார்கள் என்பதை நம்புவதாகவும், ராகுல் காந்தி பிரதமராக வரவேண்டும் எனவும் கூறினார்.